1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கன மழை பெய்துள்ளது. சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு அதி தீவிர மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல இடங்களில் தீவிரமாக மழைபெய்துவருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவில் துவங்கிய மழை இரவு முழுவதும் தொடர்ந்து பெய்தது. இதனால் சென்னை நகரின் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது.

சென்னையில் உள்ள சுரங்கப் பாதைகளில் பெரும் பகுதி மழை நீரில் மூழ்கியுள்ளன. சென்னை மட்டுமின்றி, அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மழை விட்டுவிட்டுப் பெய்து வருகிறது.

வேளச்சேரி பகுதியில் மழையின் காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் அங்குள்ளவர்கள் தங்களது வாகனங்களை அருகில் உள்ள மேம்பாலங்களில் நிறுத்தியுள்ளனர்.

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே உள்ள ரயில் பாதையை மழை நீர் சூழ்ந்ததால் மின்சார ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் சற்று வடிந்துள்ளதால், ரயில் சேவை சீரடைந்துள்ளது. மெட்ரோ ரயில் சேவையைப் பொறுத்தவரை, மழையால் பாதிப்பு இல்லையென்றும் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற வகையில் சேவை தொடர்ந்து இயங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்திலேயே அதிக அளவாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வடசென்னையிலும் அம்பத்தூரிலும் 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையின் கொளத்தூர், ஆர்.கே. நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மழை நீர் சூழ்ந்த பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர் பாபு, தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

தமிழ்நாட்டின் வட பகுதியை நோக்கி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

மழை வருமா வராதா? உடனே கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு

பருவமழை தீவிரமடைந்திருப்பதால் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையோ, கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தைப் பார்வையிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வெள்ளத்தைப் பார்வையிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தின் தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க் கிழமையன்று தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய கடற் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அனேக இடங்களில் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலின் ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் நவம்பர் 9ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்பும்படி கூறப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் அனைத்தும் தங்களது முழுக் கொள்ளளவை எட்டிவருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பிவருவதால் இன்று பிற்பகல் ஒன்றரை மணி அளவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படும். 24 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 21.3 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 600 கன அடியாக உள்ளது. நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரும் அதிகரிக்கப்படும்.

தீவிர மழை எச்சரிக்கை காரணமாக தேசியப் பேரிடர் மீட்புப் படையின் நான்கு படையணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா ஒரு அணியும் மதுரையில் இரண்டு அணிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரக்கோணத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் மாநில அரசு நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூண்டியில் உள்ள சத்யமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை நெருங்கி வருவதால் ஏற்கனவே விநாடிக்கு 2,894 கன அடி நீர் திறக்கப்பட்டுவந்தது. ஆனால், நீர் வரத்து அதிகரிப்பதால் வெளியேற்றப்படும் நீரின் அளவு 3,376 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

வெள்ளம் தேங்கிய தெருவை பார்வையிடும் அமைச்சர் கே.என்.நேரு.

வெள்ளம் தேங்கிய தெருவை பார்வையிடும் அமைச்சர் கே.என்.நேரு.

சேழவரம் ஏரியில் 75 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அந்த ஏரி முழுக் கொள்ளளவை நெருங்கிவருவதால் இன்று காலை ஆறு மணி முதல் அதிலிருந்து 700 கன அடி நீர் பூச்சிக்கால் கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

கர்நாடக அணைகளில் நீர் திறக்கப்படுவதாலும் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்வதாலும் காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கான நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 116.1 அடியாக உள்ளது. அணையிலிருந்து மொத்தமாக விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.5 அடியாக உயர்வு. அணையில் நீர் இருப்பு 6,748 மில்லியன் கன அடி. நீர் வரத்து 2,305 கன அடியாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு 1,897 கன அடியும் கேரளாவுக்கு 2,841 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது.

வருஷநாடு மற்றும் மூலவைகை ஆற்றுப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக வைகை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 66.83 அடியாக உள்ளது.

வைகை அணையில் இருந்து 569 கன அடி நீர் மதுரை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்காக ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாலும் கடந்த இரு நாட்களாக தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையினாலும் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

தரைப்பாலத்தின் இரு பகுதிகளிலும் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர் .

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் - ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற விவசாயி தனது தோட்டத்திற்கு சென்ற போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக விட்டல்பட்டி ஓடையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டார். அவரது உடலை சாப்டூர் அருகே உள்ள கண்மாயில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி