1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜசீமின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யுமாறு கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களம் சமுகமளித்திருக்கவில்லை. இதனால் வழக்கு பின்போடப்பட்டுள்ளது.

அஹ்னாப் ஜசீம் சார்ப்பில் வாதாடும் சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர கூறுகையில், சட்டமா அதிபர் திணைக்களம் அல்லது பிரதிவாதிகள் சார்ப்பில் தோற்றும் தரப்பினர் ஜூலை 1ம் திகதி வியாழக்கிழமை நீதிமன்றத்திற்கு சமுகமளிக்காமையால் எதிர்வரும் ஜூலை 06ம் திகதிக்கு நீதிபதி வழக்கை ஒத்திவைத்துள்ளதாகக் கூறினார்.

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் அஹ்னாப் ஜசீம் 2017 வெளியிட்ட நவரசம் கவிதைதொகுப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் தீவிரவாத கருத்துக்களை பரப்புரை செய்வதாக குற்றஞ்சாட்டியே அவர் கைது செய்யப்பட்டார்.

ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலம் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த மாதம் அவரது சட்டத்தரணிக்குக் கூட அறிவிக்காமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள கவிஞர் அஹனாப் ஜசீமின் சட்டத்தரணியால் பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் சட்டமா அதிபருக்கு எதிராக ஏப்ரல் 16ம் திகதி (SC FRA 114/2021) அடிப்படை உரிமை வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Navarasam

தன்னிச்சையாக கைது செய்யப்பட்டமை, தடுத்து வைத்திருந்தமை மற்றும் சித்திரவதைக்கு ஆளாகாமலிருப்பதற்கான சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் உட்பட அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டும் மனுவில் அஹ்னாப் ஜசீமை விடுதலை செய்வதோடு 10 கோடி ரூபா இழப்பீடு உட்பட சில நிவாரணங்களையும் பெற்றுத் தருமாறு கோரப்பட்டுள்ளது.

ஐரோப்பிய அரசாங்கங்களின் கோரிக்கைகள்

Ahnaf UN

தனிமனித சுதந்திரத்தைத் தடுக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதால் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இரத்து செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

கடந்த மாதம், ஐரோப்பிய நாடுகளின் ஒரு குழு இலங்கை அரசாங்கம் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாஃப் ஜஸீமை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தது.

வழக்கு விசாரணைகள் இன்றி, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மனித உரிமை சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும்,  குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகேர ஆகியோர் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானம் செலுத்திய நிலையில், ஷானி அபேசேகேர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் மற்றும் ஆசிரியரான அஹ்னாஃப் ஜஸீம் விடுதலை செய்யப்பட வேண்டுமென, கடந்த மாதம் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. இதனையடுத்து, ஐக்கிய நாடுகள் சபையில் ஒன்பது ஐரோப்பிய  நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் இந்த கோரிக்கையை விடுத்தனர்.

கவிஞர் அஹ்னாஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் அல்லது ஒரு விரைவான விசாரணைக்கு அழைப்பு விடுப்பதற்கும், சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு அமைய குற்றச்சாட்டுகள் விரைவாக தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கும் பல மனித உரிமை அமைப்புகளின் வரிசையில் தாமும் இணைவதாக அந்த நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மேலும் தாமதமின்றி மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான எந்தவொரு சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கான அரசின் உறுதிப்பாட்டுடன் முழுமையாக இணங்க வேண்டும்" என பிரித்தானியா, எஸ்டோனியா, ஸ்பெயின், ஜேர்மனி, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், நெதர்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின், மனித உரிமை தூதுவர்கள் இணைந்து அறிக்கை ஊடாக வலியுறுத்தினர்.

சர்வதேச மனித உரிமைகள் குழு, அஹ்னாப் ஜஸீமின் விடுதலையை ஆதரித்து கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் இன மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும், தமிழர்களும் முஸ்லிம்களும் இந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

International am

பென் சர்வதேச அமைப்பு, சர்வதேச மன்னிப்புச் சபை, அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை அமைப்பு, இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு, இலங்கை செயல் அமைப்பு, சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் மையம், சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய மையம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும் எதிரான சர்வதேச அமைப்ப, பேர்ள் எக்சன் மற்றும் ப்ரிமியுஸ் ஆகிய அமைப்புகள் அதில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி