1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐ.நாவிற்கு அனுப்ப இலங்கை தமிழ் அரசு கட்சியின் 9 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை தயாரித்தது உண்மை தான் என்றும் , ஆனால் தாம் அதனை அனுப்பவில்லையெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று கிளிநொச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது விளக்கமளித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் இருந்து இரண்டாவது கடிதம் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. எனினும் அப்படியொரு நடவடிக்கையே நடக்கவில்லையென சில தரப்புக்கள் அடித்து சொன்னதுடன், கையொப்பமிட்டவர்கள் அதை மறுத்ததாகவும் செய்தி வெளியிட்டன.

அத்துடன் இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய எம்.ஏ.சுமந்திரன், கையெழுத்திட்ட பலர் தாம் கையெழுத்திடவில்லையென மறுத்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்துவது குற்றவியல் நடவடிக்கை எனவும் கூறிய அவர் , இந்த விடயத்தில் சட்டநடவடிக்கையெடுக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே , இன்று கிளிநொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கடிதம் தயாரிக்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டது உண்மை என்றும் எனினும், அதை அனுப்பவில்லையெனவும் கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரேன் கடிதமொன்று அனுப்பியிருந்தார். அதன் தமிழ் மொழிபெயர்ப்பை அனுப்புமாறு கேட்டேன். கூகிள் ட்ரான்சிலேட் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பை அனுப்பியிருந்தார். அதில் நாம் கையொப்பமிடவில்லை என்பதுடன் அந்த கடிதம் அனுப்புவது குறித்து கட்சிகளிற்குள் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.

இந்த மாதம் 3ஆம் திகதி சுமந்திரனால் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் இரு தரப்பும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட கருத்தில் எமக்கு உடன்பாடில்லை. அது பற்றி நாங்கள் ஆராயவேண்டும். காரணம் ஒரு தரப்பு களத்தில் இல்லை. மற்றைய தரப்பான அரசு இந்த நாட்டினுடைய இறைமையுள்ள அரசை நடத்துகின்ற ஒரு அரசாங்கம் தன் குடிமக்கள் மீது போர் குற்றத்தை நடத்தியுள்ளது.

குண்டுகளை வீசி மக்களை படுகொலை செய்திருக்கிறது. பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் மக்களை அழைத்து அதற்குள் குண்டு போட்டுக்கொலை செய்துள்ளது. ஒரு இன அழிப்பு. அது பற்றி கடந்த திங்கட்கிழமை , கட்சியின் உயர்மட்டகுழுவின் இணைய வழி கலந்துரையாடல் கடந்த திங்கள்கிழமை நடந்தது. இதைபற்றி ஆராய்ந்த போது, “ஐயா ஒரு தனி ஆளாக கையொப்பமிட்டு அனுப்பி விட்டார்“ என்றார்.

கடிதம் அனுப்பி விட்ட பின்னர் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவர் எங்களை கேட்கவில்லை. ஆனால் கூட்டமைப்பின் தலைவர் என அவர் அனுப்பியதை யாரும் கேள்விகேட்க முடியாது. அந்த சூம் சந்திப்பில், கடிதம் அனுப்பப்பட்டு விட்டதாகவே சுமந்திரன் தெரிவித்தார்.

நான், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மேயர் உள்ளிட்டவர்கள் ஒரு கடிதத்தை தயாரித்திருந்தோம். ஆனால் அந்த கடிதம் அனுப்பப்படவில்லை. அதற்குரிய இணைப்பை நான் தான் செய்தேன்.

இலத்திரனியல் முறைப்படிதான் கையொப்பத்தையும் பெற்றோம். கடந்த 19ஆம் திகதிக்கு முன்னர் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டியது, 7ஆம் திகதிக்கு பின்னர் அனுப்புவதில் பயனில்லையென்பதால் அதை கைவிட்டோம். நாம் இந்த கடிதத்தை அனுப்பவுமில்லை. வெளியிடவுமில்லை. இதில் ஒரு சில காரணங்களை கருதி, முரண்பாடுகள் அதிகரிக்கக்கூடாது என்பதற்காகவும் இதைப்பற்றி அதிகம் பேசவில்லை.

அதில் முக்கியமான விடயம், பல கடிதங்கள் இங்கிருந்து அனுப்பப்பட காரணம், எமது கட்சிக்குள் இது பற்றி எப்போதோ கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும். கடந்த மே மாதம் 17ஆம் திகதி 14 விடயங்களை குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தேன்.

அதில் 2வது விடயமாக ஜெனீவா விடயத்தையே எழுதியிருந்தேன். அதை பார்த்து விட்டு சம்பந்தன் ஐயா தொலைபேசியில் பேசினார். மாவை சேனாதிராசாவும் பேசினார். ஆனாலும் இதை பற்றி பலமுறை கேட்டும் கலந்துரையாடப்படவில்லையெனவும் சிறிதரன் இதன்போது மேலும் தெரிவித்தார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி