1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தொற்று நோய் நிலைமையை பயன்படுத்தி பாராளுமன்றத்திற்கோ, மக்களுக்கோ தெரியாமல் சட்டமூலங்கள் தயாரிக்கப்படுவதாக முன்னிலை சோஷலிஸக் கட்சி கூறுகிறது.

தற்போதைய  தொற்று நோய் ஆபத்திற்கு மத்தியிலும் கல்வியை விற்கும் திட்டத்திற்கு தேவைப்படும் வகையில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேறறிக்கொள்ள அரசாங்கம் தயாராவதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட  கூறுகிறார்.

நுகேகொடயில் உள்ள முன்னிலை சோசலிச கட்சியின் அலுவலகத்தில் கடந்த ஜூன் 17ம் திகதி நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தொற்று நோயை பயன்படுத்தி துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொண்டதைப் போன்று, மக்களுக்கு தெரியாமலும், மாணவர் சமூகம், பெற்றோர், விரிவுரையாளர்கள் மற்றும் சாதாரண பொதுமக்களின் கருத்துக்களை விவாததத்திற்கு எடுக்காமலும் இப்படியொரு சட்டமூலத்தை தன்னிச்சையாக நிறைவேற்றிக் கொள்வதை கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறினார்.

ஊடகச் சந்திப்பில் அவர் கூறிய கருத்துக்கள்,

“கடந்த மார்ச் 26ம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் என்ற பெயரில்  ஒரு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  எமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, ஜூன் 22ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு அதன் பின்பு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடத் தயாராக உள்ளது. இலங்கை பூராவும் ஏற்கனவே பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்கள் யாவும் ஜூன் 21 வரை நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிரவும், 21ம் திகதிக்குப் பின்னரும் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படுமென வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. பயணக் கட்டுப்பாடு காரணமாக மக்கள் எதிர்க்கும் ஒரு விடயம் குறித்து பேசப்படுவதற்கான வாய்ப்பு இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

தொற்று நோயை காரணம் காட்டி கட்டுப்பாடுகளை போட்டுக் கொண்டு பாராளுமன்றத்தில் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றத் தயாராகிறார்கள்.  மக்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக தொற்று நோயை பயன்படுத்துகிறார்கள். தொற்று நோயை ஒரு வசந்தமாக ஆக்கிக் கொண்டு சமூக விரோத சட்டங்களை நிறைவேற்ற முயல்கிறார்கள். கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் என்பது பாரதூரமான ஒரு பிரச்சினை. பொதுவாக சர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பீடம் எனக் கூறும் போது அந்தப் பெயரிலுள்ள பாதுகாப்புக் கல்லூரி எமக்கு நினைவிற்கு வருகிறது. பாதுகாப்பு படைகளில் உள்ளவர்களுக்காகவும், பாதுகாப்புப் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுபவர்களுக்கும் மேலதிக கல்வி வழங்குவதற்காகவே 1981 இல.68 கொண்ட சட்டமூலத்தினால் இந்த கல்விப் பீடம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது அது மாற்றப்பட்டு வேறு நபர்களுக்கும் பணத்திற்கு  கல்வி வழங்கப்படுகிறது. இது பல்கலைக் கழகமாக ஆக்கப்பட்டுள்ளது. இங்கு பட்டம் பெறுவதற்காக மாணவ, மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். அங்கு கற்பவர்கள் ஒரு தொகை பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து இராணுவச் சேவையிலிருந்து விலகுகிறார்கள். இந்த உபாயத்தை பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் பட்டம் வழங்கப்படுகிறது. அரசாங்கத்திற்குச் சொந்தமான தனியார் பல்கலைக் கழகமாகவே தற்போது இது செயற்படுகிறது. இதற்குத் தேவையான ஒதுக்கீடுகள் புதிய சட்டமூலத்தினால்  நேரடியாகவே தயாரிக்கப்பட்டுள்ளன.

புதிய சட்டமூலத்தின் 4 (ஆ) உறுப்புறையில் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றும் ஆட்கள் மற்றும் வேறு ஆட்கள் என்று  உறுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு ஆட்கள் என்ற வரையறைக்குள் எந்தவொரு ஆளையும் இந்த பல்கலைக் கழகத்தில் சேர்த்துக் கொண்டு பணத்திற்கு கல்வி வழங்கும் சந்தர்ப்பம் உருவாக்கப்படுகிறது. பணத்திற்கு பட்டம் வழங்கும் உரிமை கூட இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. 2007 இலக்கம் 50 சட்டமூலத்தின் வாயிலாகவே இந்த உரிமை வழங்கப்பட்டது. பட்டம் வழங்கும் உரிமை வழங்கப்பட்டதன் பின்பு  இதில் மருத்துவப் பட்டம். பொறியியல் பட்டம் மற்றும் ஏனைய பட்டங்கள் வழங்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு வழங்கப்படும் பொறியியல் பட்டம்  இலங்கை பொறியியல் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்படுவதில்லை. ஆகவே, இங்கு பொறியியல் பட்டம் பெறுவோர் இலங்கையில் பொறியியல் நிபுணர்களாக பதிவு செய்ய முடியாது. இங்கு மருத்துவ பட்டம் பெறுவோரும் மருத்துவர்களாக பதிவு செய்து கொள்ள இலங்கை மருத்துவ சபையின் அனுமதி இருக்கவில்லை. இந்த நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் 2014 இல.06 மருத்துவ கட்டளைச் சட்டத்தில் பலவந்தமாக திருத்தம் கொண்டு வந்து இந்த கொத்தலாவல மருத்துவ பீடத்திலிருந்து வெளியேறுபவர்களை மருத்துவர்களாக ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்போது, இரத்மலானையில் அமைந்துள்ள ​ஜோன் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியைத் தவிர நாடு பூராவும் தனியார் பல்கலைக் கழகங்களின் கிளைகளை அமைக்கவும், அதற்கான தீர்மானங்களை எடுக்கவும்  படைத்துறைக்கு அதிகாரம் கிடைக்கக் கூடியவாறு சட்டமூலத்தில் புதிய திருத்தங்களை கொண்டுவர தயாராகிறார்கள்.

இதே போன்று 2018 ஏப்ரல் 11ம் திகதி ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்திற்கு நாடு பூராகவும் கிளைகளை அமைக்க அனுமதிக்கும், பணத்திற்கு பட்டம் வழங்கும் சட்டமூலத்தை செயற்படுத்தத் தயாராகும் வேளையில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து அதனை தோற்கடித்தார்கள். நல்லாட்சி அரசாங்கம் இந்த சட்டமூலத்தை கொண்டுவரும் போது, அக்காலத்தில் தவறு தவறு எனக் கூறிக் கொண்டிருந்த இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் இப்போது சட்டமூலத்தை முழுமையாகவே கொண்டுவந்துள்ளார்கள். மார்ச் 26ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தைப் பார்த்த பின்னர்தான் அது 2018 நல்லாட்சி அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்ட சட்டமூலம் என்பது தெரிந்தது. பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை. இந்த சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் 1981 இல 68 சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரி இதன் மூலம் ரத்துசெய்யப்பட்டு புதிய பல்கலைக் கழகமொன்று நிறுவப்படுகிறது. இந்த புதிய சட்டத்தின் நோக்கம் என்ற வகையில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகம் என்ற பெயரில் நாடு பூராவும் பல்கலைக் கழகங்கள், பல்கலைக்கழக பீடங்கள், கல்வி நிறுவனங்கள் நிறுவ அனுமதி வழங்கப்படுமென்று 5 மற்றும் 7ம் உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நாடு பூராவும் பட்டங்கள் விற்பதற்கான அதிகாரம் கிடைக்கிறது.

அதேபோன்று இதில் 5 (ஊ) உறுப்புரையின்படி, வெளிநாட்டு பல்கலைக் கழகம் அல்லது உள்நாட்டு பல்கலைக் கழகங்களுடன் செயற்பட அவற்றிற்கு அனுமதி வழங்கப்படுமென உறுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ​அதாவது, தற்போது இலங்கையில் உள்ள உயர்கல்வி அமைச்சின் அனுமதியின்றியும், பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவின் அனுமதியின்றியும் சில கல்வி நிறுவனங்கள் கம்பனிகள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, தனியார் பல்கலைக் கழகங்களாக செயற்படுகின்றன. இந்த தனியார் பட்டக் கடைகளுக்கு சட்டபூர்வ தன்மையை வழங்குவதற்காக கொத்தலாவல பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்து.

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் கிளைகளை இலங்கையில் அமைக்க கடந்த காலம் பூராவும​ முயற்சிகள் எடுக்கப்பட்டன. உதாரணமாக இந்தியாவின் அப்பலோ நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட பட்டக் கடைகள் திறக்க முயற்சிக்கப்பட்டது. விக்னன் நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனஙகளை திறக்க முயற்சிக்கப்பட்டது. சமீபத்தில் எபர்டீனுடன் இணைந்ததாகக் கூறி பட்டக் கடையொன்றை திறக்க முயன்றார்கள். அவற்றிற்கு எதிராக எழுந்த எதிர்ப்பு மற்றும் இலங்கை சட்டத்தின்படி விசேடமாக இலங்கை மருத்துவ சபை, இலங்கை பொறியியல் சபை போன்ற ஒழுங்குமுறை நிறுவனங்கள் இந்த பட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்ற நிலை உறுவானதனால் அவற்றை திறக்க முடியவில்லை. “சைட்டம்” நிறுவனத்திற்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் கண்டோம். சைட்டம் நிறுவனம் அமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதிலிருந்து வெளியேறுபவர்களை மருத்து சபை மருத்துவர்களாக ஏற்றுக் கொள்வதில்லை.

இப்போது, கொத்தலாவல பல்கலைக் கழகம் என்ற பெயரில் வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களின் பட்டம் விற்கும் கடைகளை திறக்கப் போகிறார்கள். இங்குள்ள பிரச்சினை என்னவென்றால், உயர் கல்வி தனியார்மயமாக்கப்படுவது மாத்திரமல்ல, உயர் கல்வி விடயத்தில் முடிவு செய்யும் அதிகாரம் இராணுவத்தின் கைக்கு சென்று விடும். இந்த சட்டம் செயற்படுவதாயிருந்தால் முடிவெடுக்கும் அமைப்பு எது என்பது குறித்து இந்த சட்டமூலத்தின் 2வது உறுப்புரையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் பல்கலைக் கழகங்களை எங்கே ஆரம்பிப்பது, பட்டம் வழங்கும் கடையொன்றுடன் சம்பந்தப்பட்டு அதை சட்டபூர்வமாக்குவதா, வெளிநாட்டு பட்டக் கடையொன்றை இலங்கையில் நிறுவுவதா என்பன குறித்து இந்த அமைப்பு தீர்மானிக்கும்.

இந்தச்  சபை இராணுவத்திரைக் கொண்டதாக இருக்கும். சட்டமூலத்தின் இரண்டாவது உறுப்புரைக்கமைய இந்தச் சபையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அதன் மேலதிக செயலாளர், பாதுகாப்பு படைத் தலைவர், இராணுவத் தளபதி, விமானப் படைத் தளபதி, கடற்படைத் தளபதி மற்றும் துணை வேந்தர் ஆகியோர் அடங்கியுள்ளனர். இங்கு துணைவேந்தர் எனக் குறிப்பிட்டாலும், சாதாரண புத்திஜீவி, வல்லுனர் என நினைக்க வேண்டாம். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பாதுகாப்புப் படைகளின் தலைவர்களில் ஒருவர் ஜனாதிபதியினால் பெயர் குறிப்பிடப்படல் வேண்டுமென சட்டமூலத்தின் 10 (1) உறுப்புரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏழு பேரையும் தவிர பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் ஒரு பிரதிநிதியும், திறைசேரிச் செயலாளரினால் பெயர் குறிப்பிடப்படும் ஒருவரும் நியமிக்கப்படுவர். இந்த 9 பேரில் 7 பேர் இராணுவ அதிகாரிகள். இது தொடர்பில் பல்கலைக் கழக மானிய ஆணைக்குழு எந்த தலையீடும் செய்ய முடியாது.

பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுதான் தற்போது பல்கலைக் கழகங்களை பதிவுசெய்கிறது. உயர் கல்வி நிறுவனங்களின் பட்டப் படிப்பிற்கான பாட விதானங்களை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவும், உயர் கல்வி அமைச்சுமே தீர்மானிக்கின்றன. இப்போது, பல்கலைக் கழக ஆணைக்குழுவின் அதிகாரங்கள் முழுவதும் ஆயுதப் படைகளின் கீழ் கொண்டுவரப்படுகிறது.   இது பல்கலைக் கழகங்களை மாத்திரமல்ல, பல்வேறு ஒழுங்குபடுத்தல் நிறுவனங்களை கலைப்பது சம்பந்தமாகவும் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. அதன்படிதான் புவியியல் சுரங்கப் பணியகத்திற்கு மாற்று அமைப்பொன்றை உருவாக்கப் பார்க்கிறார்கள். இதற்காகத்தான் இலங்கையின் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொடர்பில் மாற்று அமைப்பொன்று அமைக்கப்படவிருக்கிறது. இதற்காகத்தான் மத்திய வங்கியின் நிதிக் குழுவிற்கு’ கட்டுப்படாத வங்கிகளை நிறுவுவதற்கு துறைமுக நகர சட்டமூலத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

இந்த தனியார்மய நடவடிக்கைகளுக்குத் தடையாக இருக்கும் சகல ஒழுங்குபடுத்தல் நிறுவனங்களும் ஒழிக்கப்படும் அல்லது அதன் அதிகாரங்கள் வெட்டப்படும். இல்லையென்றால், அதே அதிகாரங்களைக் கொண்ட இன்னொரு நிறுவனம் அமைக்கப்படும். இதற்காக வேறு நிறுவனங்களுக்கு இராணுவத்தினர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சட்டமூலத்தின் 5 (A) உறுப்புரையின்படி 1978 இல.16 பல்கலைக் கழக சட்டமூலத்தில் 128வது உறுப்புரையில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதையும் தாண்டிச் சென்று இந்த அமைப்பினால் பட்டங்களையும் டிப்ளோமாவையும் வழங்க முடியுமென உறுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், இலங்கையில் உயர் கல்வி சம்பந்தமாக தீர்மானிப்பது அந்த பாடங்கள் சம்பந்தப்பட்ட நிபுணர்களோ, பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவோ, உயர் கல்வி அமைச்சோ அல்லது தற்போது பல்கலைக் கழகங்களில் உள்ள விரிவுரையாளர்களோ அல்ல. இந்த அமைப்பிற்கேற்ப இராணுவமே தீர்மானிக்கிறது.

சமீபத்தில் துணை வேந்தர் பதவிக்கு திறந்த பல்கலைக் கழகத்தினால் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட பெயர்களை ஜனாதிபதி தொடர்ந்து நிராகரித்தார். இதனால் விரிவுரையாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதிக்கு வேண்டியவாறு துணை வேந்தர்களை பெயர் குறிப்பிட முடியாது. இதற்கான ஒரு அமைப்பு பல்கலைக் கழகத்தில் உண்டு. அதற்குப் பதிலாக, பல்கலைக் கழக செயற்பாட்டுகளுக்கான சகல அதிகாரங்களும் படைத்துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு அமைப்பிற்கு கொடுக்கப்பட்டிருப்பதாக இந்த சட்டமூலத்தில் 19 (1) உறுப்புரையில் உறுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை பொறியியலாளர் நிறுவனம், கட்டிடக் கலைஞர்களின் நிறுவனம், தாதியர் சபை, மருத்துவர் சபை ஆகிய ஒழுங்குபடுத்தல் அமைப்புகள் எதுவும் சம்பந்தப்பட மாட்டாது. இலங்கையில் தொழில் நிபுணர்களாக வேண்டியது யார், அவர்களது உயர்தர பரீட்சையில் ஆகக் குறைந்த தகுதிகள் எவை, அவர்கள் கற்கும் பாடங்களின் தரங்கள் எவை, இறுதிப் பரீட்சையில் கிடைக்க வேண்டிய அறிவு மட்டங்கள் எவை என்பன குறித்து இராணுவமே தீர்மானிக்கும்.

இது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. சுகாதாரத் தறையினர் மேற்கொள்ள வேண்டிய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் இராணுவத் தளபதி தலையிடுகிறார். கல்வி விடயத்திலும் இதை நுழைவிக்கப் பார்க்கிறார்கள். நாடு பூராவும் தனியார் பல்கலைக் கழகங்களை அமைத்து வெளிநாட்டு பல்கலைக் கழகங்களையும் இலங்கையின் கல்விக் கடைகளையும் சம்பந்தப்படுத்தி இரத்மலானையில் மட்டுமல்ல, நாடு பூராவும் கல்வியை விற்கும் உயர்கல்வியை தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இதில் உள்ளது. 19 (1) டி உறுப்புரைக்கமைய தனியார் பாடசாலைகள் அமைக்கவும் இந்த படைத்துறை அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒருபுறம் கல்வி விற்பனைப் பொருளாக்கப்படுகிறது. மறுபுறம் கல்வி, உயர்கல்வியின் சகல துறைகளும் இராணுவமயமாக்கப்பட்டு வருகின்றன. அது மாத்திரமல்ல, இந்த சட்டமூலத்தின் 7வது உறுப்புரைக்கமைய அமைக்கப்படும் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள், பெற்றோர்கள் முகம் கொடுக்கும் ஒரு பிரச்சனைக்கு குறைந்த பட்சம் ஒரு ஆர்ப்பாட்டமாவது செய்ய முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

1978 இல. 16 பல்கலைக் கழக சட்டமூலம் என்பது ஒரு அடக்குமுறை சட்டம். இதற்கு கூடுதலான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.  பல்கலைக் கழக மாணவர்களின், கல்விசாரா ஊழியர்களின் பெற்றோர்களின், விரிவுரையாளர்களின் ஏதாவதொரு செயல் தேசிய பாதுகாப்பிற்கோ, தேசிய கொள்கைக்கோ ஆபத்தான தூண்டுதலாக உள்ளதென அமைச்சர் உணரும் பட்சத்தில் தேவையான எதையும் செய்ய இந்த அமைப்பிற்கு உத்தரவிடும் அதிகாரம் அமைச்சருக்கு இதில் உண்டு. அநேகமாக பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படுபவர் ஜனாதிபதி மற்றும் அவரது படைத்துறை ஜுன்டாவினால் உயர் கல்வி மற்றும் பாடசாலைக் கல்வி சம்பந்தமான சகல தீர்மானங்களும் எடுக்கப்படக் கூடிய நிலை உருவாகும்.

இது மியன்மாரல்ல, அதிகாரத்திலிருப்பது மிலிடர் ஜுன்டாவல்ல. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி இருக்கிறார். அவரது அமைச்சுதான் இந்த சட்டமூலத்தை தயாரித்துள்ளது. ஜனாதிபதியால் கையகப்படுத்திக் கொண்டுள்ள அமைச்சின் ஆலோசனைக் குழுவில் கடந்த 22ம் திகதி இந்த சட்டமூல் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளது.

தொற்று நோய்க்கு மத்தியில் இந்த சட்டமூலத்தை திருட்டுத்தனமாக நிறைவேற்ற முயலும் அரசாங்கத்தின் திட்டத்தை முன்னிலை சோஷலிஸக் கட்சி எதிர்க்கிறது. அதேபோன்று, தமது பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியின் வாயிலாக கல்விபெற எதிர்பார்த்திருக்கும் பெற்றோர்களுக்கு இந்த சட்டமூலத்தை எதிர்க்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். சமூகம் விசேடமாக கல்வியின் சுதந்திரத்தையும், தனியார்மயப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பையும் உணர்ந்து, அரசாங்கத்தின் இந்த தான்தோன்றித்தனமான கொள்கையை எதிர்க்குமாறு மாணவர்களையும், விசேடமாக  விரிவுரையாளர் சமூகத்தையும்  வேண்டிக்கொள்கிறோம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி