1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒக்சிஜன் தட்டுப்பாடு நிலவிய காலத்தில், ஒக்சிஜனின்றி எவ்வளவு நோயாளிகள் தாக்குப்பிடிப்பார்கள் என்பதை அறிய சோதனை நடத்தியதாக அதன் உரிமையாளர் பேசியதாக வெளியான காணொளி சர்ச்சையாகியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் அரின்ஜே ஜெயினின் குரல் என நம்பப்படும் காணொளி தனியார் ஊடக ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. அதில் அரின்ஜே ஜெயினின் உருவம் தெரியவில்லை. அவரது குரல் மட்டுமே கேட்கிறது. அந்த ஆடியோவில், "உத்தர பிரதேச முதல்வராலேயே மாநிலத்துக்கு தேவையான ஒக்சிஜனை பெற முடியவில்லை.

எனவே, நோயாளிகளை விரைவாக டிஸ்சார்ஜ் செய்யுங்கள். மோதி நகரில் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் நோயாளிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற தொடங்கினோம். சிலர் நாங்கள் சொல்வதை கேட்டனர். சிலர் மருத்துவமனையில் புறப்பட தயாராக இல்லை. எனவே. ஒத்திகை போன்ற ஒன்றை நடத்த முடிவெடுத்தேன். அதன் மூலம் யாருக்கெல்லாம் ஒக்சிஜன் தேவை, யாருக்கெல்லாம் தேவைப்படாது என்பதை அறிய திட்டமிட்டோம்.

அதை நாங்கள் செய்தது யாருக்கும் தெரியாது. காலை 7 மணிக்கு நடந்த ஒத்திகையின் அங்கமாக ஒக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வந்த 22 நோயாளிகளை அடையாளம் கண்டோம். அவர்களுக்கான ஆக்சிஜனை 5 நிமிடங்களுக்கு துண்டித்தோம்.

அதில் பலரது உடல் நீல நிறமாக மாறியது. அவர்கள் எல்லாம் ஒக்சிஜன் தீவிர தேவை உடையவர்கள் என கண்டறிந்தோம்," என்று பேசுகிறார்.

ஒன்றரை நிமிடம் ஓடக்கூடிய அந்த காணொளி, ஏப்ரல் 28ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த காணொளியில் இடம்பெற்ற குரல் பதிவு, பிற தனியார் ஊடகங்களில் திங்கட்கிழமை வைரலானது. இது தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் பிரபு என். சிங், காணொளியில் கூறப்பட்ட நாளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

எனினும், அந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறோம்," என்று கூறினார். கடந்த ஏப்ரல் 26,27 ஆகிய திகதிளில் குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில் ஏழு கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

எனவே, ஊடகங்களில் வெளிவருவது போல அந்த மருத்துவமனையில் 22 பேர் ஒக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்ததாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பிரபு என். சிங் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி