1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் விருதுபெற்ற பொது ஊழியர் ஒரு அவமதித்து அச்சுறுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குருநாகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பியுமால் ஹேரத், மஸ்போத பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சக்திக சத்குமாரவை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அவமதித்து அச்சுறுத்தியுள்ளதாக, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சருக்கு அறிவித்துள்ளது.

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மேம்பாட்டுத் திட்டங்களைப் பெறுவதற்காக "கிராமத்துடன் உரையாடல்" திட்டத்தின் கீழ் கிராமப்புறக் குழுக்களைக் கூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, 778 வில்கம்தேமடவ கிராம அலுவலர் பிரிவின் கிராமக் குழு அண்மையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் குருநாகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவருமான பியுமால் ஹேரத் தலைமையில் கூடியது.

கூட்டத்தில் கட்சியின் கிளை பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவர் பியுமால் ஹேரத், அபிவிருத்தி அலுவலர் சேவை சங்கம் அபிவிருத்தி அதிகாரி சக்திக சத்குமாரவை இழிவுபடுத்தியதோடு, கடுமையாக அச்சுறுத்தி கண்டித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள அந்த சங்கம், இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்ததுடன், அரச அதிகாரிகள் மீதான இத்தகைய அழுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

”பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் பொது அதிகாரிகளே தவிர அரசியல் கட்சியின் பிராந்திய அமைப்பாளர்கள் அல்ல என்பதை நாங்கள் அரசாங்கத்தின் அரசியல் அதிகாரிகளுக்கு வலியுறுத்துகிறோம். பொது சேவையை அரசியலாக்கும் இந்த இழிவான செயலை நாங்கள் வன்மையாக நிராகரிக்கிறோம். அரச ஊழியர்களாக தங்கள் கடமைகளைச் செய்வதில் அரசாங்கக் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளின்படி பொதுவான பங்கு வகிக்கும் அபிவிருத்தி அதிகாரிகள் ஒரு அரசியல் கட்சியின் சிப்பாய்கள் அல்ல என்பதை பியுமால் ஹேரத் உட்பட அரசாங்கத்தில் உள்ள அனைத்து அரசியல் சக்திகளுக்கும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.”

கிராம அலுவலர் பிரிவில் அபிவிருத்திக்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராமிய குழுக்களை கூட்டுவதில் அதன் அழைப்பாளராக செயல்படுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கிராம நிர்வாகப் பிரிவில் உள்ள மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தன்னார்வ சங்கங்களின் தலைவர்கள் கிராம நிர்வாகக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

தலைவர் அல்லது துணைத் தலைவர் அல்லது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி தலைமையில் கூட்டம் கூட்டப்பட வேண்டும் மற்றும் கிராமம் தொடர்பான முன்மொழிவுகள் முன்னுரிமை வரிசையில் தயாரிக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான முன்மொழிவுகளைக் கோருவதற்கான உகந்த முறையாக இது ஏற்றுக்கொள்ளப்படுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம், உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவிற்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், பல இடங்களில் வேறுபட்ட செயன்முறைகள் நடைபெறுவதாக அநத சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

”கிராமப்புறக் குழு என்ற பெயரில் பெரும்பான்மையான வெளி அரசியல் நண்பர்களைக் கூட்டி ஒருதலைப்பட்ச முன்மொழிவுகளைப் பெற்று, அரசியல் அதிகாரிகளின் தீர்மானங்களை விருப்பப்படி அங்கீகரிப்பதன் மூலமான கிராமக் குழுவின் தவறான பயன்பாடு,பொது நிதியைப் பயன்படுத்துவதில் முன்னுரிமையாக வெளிப்படைத்தன்மையுடன் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, இந்த திட்டம் பல அரசாங்க அரசியல் அதிகாரிகளால் பெரிதும் அரசியலாக்கப்பட்டுள்ளது. தங்கள் தன்னிச்சையான செயல்களை  ஆதரிக்காத நேர்மையான அதிகாரிகள் இத்தகைய அரசியல் அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள்.”

திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் விலக்கப்பட்டு, குறை மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டு, கடுமையாக அரசியலாக்கப்பட்டுள்ளதாக முன்னதாக வலியுறுத்தப்பட்டதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஒழுங்கற்ற அரசியல் செல்வாக்குகள் தொடர்ந்தால், அனைத்து அபிவிருத்தி அதிகாரிகளாலும் ஏனைய அரசாங்க அதிகாரிகளாலும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுமென, தொழிற்சங்கம் அமைச்சர் சமல் ராஜபக்சவிடம் கூறியுள்ளது.

அரசியல் அதிகாரிகள் குறுக்கீடு இல்லாமல் சுதந்திரமாக தங்கள் கடமைகளைச் செய்ய ஒரு சாதகமான சூழலை உருவாக்க வேண்டுமென, குறித்த கடிதத்தின் ஊடாக அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இக்கடிதத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் சார்பாக தலைவர் எச்.ஏ.ஏ சேனாரத்ன, செயலாளர் ரஞ்சித் பண்டார மற்றும் பொதுச் செயலாளர் சந்தன சூரியாராச்சி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். 

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி