1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள புதிய விதிமுறைகளை கடுமையாக விமர்சித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அதனை மீளப் பெறுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரியுள்ளது.

இந்த வருடம் மார்ச் மாதம் 12ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்ட, கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்கும் உத்தரவு தொடர்பிலான வர்த்தமானி விதிமுறைகளானது ”முழுமையான துல்லியம் மற்றும் சட்ட உறுதி இல்லாத, கருத்து சுதந்திரம், சித்தாந்தம் மற்றும் மத நம்பிக்கைகளுக்கு இடையிலான ஒரு மோதல்” என ஏழு சர்வதேச மனித உரிமை நிபுணர்களால் ஓகஸ்ட் 9 ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் விமர்சனங்களுக்கு பதிலளிக்குமாறு ஜனாதிபதியையும் அழைக்கும் கடிதம், அடுத்த ஜெனீவா மனித உரிமை அமர்விற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

புதிய விதிமுறைகளை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கை, மனித உரிமைகள் குறித்து அரசாங்கம் பின்பற்ற வேண்டிய உலகளாவிய மரபுகளின் தொடர் மீறல் என்பதை 13 பக்கக் கடிதம் நினைவூட்டியுள்ளது.

மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம் (UDHR), சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள்  சாசனம் (ICCPR), சர்வதேச பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் சாசனம் (ICESCR) அனைத்து நபர்களையும் கட்டாய காணாமல் போவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாடு (ICPPED) அதேபோல் 1992 தேசிய, இன, மத மற்றும் மொழி சிறுபான்மையினர் பற்றிய பிரகடனம் மற்றும் மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலான பாகுபாடுகளின் அனைத்து வடிவங்களையும் நீக்குவதற்கான 1981 பிரகடனம் ஆகியன இதில் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சேர்க்கப்படும் புதிய விதிமுறைகள், சட்டத்தின் விதிகளுக்கு இணங்காமல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்,  வழக்கு விசாரணையின்றிய “புனர்வாழ்வு“ என்ற விடயமானது மனித சுதந்திரத்தை பறிக்க உத்தியோகபூர்வமாக அனுமதிக்கும் என நிபுணர் குழு கவலை தெரிவித்துள்ளது.

காணாமல் போகும் ஆபத்து

 110581955 019078452 1

புதிய விதிகளுக்கு அமைய கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காணாமல் போகும் மற்றும் சித்திரவதைக்கு ஆளாக நேரிடும் என  ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வெளியிட்டுள்ளது.

"விதிமுறையின் பிரிவு 3, சட்டத்தை அமுல்படுத்தாத நிறுவனங்கள், தனிநபர்களை 24 மணிநேரம் வரை தடுத்து வைக்க அனுமதிப்பதாகவும், கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் சித்திரவதை, மனிதாபிமானமற்ற மற்றும் கீழ்த்தரமான நடத்தையின் அபாயத்தை ஏற்படுத்துகிறது" என ஐநா நிபுணர்கள் தெரிவித்தனர்.

"அதனைவிட விதிமுறைகள் சட்டப்பூர்வமாக இல்லாமல், 'புனர்வாழ்வு' என்ற பெயரில் நபர்களின் சுதந்திரத்தை பறிக்க உத்தியோகபூர்வமாக அனுமதிக்கும் பல விதிமுறைகளைக் கொண்டிருப்பது சர்வதேச சட்டத்தின் கீழ் தன்னிச்சையான தடுப்புக்காவல். நிபுணர்களுக்கு மிகுந்த கவலையாக உள்ளது. "

இலங்கை உறுதியளித்த சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைய, இந்த விதிமுறைகளை மீள்பரிசீலனை செய்ய அல்லது இரத்து செய்யுமாறு நிபுணர் குழு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

யுத்தத்தின் முடிவில் புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் புனர்வாழ்வு என்ற பெயரில் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை உட்பட சித்திரவதை செய்யப்பட்டு, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இது முன்னர் ஐக்கிய நாடுகள் சபையால் முன்னர் விமர்சிக்கப்பட்டது.

புதிய பயங்கரவாத தடை விதிமுறைகள் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தனிநபர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் - குறிப்பாக மத மற்றும் இன சிறுபான்மையினர், மற்றும் அரசியல் கருத்து வேறுபாடுகளை பயனுள்ள உரிய செயல்முறை இல்லாமல் குறைக்க அனுமதிக்கும். பயங்கரவாதத்தை தடுப்பு என்ற பெயரில் இலங்கையில் மனித உரிமைகள் மேலும் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய விதிமுறைகளை ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் சபை ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. அதே சமயத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை பலமுறை வலியுறுத்தியதுடன், அது நடைமுறைப்படுத்தப்படுவதை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்த தொடர்ச்சியான கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்குமாறு ஐநா நிபுணர் குழு, ஜனாதிபதியிடம் தனது கடிதத்தின் ஊடாக கேட்டுக் கொண்டுள்ளது.

நீடித்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்காகவும், பொறுப்புக்கூறல் மற்றும் மனித வளர்ச்சியை உறுதி செய்வதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் அறிவித்தார்.

ஜூன் மாதம் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் பேரவையின் 47ஆவது அமர்வில், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் பயங்கரவாதத்திற்கு எதிராக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி முஸ்லீம்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான நல்லிணக்கத்தை ஆபத்தில் ஆழ்த்தியதாக இலங்கை அரசை கடுமையாக சாடினார். இந்த நிலையில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது அமர்வு செப்டம்பர் 13 ஆரம்பமாகவுள்ளது.

Michelle Bachelet

ஓகஸ்ட் 5 ஆம் திகதி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பிறப்பிக்கப்பட்ட “கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்கும் உத்தரவு” அமுல்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, ஊடகவியலாளர்களான லக்னாத் ஜயகொடி, காவிந்தியா கிறிஸ்டோபர் தோமஸ் மற்றும் செயற்பாட்டாளர் ஷ்ரின் சரூர் ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனுவில், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், புனர்வாழ்வு ஆணையர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் ஓகஸ்ட் 24ஆம் திகதி வழக்கு தொடர்பிலான தீர்ப்பை அறிவிக்க உள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி