1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் (வயது 53) நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தின்போது அவரது மனைவி மார்டின் மோயிஸ் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, அவர் புளோரிடாவுக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் எடுத்துச்சென்று அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இந்த சம்பவம் அந்த நாட்டை உலுக்கி உள்ளது.

இந்த கொலையில் சந்தேக குற்றவாளிகள் என கருதப்பட்ட 4 பேரை அந்த நாட்டு பாதுகாப்பு படையினர் கடந்த புதன்கிழமை அதிரடியாக சுட்டுக்கொன்றனர். ஆனாலும், அதிபர் கொலையில் தொடர்புடையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், 28 பேர் கொண்ட குழு அதிபர் ஜோவனல் மோயிஸ் கொலையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் உயர் அதிகாரி லியோன் சார்லஸ் தெரிவித்துள்ளார். 28 பேரில் 26 பேர் கொலம்பியாவையும், 2 பேர் ஹைதி தீவை பூர்விகமாக கொண்ட அமெரிக்க நாட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த 28 பேரில் 15 கொலம்பியர்கள், 2 அமெரிக்கர்கள் என மொத்தம் 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3 கொலம்பியர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று விட்டனர். எஞ்சிய 8 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி லியோன் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஜோவனல் மோயிஸ் கொல்லப்பட்டத்தையடுத்து அந்த நாட்டில் தற்போது தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக பிரதமர் கிளாட் ஜோசப் மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால் ஹைதியில் பொலிஸ் அதிகாரத்தை இராணுவம் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி