1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலருக்கு வேலையிழப்பு, தொழில் பாதிப்பு ஏற்பட்டு அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா பரவல் காரணமாக சுப நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் புகைப்படக் கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில், கடலூர் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர், அப்பகுதியில் 12 ஆண்டுகளாக ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டிலிருந்தே இவரது ஸ்டுடியோ தொழில் வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் மாற்றுத் தொழில் செய்ய முடிவு செய்து பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

சிவசங்கர்

குறிப்பாக சிவசங்கரின் மனைவி கொடுத்த யோசனையின் பேரில் இடியப்பம், கருப்பு இட்லி, வெண்ணெய் புட்டு, கொண்டைக் கடலை எனப் பாரம்பரிய உணவுகளை வீட்டில் தயார் செய்து, அதனை தான் நடத்தி வந்த ஸ்டுடியோவில் அவரது மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து வருகிறார்.

சிவசங்கர்

தற்போதுள்ள சூழலில், இதில் கிடைக்கும் வருமானம் அன்றாட குடும்பம் நடத்துவதற்கு பெரிதும் உதவுவதாக சிவசங்கர் கூறுகிறார்.

"என் அண்ணன் கலையரசன் இந்த ஸ்டுடியோ தொழிலில் என்னைவிட அதிக அனுபவம் உள்ளவர். அவரிடமிருந்து தான் இந்த தொழிலை கற்றுக்கொண்டேன். இதையடுத்து கடந்த 12 ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து இந்த ஸ்டுடியோ தொழில் செய்து வருகிறோம். கடந்த ஆண்டு முற்பகுதி வரை எங்கள் தொழில் நன்றாக சென்று கொண்டிருந்தது.

இடியாப்பம்

இடியப்பம்

சரியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தினர். அந்த நேரத்தில் அதிக முகூர்த்தங்கள் பதிவாகியிருந்தது. ஆனால் ஊரடங்கில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என்பதால் பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து முகூர்த்தங்களும் ஒவ்வொன்றாக ரத்தாகிவிட்டன. இப்படியே எங்களுக்கு ஒரு நிகழ்ச்சி கூட இல்லாத சூழல் ஏற்பட்டது," என்கிறார் சிவசங்கர்.

அதை தாண்டி கோயில்களிலும், வீடுகளிலும் சாதாரணமாக திருமணங்கள் நடைபெற்றன. சரியாக 10லிருந்து 20 நபர்கள் வரை பங்கேற்கும் அந்த நிகழ்ச்சியில் சொற்ப வருமானம் மட்டுமே கிடைத்ததாக அவர்‌ கூறுகிறார்.

"குறிப்பாக எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் குறைந்தபட்சம் 10 ஆயிரமாவது வருமானம் கிடைக்கும். ஆனால் அப்போது வெறும் 1000, 2000 ரூபாய் தான் மொத்தமாகவே கிடைக்க தொடங்கியது. இதனால் எங்களது வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

சிவசங்கர்

சிவசங்கர்

அன்றாட குடும்ப செலவிற்கு பணமில்லாமல், பள்ளியில் குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்த முடியாமல் மிகவும் கடினமாக இருந்தது. ஒவ்வொரு நாளையும் எப்படி கடப்பது, அடுத்த நாள் என்ன செய்வது என்று செய்வதறியாது வேதனையில் இருந்தோம்," என்றார்.

அப்படியே நாட்கள் செல்ல செல்ல படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் கொண்டுவரப்பட்டதை அடுத்து ஓரிரு நிகழ்ச்சிகள் வர தொடங்கின. இதனால் ஓரளவு கஷ்டத்திலிருந்து மீள்கின்ற நிலை வந்ததாக சிவசங்கர் தெரிவித்தார்.

"ஆனால் அண்மையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு படிப்படியாக அமல்படுத்த தொடங்கினர். எல்லாம் சரியாகி மீண்டு வரும் சூழலில், மறுபடியும் ஊரடங்கு அமல்படுத்தியது என்ன செய்ய போகிறோம் என்ற மிகுந்த அச்சத்திற்குத் தள்ளியது. கஷ்டப்பட்டு நீந்த முடியாத ஆழத்திலிருந்து மீண்டு வந்தவனை மறுபடியும் அதலபாதாளத்திற்குத் தள்ளிவிட்டது போலிருந்தது.

கடந்த ஆண்டிலிருந்தே ஸ்டுடியோ உரிமையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். குறிப்பாக என்னைப்போன்று பலர் இதிலிருந்து மீண்டு வருவதற்கு வழியில்லாமலும், வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமலும், குடும்பத்தை கவனிக்க முடியாமலும் மோசமான சூழலுக்கு ஆளாகினர். இதில் பெரும்பாலானோர் ஸ்டுடியோக்கு தேவையான அனைத்து உபகரணங்களை கடனுக்கு வாங்கி அதில் ஈட்டும் வருமானத்தில் அனைத்தையும் சமாளித்து வந்தனர். ஆனால் இந்த கொரோனா, கஷ்டப்பட்டு தொழிலில் நல்ல நிலைக்கு இருந்தவர்கள் அனைவரையும் தடம் தெரியாத அளவிற்கு அழித்துவிட்டது," என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் ஒரு ஊரடங்கு என்பது பேரதிர்ச்சியாக இருந்ததாக கூறுகிறார் சிவசங்கர்.

"இதனால் கடந்த காலத்தைப் போல எந்த நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. ஆனால் இதை சமாளித்து மீண்டு வருவதை தவிர வேறு வழி இல்லை என்பதை கடந்த ஆண்டு பட்ட கஷ்டத்திலேயே உணர்ந்து கொண்டேன். ஆகவே எதாவது செய்தால் மட்டுமே இந்த சூழலை சமாளிக்க முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது எனது மனைவியும் சும்மா இருக்காமல் வருமானத்திற்கு வேறு எதாவது மாற்றுத் தொழில் செய்யலாம் எனக் கூறினார். ஆனால் கையில் எந்த தொழிலும் இல்லாதபோது எதை நம்மால் செய்ய முடியும் என்று மனைவியிடம் கேட்டேன். அப்போது தான், எனக்கு இடியாப்பம், வெண்ணெய் புட்டு எல்லாம் செய்யத் தெரியுமே, அதைவைத்து எதாவது செய்ய முயற்சிப்போம் என்று எனது மனைவி கூறினார்.

ஆனால், இதுகுறித்து சந்தேகமும் அச்சமும் இருந்துகொண்டே இருந்ததாக சிவசங்கர் கூறுகிறார்.

ஸ்டுடியோ

ஸ்டுடியோ

"பாரம்பரிய உணவு வகைகள் என்பதால் உறுதியாக பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையை என்‌ மனைவி ஏற்படுத்தினார். இந்த கடினமான சூழலில், நம் குடும்பம் மட்டுமின்றி மேலும் மூன்று குடும்பத்தினருக்கும் வருமானம் கிடைக்க வழி செய்யமுடியும் என்பதால் இதனைச் செய்ய முடிவு செய்தேன்.

இதனைத் தொடர்ந்து முதலில் இடியாப்பம் செய்ய ஆரம்பித்தோம். அடுத்து வெண்ணெய் புட்டு செய்தோம். பின்னர் படிப்படியாக கருப்பு இட்லி, கேழ்வரகு புட்டு, ராகி அடை, கொண்டைக் கடலை உள்ளிட்டவை தயார் செய்ய தொடங்கினோம். கிட்டத்தட்டப் பாரம்பரிய உணவகம் போன்று உருவாகியது. இது ஆரோக்கியமான உணவு என்பதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது," என்கிறார் அவர்.

"இந்த தொழிலில் எனது மனைவி, அவரது அண்ணி, அக்கா என்று அனைவரும் ஒன்றிணைந்து செய்கின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த தொழில் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. எனது ஸ்டுடியோ தொழிலை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர சில காலம் ஆகும். அதுவரை இந்த பாரம்பரிய உணவு செய்யும் தொழிலை எனது மனைவியுடன் சேர்ந்து ஒன்றாக கவனித்து வருகிறேன். இந்த தொழில் எங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் எனது தொழில் சகஜ நிலைக்கு வந்த பிறகு எனது மனைவி இந்த தொழிலை முழுவதுமாக கவனித்து கொள்வார்," என்று கூறுகிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி