1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

குலாப் புயல், இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் உள்ள கலிங்கபட்டினத்துக்கும் ஒடிஷாவின் கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இது மேலும் சில மணி நேரம் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.

வடக்கு ஆந்திர பிரதேசத்தின் கடலோர பகுதியை தட்டிய புயல், தெற்கு கடலோர ஒடிஷாவை ஓட்டிய கரையை கடந்து வருவதாக அறிய முடிகிறது.

இது குறித்து ஆந்திர பிரதேச பேரிடர் மேலாண்மை ஆணையர் கண்ணபாபு கூறுகையில், குலாப் புயல் கலிங்கப்டடினம் மற்றும் ஒடிஷா இடையே கரையை தட்டியதாகவும், கலிங்கப்பட்டினத்துக்கு வடக்கே சுமார் 25 கிமீ தொலைவில் புயல் கரையை தாக்கியதாகவும் தெரிவித்தார். புயல் கரையை முழுமையாக கடக்க சுமார் மூன்று மணி நேரம் ஆகும் என்றும் அவர் கூறினார்.

கலிங்கப்பட்டினம் கடற்கரையில் மணிக்கு 75-95 கிமீ வேகத்தில் காற்று வீசும். எனவே மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரையில் சூறாவளி மணிக்கு 75 முதல் 95 கிமீ வேகத்தை எட்டும் என்றும் கடல் சீற்றமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனாமணி கூறினார். இன்று முதல் மேலும் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிஷா மாவட்டங்களுக்கு புயல் அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பொழியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், ஆந்திரா, ஒடிஷா, தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குலாப் புயல்

ஸ்ரீகாகுளத்திற்கு அச்சுறுத்தல் அதிகம்

குலாப் புயல் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் மாவட்ட நிர்வாகம் உஷார் நிலையில் உள்ளது. கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். அங்கு மாநில பேரிடர் மீட்புப் படையினரும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

இந்த குழுக்கள் காரா, கவிதி, சோம்பேட்டா, கலிங்கப்பட்டினம் மற்றும் புயலின் தாக்கம் எதிர்பார்க்கப்படும் பிற பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், புயலின் போது உயிர் சேதம் ஏற்படுவதைத் தடுக்க உள்நாட்டு மக்களை சூறாவளி முகாம்கள் மற்றும் பிற அலுவலகங்களுக்கு வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீகேஷ் லதாகர் உத்தரவிட்டார். வருவாய், போலீஸ், கடல், மின்சாரம், தீயணைப்பு மற்றும் மருத்துவ சுகாதார அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குலாப் புயல்

அங்கு மறுவாழ்வு மையங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அனைத்து மண்டல மையங்களிலும் ஆட்சியர் அலுவலகத்துடன் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளனர். இச்சாபுரம் தொகுதியில் உள்ள 27 கிராமங்களில் மீனவர்கள் அதிகாரிகளின் உதவிக்காக காத்திருக்கின்றனர். பருவா மற்றும் போகருவில் சுமார் 100 படகுகள் நங்கூரமிடப்பட்டுள்ளன.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வலைகள் மற்றும் படகுகள் சேதமடைவதைத் தடுக்க மீனவர்கள் உதவி கோரியுள்ளனர்.

குலாப் புயல்

புயலால் அதிகம் பாதிக்கப்படும் சாத்தியமுள்ள ஸ்ரீகாகுளத்தில் கடலோர மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கள் படகுகளுக்கு என்ன ஆகும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். குலாப் புயல் காரணமாக இஸ்கலபாலம், ராமையாபட்டினம், கொல்லகண்டி, பருவா கோத்தூறு, நடுமுரு, டொங்கலூரு, ஈக்குவூர் மற்றும் பட்டி கல்லுரு ஆகிய கடலோர கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100 படகுகள் நங்கூரமிடப்பட்டுள்ளன. விபத்து ஏற்பட்டால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வலைகள் மற்றும் படகுகள் சேதமடையும் அபாயம் இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இன்னும் அவர்களுடைய சில படகுகள் கடற்கரையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, விசாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஜிவிஎம்சி ஆணையாளர் ஜி.சிரிஜனா, புயல் நிவாரண தங்குமிடங்கள் மற்றும் சாலை அடைப்புகளை விரைவாக அகற்ற ஜேசிபி இயந்திரங்கள் தயாராக இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

குலாப் புயல்

குலாப் புயல் தாக்கம் காரணமாக ரயில் சேவைகள் சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஒடிசாவின் பத்து மாவட்டங்களில் பாதிப்பு.

குலாப் புயல் தாக்கம், ஒடிஷாவில் உள்ள 10 மாவட்டங்களில் ஏற்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கூறியிருக்கிறார்.

ரயில்கள் ரத்து ...

புயல் பாதிப்பு காரணமாக, ஒடிஷாவின் சில கடலோரபகுதிகளில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம்-விஜயவாடா செல்லும் 10 ரயில்களும், விசாகப்பட்டினம்-விஜயநகரம் செல்லும் 6 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விசாகப்பட்டினம் வழியாக இயக்கப்படும் ஆறு ரயில்கள் நாளை (27) ரத்து செய்யப்படுகின்றன. பூரி-ஓகா சிறப்பு ரயில் குர்தா சாலை, அங்குல் மற்றும் சம்பல்பூர் வழியாக திருப்பி விடப்படும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி