1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி தேர்தலில் தோல்வி கண்டதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் பிரபல்யமான எழுச்சியைக் கண்டது போன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள ரணில் விக்கிரமசிங்கவால் மீள் எழுச்சி அடைய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் வெளியுறவுகளுக்கான சிரேஷ்ட ஆலோசகரும், இராஜதந்திரியுமான கலாநிதி.தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியலுக்கான உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் அவரது வருகையால் தற்போது பிரதான எதிர்க்கட்சியான இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியிடையே குழப்பமான நிலைமைகள் தோன்றியிருப்பதாக தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ள நிலையில் கருத்து வெளியிடுகையில் தயான் ஜயதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும்,தெரிவிக்கையில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை இலங்கையின் ஒட்டுமொத்த மக்களும் நிராகரித்திருந்தனர். அதுமட்டுமன்றி, ஐ.தே.க.வின் கோட்டையென்று கூறப்படும் கொழும்பில் அம்பாந்தோட்டையில் இருந்த வருகைதந்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை மக்கள் வெற்றிபெறச் செய்தனர்.

இந்தச் செயற்பாடானது ஐ.தே.கவையும், கொழும்பில் போட்டியிட்ட அதன் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே பொருளாகும். அவ்வாறு மக்களால் நிராகரிக்கப்பட்டு, மக்கள் மத்தியிலான பிரபல்யத்தைக் கொண்டிருக்காத ஒருவர் பாராளுமன்றத்திற்கு மீண்டும் வருகை தருவதால் சாதிக்கப்போவது எதுவுமில்லை.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின்னர் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் பிரபல்யமாக அடைந்த எழுச்சியைப் போன்று ரணிலால் எழுந்து நிற்க முடியாது என அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் ரணிலின் பாராளுமன்ற வருகையானது எந்தவொரு வகையிலும் தாக்கம் நிறைந்ததாக இருக்கப்போவதில்லை.

வெறுமனே சபை அமர்வுகளில் ஆளும் தரப்பு அவரைப் பயன்படுத்தி குழப்பங்களை தோற்றுவிப்பதற்கு மட்டுமே வழிவகுக்கப்போகின்றது. அத்துடன் இவரது வருகையால் எதிர்க்கட்சியினுள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அவ்வாறு குழப்பமடைய வேண்டிய எந்த அவசியமும் எதிர்க்கட்சிக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், ரணிலின் நிலைமையானது இவற்றுக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. அவரால் தனி நபராக எதனையும் சாதிக்க முடியாது. மக்கள் நிராகரித்த பின்னரும் அவர் மீண்டும் பாராளுமன்றம் வருகின்றமையானது வெட்கப்பட வேண்டியது எனவும் கலாநிதி.தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி