1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீபெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலைத் துறையை ஏமாற்றி போலி பட்டா மூலம் 200 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?

சென்னை - பெங்களூரு இடையே சாலைப் போக்குவரத்துக்காக `எக்ஸ்பிரஸ் ஹைவே' என்ற திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக 7,800 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், சென்னையில் இருந்து இரண்டரை மணிநேரத்தில் பெங்களூருவுக்குச் செல்ல முடியும் என இந்திய அரசு தரப்பு கூறுகிறது.

இதற்காக தமிழ்நாட்டில் 1,000 ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. அந்த வகையில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பீமன் தாங்கல் கிராமத்தில் 175 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக 83 பேருக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில், அரசாங்கத்துக்குச் சொந்தமான அனாதீனமான நிலங்களுக்கு மோசடியாகப் பட்டா பெற்று நெடுஞ்சாலைத்துறையில் இழப்பீடு பெற்றுள்ளதாக நவக்கொடி நாராயணன் என்பவர், நில நிர்வாக ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அந்தப் புகாரில் 7.5 ஏக்கர் நிலத்துக்கு மோசடியாகப் பட்டா பெற்றதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஆசிஷ் ஜெயின், மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா, அப்போதைய ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன், நிலவரித் திட்ட உதவி அலுவலர் இரா.சண்முகம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

இதுதொடர்பாக, நில நிர்வாக ஆணையரான ஐ.ஏ.எஸ் அதிகாரி பங்கஜ் குமார் பன்சால் நடத்திய நேரடி விசாரணையில் ஆசிஷ் ஜெயின் தரப்பினர் ஆஜராகவில்லை. இதனையடுத்து, மோசடி தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்ளுமாறு நில நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்தார். அதேநேரம், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 23.4.2021 அன்று ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் வெங்கடேசனும் புகார் மனு ஒன்றை அளித்தார்.

ஊழல்

அதில், ``காஞ்சிபுரம் மாவட்டம், பீமன் தாங்கல் கிராமத்தில் புல எண் 310/1ல் உள்ள 7.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்துள்ளனர். பீமன் தாங்கல் கிராமம் 310/1ல் உள்ள 7.5 ஏக்கர் நிலம் நிலவரித் திட்ட நிலப்பதிவேட்டில் `மேய்க்கால் நிலம்' எனப் பதிவாகியுள்ளது. பின்னர் நில உடைமை மேம்பாட்டுத் திட்ட (அ) பதிவேட்டில் `அனாதீனம்' எனப் பதிவாகியுள்ளது.

பின்னர் பட்டா எண் : 3501-ல் புதிய உட்பிரிவு எண் : 310/37ன்படி ஆசிஷ் ஜெயின் என்பவர் பெயரில் பட்டா பதிவாகியுள்ளது. இந்த நிலம் 1957 முதல் இந்த நிலத்தை அனுபவத்தில் வைத்திருந்த வேணுகோபால் என்பவரின் வாரிசுகளிடம் இருந்து 2004ஆம் ஆண்டு ஆசிஷ் ஜெயின் கிரயம் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்துக்குப் பொறுப்பு வகித்த திருவண்ணாமலை நிலவரித்திட்ட உதவி அலுவலரின் உத்தரவின்படி மேற்படி நிலம் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் நில எடுப்பு இழப்பீட்டுத் தொகையாக 7.5 ஏக்கர் நிலத்துக்கு 33 கோடி ரூபாயை ஆசிஷ் ஜெயின் பெற்றுள்ளார். போலியாக ஆவணங்களை சமர்ப்பித்து மதிப்புமிக்க அரசு நிலத்தினை பட்டா மாற்றம் செய்துள்ளது, மேற்படி உத்தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது,'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

காஞ்சி

காஞ்சி

இந்தச் சம்பவத்தில் ஆசிஷ் ஜெயின், திருவண்ணாமலை நிலவரித் திட்ட உதவி அலுவலர் (பொறுப்பு) இரா.சண்முகம், ஸ்ரீபெரும்புதூர் வட்டாச்சியராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் வட்டாச்சியர் வெங்கடேசன், `` மோசடியாகப் பெற்ற பட்டாக்களை ரத்து செய்துவிட்டோம். வருவாய்த் துறை ஆவணங்களில் உள்ளபடியே அவற்றையெல்லாம் பழையபடி அனாதீனமான நிலங்களாக மாற்றிவிட்டோம்" என்றார்.

இந்த வழக்கை காஞ்சிபுரம் மாவட்டக் குற்றப் பிரிவு பொலிஸார் விசாரித்து வந்த நிலையில், மோசடிப் பட்டா மூலம் 200 கோடி இழப்பீடு பெற்ற 83 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்குவது தொடர்பாக வங்கி அதிகாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரிந்துரை செய்தது.

இதையடுத்து, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத் துறையில் போலி பட்டா மூலம் 33 கோடி ரூபாயை மோசடி செய்ததாக ஆசிஷ் ஜெயின் என்கிற ஆசிஷ் மேத்தா, 3 கோடி ரூபாய் இழப்பீடு பெற்ற செல்வம் ஆகியோரை புதன்கிழமை மாலை காஞ்சிபுரம் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

பீமன் தாங்கல் நில மோசடி தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே குரல் எழுப்பி வரும் நவக்கொடி நாராயணனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` நெடுஞ்சாலைத்துறையில் இழப்பீட்டுக்காக மோசடி நடப்பதற்கு முன்னரே நான் புகார் கொடுத்தேன். இதனை மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் அரசாங்கப் பணமும் விரயமாகிவிட்டது. இந்த விவகாரத்தில் காஞ்சிபுரம் எஸ்.பி துரித நடவடிக்கையை எடுத்துள்ளார். இதுபோல் தவறு செய்ய நினைக்கும் அதிகாரிகளுக்கு இந்த விவகாரம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்" என்கிறார்.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. டாக்டர் சுதாகரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தொடர் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, அவர்கள் எந்தவகையில் எல்லாம் விதிகளை மீறியுள்ளனர் என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கையை துரிதப்படுத்த உள்ளோம்" என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி