1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்தியாவின் வடக்கு சமவெளிகள் உலகின் மிக செழிப்பான விவசாயப் பகுதிகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் இன்று பல கிராமங்களில் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் சண்டைகள் ஏற்படுகின்றன. இந்தியா மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு என்ன காரணம்? தட்டுப்பாட்டால் உருவாகும் பிரச்னைகள் என்னென்ன?

ஜூம் செயலி மூலமாக என்னிடம் அலி-அல்-சாதர் தன் ஆம்ஸ்டர்டாம் வீட்டிலிருந்து பேசுகிறார். ஒரு குவளையிலிருந்து தண்ணீர் குடிக்கிறார். திடீரென்று அந்த முரண் நினைவுக்கு வந்ததுபோல் சிரிக்கிறார்.

"இராக்கில் இருக்கும்போது தினமும் சுத்தமான குடி தண்ணீரைத் தேடி அலைவேன், கஷ்டப்படுவேன்" என்கிறார்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் தன் சொந்த ஊரான பாஸ்ராவில் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அதிகாரிகள் ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற கோரிக்கையோடு இவர் தெருவில் இறங்கிப் போராடினார்.

"போருக்கு முன்பு பாஸ்ரா ஒரு அழகான ஊராக இருந்தது. கிழக்கு உலகின் வெனிஸ் என்று அதை அழைப்பார்கள்" என்கிறார் 29 வயதாகும் அல்-சாதர். நகரத்தின் ஒரு புறம் சாத்-அல்-அராப் நதி ஓடுகிறது. பல நன்னீர்க் கால்வாய்கள் நிறைய ஊர் இது. அல்-சாதர் துறைமுகங்களில் இதுபோன்ற பல கால்வாய்களைப் பார்த்திருக்கிறார். "நான் கிளம்புவதற்குள் அந்த கால்வாய்களீல் கழிவு நீரைக் கொட்டத் தொடங்கிவிட்டார்கள். எங்களால் அதைப் பயன்படுத்தமுடியவில்லை. நதிநீரின் மோசமான நாற்றம் எனக்குத் தலைவலியைத் தந்தது. நோய்வாய்ப்பட்டு நான்கு நாட்கள் படுக்கையில் இருந்தேன்". 2018ம் ஆண்டின் கோடைக்காலத்தில், கழிவு கலந்த நீரால் பாஸ்ராவைச் சேர்ந்த 1,20,000 பேர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். போராடியவர்கள்மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதிர்ஷ்டவசமாக அல் சாதர் உயிர் தப்பினார். "இது நடந்து ஒரு மாதத்துக்குள் பைகளை எடுத்துக்கொண்டு ஐரோப்பாவை நோக்கி கிளம்பிவிட்டேன்" என்கிறார்.

உலகெங்கிலும் அல்-சாதரைப் போன்றவர்கள் பெருகி வருகிறார்கள். உலகின் கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு வருடத்தில் ஒரு மாதமாவது கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாட்டால் அவதிக்குள்ளாகிறார்கள். அல் சதாரைப் போலவே இதனால் உந்தப்பட்டு வேறு நாடுகளில் பாதுகாப்பான வாழ்வைத் தேடுகிறார்கள். "தண்ணீர் இல்லையென்றால் மக்கள் அங்கிருந்து நகர்வார்கள்" என்கிறார் கிட்டி வான் டெர் ஹெய்ஜ்டென். இவர் நெதர்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் சர்வதேச ஒத்துழைப்புத்துறை தலைவராக இருக்கிறார். தண்ணீர் அரசியலில் நிபுணத்துவம் பெற்றவர். தண்ணீர் தட்டுப்பாடு உலகில் 40% பேரை பாதிக்கிறது. 2030க்குள் வறட்சி காரணமாக 300 மில்லியன் மக்கள் புலம்பெயர்வார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையும் உலக வங்கியும் கணித்திருக்கின்றன. வான் டெர் ஹைஜ்டென் போன்றவர்கள் இது எங்கே போய் முடியும் என்று கவலை தெரிவிக்கிறார்கள்.

"தண்ணீர் இல்லாவிட்டால், அரசியல்வாதிகள் அதை எப்படியாவது பெற முயற்சி செய்வார்கள், அதற்காக சண்டையிடுவார்கள்" என்கிறார்.

தண்ணீர்

தண்ணீர்

20ம் நூற்றாண்டில் உலகளாவிய தண்ணீர் பயன்பாடு மக்கள் தொகை உயர்வைக் காட்டிலும் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. ரோம், கேப் டவுன், சென்னை, லிமா போன்ற பல நகரங்கள் இந்த ஏற்றத்தாழ்வால் தண்ணீர் அளவைக் கண்காணித்துத் தரும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. 2012ம் ஆண்டு முதல் உலக பொருளாதார கூட்டமைப்பு வெளியிட்டு வரும் உலகளாவிய ஆபத்துகள் பட்டியலில் தண்ணீர் பிரச்னைகள் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துவிடுகின்றன. 2017ல் 20 மில்லியன் மக்கள் ஆப்பிரிக்காவிலிருந்தும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் உணவுத் தட்டுப்பாடு காரணமாகவும் பூசல்கள் காரணமாகவும் வெளியேறினார்கள். இந்தப் பிரச்னைக்கு வறட்சியே காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆக்லேண்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பசிபிக் இன்ஸ்டிட்யூட்டின் தலைவர் பீட்டர் க்ளீக், கடந்த மூன்று தசாப்தங்களாக தண்ணீர்த் தட்டுப்பாடு, பூசல்கள் மற்றும் புலம்பெயர்தலுக்கு இடையிலான தொடர்பை ஆராய்ந்து வருகிறார். தண்ணீரால் வரும் பிரச்னைகள் அதிகரித்துவருவதாக இவர் தெரிவிக்கிறார். "ஒரு சில விதிவிலக்குகள் தவிர, தண்ணீர்த் தட்டுப்பாட்டால் வரும் தாகம் காரணமாக யாரும் இறப்பதில்லை. ஆனால் தண்ணீர் கிடைக்காததால் ஏற்படும் பிரச்சனைகளாலும் கழிவுநீர் கலந்த நீரைப் பருகுவதாலும் மக்கள் இறப்பது அதிகரித்துவருகிறது" என்கிறார்.

தண்ணீரால் ஏற்படும் பிரச்னைகளை க்ளீக்கும் அவரது குழுவினரும் வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். பாபிலோனைச் சேர்ந்த மன்னர் ஹமுராபியின் காலத்திலிருந்து இப்போதைய காலகட்டம் வரை பெரியதும் சிறியதுமாக 925 பூசல்கள் பட்டியலிட்டப்பட்டுள்ளன. இது இறுதிப் பட்டியல் இல்லை என்றாலும், பெரிய போர்கள் முதல் அண்டை வீட்டாருக்கிடையே எழும் சண்டை வரை பலவிதமான பிரச்சனைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. தண்ணீருக்கும் பிரச்சனைக்குமான சிக்கலான உறவை இவை காட்டுகின்றன.

"நாங்கள் இந்த பிரச்சனைகளை மூன்றாகப் பிரித்திருக்கிறோம் : முதலாவதாக, தண்ணீர் ஒரு பிரச்சனையின் ஆரம்பப் புள்ளியாக இருப்பது, இரண்டாவது, தண்ணீரோ நீர்நிலைகளோ ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவது. அணை கட்டி நீரைத் தடுப்பது போன்றவை இதில் அடங்கும். மூன்றாவது, தண்ணீர் மற்றும் நீர்நிலைகள் தாக்குதலுக்கு உள்ளாவது. அதாவது, நீர்நிலைகளோ குழாய்களோ நீர் சுத்திகரிப்பு மையங்களோ தாக்கப்படுவது" என்று விவரிக்கிறார் க்ளீக்.

தண்ணீர்

தண்ணீர்

குழுவினருடன் இவர் தயாரித்துள்ள பட்டியலைப் பார்க்கும்போது, விவசாயப் பிரச்னைகளே இதில் அதிகம் இருப்பதை உணர முடிகிறது. உலகின் மொத்த நன்னீர்ப் பயன்பாட்டில் 70% விவசாயத்துக்குத்தான் போகிறது. ஆப்பிரிக்காவின் வறண்ட பூமியான சஹேலில், கால்நடைகளுக்கும் பயிர்களுக்கும் தேவையான தண்ணீருக்காக, விவசாயிகளும் மேய்ச்சல்காரர்களும் அடிக்கடி முரண்படுவதைப் பார்க்க முடியும்.

தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகரிக்கும்போது அதனால் ஏற்படும் பிரச்னைகளின் அளவும் அதிகரிக்க்கிறது.

"தண்ணீரால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன" என்கிறார் சார்லஸ் ஐஸ்லேண்ட். உலக வளங்கள் மையத்தில் நீர்த்துறையின் தலைவராக இவர் பணிபுரிகிறார்.

"மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் பொருளாதார வளர்ச்சியாலும் நீருக்கான தேவை அதிகரித்திருக்கிறது. காலநிலை மாற்றத்தால் நீர் குறைந்து, பல இடங்களில் மழை அளவுகள் மாறியிருக்கின்றன" என்கிறார்.

டைக்ரிஸ்-யூப்ரடிஸ் படுகையில் தண்ணீர்த் தட்டுப்பாடும் காலநிலை மாற்றத்தின் பாதிப்பும் சேர்ந்து தீவிர பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இராக், துருக்கி, சிரியா, மேற்கு இரான் உள்ளிட்ட நிலப்பகுதிகள் இந்தப் படுகையில் அமைந்துள்ளன. உலகின் வேறு எந்த இடத்தையும் விட இந்த இடத்தின் நிலத்தடி நீர் வேகமாகக் குறைந்து வருகிறது என்று செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன. சில நாடுகள் தண்ணீர் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்யும்போது, அது அண்டை நாடுகளை பாதிக்கிறது.

ஜூன் 2019ல் இராக்கைச் சேர்ந்த சில நகரங்கள் 50 டிகிரி செல்சியஸ் வெப்ப அலையால் தடுமாறின. அந்த சமயத்தில் டைக்ரிஸ் நதி தொடங்கும் இடத்தில் இலிசு அணையை நிரப்பப்போவதாக துருக்கி அறிவித்தது. இந்த அறிவிப்பு, டைக்ரிஸ் யூப்ரடிஸ்க்கு இடையே 22 அணைகளைக் கட்டும் துருக்கியின் திட்டத்தில் ஒரு அங்கம். இந்தத் திட்டம் சிரியா, இரான், இராக் ஆகிய நிலப்பகுதிகளுக்குச் செல்லும் நீரைப் பெருமளவில் குறைக்கிறது என்று சர்வதேச தண்ணீர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துருக்கியின் குனேடோகு அனடோலு ப்ரொஜெஸி (கேப்) முடியும்போது, 90 அணைகளும் 60 மின் நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கும்)

தண்ணீருக்காக அலையும் மக்கள்

ஒரு மைல் அகலமுள்ள இலிசு அணையில் நீர் அதிகரிக்க, இராக்கை நோக்கிச் செல்லும் தண்ணீர் பாதியாகக் குறைந்தது. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பாஸ்ராவில் அல்-சதாரும் அவரது அண்டை வீட்டாரும் பயன்படுத்தும் தண்ணீரின் தரம் குறைந்தது. தோல் அரிப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா உள்ளிட்ட பல நோய்களால் ஆகஸ்ட் மாதத்தில் நூற்றுக்கணக்கான பாஸ்ராவாசிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.

"பாஸ்ராவின் கதையில் இரு அம்சங்கள் உண்டு" என்கிறார் ஐஸ்லேண்ட். "கால்வாய்களில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலக்கப்படுகிறது. துருக்கி எல்லையில் அணையும் கட்டப்படுகிறது. டைக்ரிஸ் யூப்ரெடிஸின் நீர்வரத்து இதனால் குறைகிறது. பெர்சியன் வளைகுடாவிலிருந்து உப்புநீர் உள்ளே புகுந்து காலப்போக்கில் இது பயிர்களையும் மக்களையும் பாதிக்கிறது" என்கிறார்.

இது ஒரு சிக்கலான விஷயம்தான். ஆனால் இந்த சிக்கலான பிணைப்புகளைப் புரிந்துகொண்டதால் ஐஸ்லேண்டின் அமைப்பு, தண்ணீர், அமைதி, பாதுகாப்பு என்ற ஒரு கூட்டமைப்போடு இணைந்து சரியாகப் பணியாற்றிவருகிறது. டச்சு அரசு நிதியுதவியுடன் இயங்கும் இந்த கூட்டமைப்பில் ஆறு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொண்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. மெஷின் லேர்னிங் மூலமாக பிரச்சனை வருவதற்கு முன்பே எச்சரிக்கும் ஒரு மென்பொருளை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

தண்ணீர் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி எச்சரிக்கும் அதே நேரத்தில், ஏற்கனவே பிரச்சனை உள்ள இடங்களில் அது ஏன் நிகழ்கிறது என்று புரிந்துகொள்ளவும் இந்த மென்பொருள் உதவும் என்று நம்பப்படுகிறது.

பசுமை இந்தியாவிலும் தட்டுப்பாடு ஏன்?

இந்தியாவின் வடக்கு சமவெளிகள் உலகின் மிக செழிப்பான விவசாயப் பகுதிகளாகக் கருதப்படுகின்றன.

ஆனால் இன்று பல கிராமங்களில் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் சண்டைகள் ஏற்படுகின்றன. மக்கள்தொகைப் பெருக்கம், அதீத நீர்ப்பாசனம் ஆகியவற்றால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டதாக அறிவியல் தரவுகள் தெரிவிக்கின்றன.

பச்சைப்பசேல் பூமியாக இருந்தாலும் இந்தக் கூட்டமைப்பின் வரைபடம், வடமாநிலங்களில் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களுமே தண்ணீர்த் தட்டுப்பாட்டை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.

நதி

நதி

சிந்து, கங்கை, சட்லெஜ் போன்ற முக்கிய நதிகள் திபெத்திலிருந்து புறப்படுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்குமே அவை நீராதாரங்களாக இருக்கின்றன. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமீபத்தில் பல எல்லைப் பிரச்சனைகள் வெடித்திருக்கின்றன. நதிகளின் ஆரம்பகட்டப் பகுதிகளின்மீது சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. கால்வான் பள்ளத்தாக்கில் சென்ற வருடம் மே மாதம் நடந்த ஒரு சண்டையில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சிந்து நதியின் ஒரு சிற்றாறு இங்குதான் ஓடுகிறது. சண்டை நடந்து ஒரு மாதத்துக்குள்ளாகவே அங்கு அணை கட்டி இந்தியாவுக்குள் போகும் நீரை சீனா குறைக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாயின.

தண்ணீர்ப் பிரச்சனைக்கு உலகளாவிய தீர்வு என்று எதுவும் கிடையாது. சில நாடுகளில் வீணாகும் அளவைக் குறைத்து ஒழுகும் குழாய்களை சரிசெய்தாலே போதும் - உள்கட்டமைப்பு சரியாக இல்லாததால் ஈராக்கில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் வீணாகிறது. தண்ணீர் ஊழலைக் குறைப்பதும் விவசாயத்துகாகப் பயன்படுத்தப்படும் தண்ணீரின் கட்டுப்பாடு ஆகியவையும் நல்ல தீர்வுகள் என்று இந்தக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

மாற்று வழிகள் என்ன?

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களின்மூலமும் நன்னீரை அதிகரிக்கலாம். சர்வதேச அளவில் பார்த்தால், நதிகள் தொடங்கும் இடத்தில் அணை கட்டுவதால் அடுத்தடுத்த இடங்களில் உள்ள மக்களுக்குக் கிடைக்கும் நீர் குறைகிறது. இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தண்ணீர் பகிர்வு ஒப்பந்தங்கள் நல்ல தீர்வாக அமைகின்றன.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு 200 தண்ணீர் ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தம், இஸ்ரேலும் ஜோர்டனும் அமைதி ஒப்பந்தத்துக்கு முன்னால் முடிவெடுத்த ஒரு நீர் ஒப்பந்தம் ஆகியவை சில உதாரணங்கள். எல்லைகளைத் தாண்டிப் பாயும் நதிகள் மற்றும் ஏரிகளுக்கான உலகளாவிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை பத்து ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரை 43 நாடுகள் மட்டுமே கையெழுத்திட்டுள்ளன.

உள்நாட்டுப் பூசல்களையும் இதில் கவனிக்கவேண்டும். சிறிய நாடுகள் நீர் மேலாண்மையி சிறப்பாக செயல்படுகின்றன. தண்னீர் தொடர்பான நிறுவனங்கள் மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்புகளிலும் முதலீடு செய்யவேண்டும் என்று பெரு நாடு உத்தரவிட்டுள்ளது. மீகாங் டெல்டா பகுதியில் உள்ள மாசுபாட்டைக் குறைப்பது, பாரம்பரிய கட்டமைப்புகளின்மூலம் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் ஒரே அளவில் நீர்ப்பங்கீடு செய்வது என்று வியட்நாம் பல முயற்சிகளை செய்து வருகிறது.

காலநிலை மாற்றமும் மக்கள் தொகை பெருக்கமும் அதிகரித்துவருவதால் உலகில் வறட்சிகளும் அதிகரிக்கின்றன. இதுபோன்ற தீர்வுகள் சண்டைகளையும் புலம்பெயர்தலையும் தடுத்து நிறுத்தும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி