1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சீனா முன்னெடுத்து வரும் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்துக்கு கச்சிதமான மாற்றாக, 300 பில்லியன் யூரோ மதிப்பிலான உலகலாவிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். அத்திட்டத்துக்கு 'குளோபல் கேட்வே' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குளோபல் கேட்வே திட்டம் நம்பகமான திட்டமாக உருவெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு ரயில், சாலை, துறைமுகத் திட்டங்களுக்கு சீனா நிதியுதவி வழங்கியது. அது அவர்களை கடனில் மூழ்கடிக்கச் செய்யும் திட்டமென குறை கூறப்பட்டு வருகிறது.

நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக் கூடிய திட்டங்களை வடிவமைக்க உலக நாடுகளுக்கு நம்பகமான கூட்டாளிகள் தேவை என உர்சுலா வோன் டெர் லெயன் தெரிவித்தார்.

உறுப்பு நாடுகள், நிதி நிறுவனங்கள், தனியார் துறையினரிடமிருந்து திரட்டும் நிதியை எப்படி எங்கு பயன்படுத்துவது என ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருகிறது. இத்தொகையில் பெரும்பகுதி மானியங்களாக வழங்கப்படுவதற்கு பதிலாக, உத்தரவாதங்களாகவோ கடன்களாகவோ வழங்கப்பட உள்ளது.

மாறுபட்ட, ஜனநாயக ரீதியிலான அணுகுமுறை வளரும் நாடுகளின் காலநிலை மாற்றம், உலகப் பொதுசுகாதார பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மை கொண்ட மேம்பாட்டு இலக்கை அடைய உதவும் என்பதை நிரூபித்துக் காட்ட விரும்புகிறது என உர்சுலா வோன் டெர் லெயன் கூரினார்.

நல்ல உயர்தரமான திட்டங்கள், அதிக வெளிப்படைத்தன்மையோடும், நல்ல நிர்வாகத்தோடும், திட்டத்தில் பங்கெடுக்கும் நாடுகளுக்கு நல்ல முன்னேற்றத்தைக் காட்டக் கூடியதாக இருக்க வேண்டும் என்று விளக்கினார். இத்திட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகள் குவிமையமாக இருக்கும் என ஒரு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆட்கள்

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் தந்திரம் ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தோ பசிபிக், ஐரோப்பிய ஒன்றியம் வரை பரவிவிட்டது. சீனாவின் காஸ்கோ நிறுவனம், மிகப்பெரிய கிரேக்க கன்டெயினர் துறைமுகமான பிராஸின் (Piraeus) மூன்றில் இரு பங்கை தன் வசம் வைத்துள்ளது. அதே போல க்ரோஷியா நாட்டில் சீனா ரோட் அண்ட் பிரிட்ஜ் கார்ப்பரேஷன் ஒரு முக்கிய பாலத்தைக் கட்டியுள்ளது.

நிதி சார் பிரச்னைகளை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட்டிருக்கும் முதல் தீவிர நடவடிக்கையைக் குறிக்கிறது இது, எனவே சீனாவிடமிருந்து கடன் வாங்கும் நாடுகளுக்கு வேறொரு வாய்ப்பும் உள்ளது என ஜெர்மன் மார்ஷல் ஃபண்டில் சீனியர் டிரான்ஸ் அட்லான்டிக் ஃபெல்லோவாக இருக்கும் ஆண்ட்ரூவ் ஸ்மால் பிபிசியிடம் தெரிவித்தார்.

வளரும் நாடுகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்றால் குளோபல் கேட்வே திட்டத்தை சீனா வரவேற்கிறது என ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சீன தூதர் ஷாங் மிங் கடந்த மாதம் ஒரு சந்திப்பில் கூறியது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் உட்கட்டமைப்புத் திட்டங்களை பூகோள அரசியல் பிரச்னைகளாக மாற்றினால், அது சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பை தோல்வியடையச் செய்வதாக இருக்கும் மற்றும் தங்கள் சொந்த நலனையே பாதிப்பதாக இருக்கும் என கூறியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

சீனாவில் வெளியுறவுக் கொள்கையில் பெல்ட் அண்ட் ரோட் திட்டம் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.

புதிய சாலைகள், துறைமுகங்கள், ரயில் தடங்கள், பாலங்களில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம், சீனா பல்வேறு வர்த்தக தொடர்புகளை மேம்படுத்திக் கொண்டது. மேலும் தன் கடன்கள் மூலம் நாடுகளை வளைத்துப் போடுவதாகவும் விமர்சிக்கப்பட்டது.

சீனாவின் இந்த கடன் கொடுக்கும் திட்டம் மிகவும் சிக்கலானது என்று வாதிடுபவர்களும் உள்ளனர். இத்தனை பெரிய தொகையை கடனாகப் பெறுவது என்பது கிட்டத்தட்ட எந்தவித ஆபத்தும் இல்லாதது என்கிறார்கள் அவர்கள்.

எப்படிப் பார்த்தாலும் சீனா பொருளாதார மற்றும் பூகோள அரசியல் மூலம் கால்தடம் பதித்து வளர்வது, மேற்குலகில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இப்போது நம் முன்னிருக்கும் கேள்வி என்னவெனில், ஐரோப்பிய ஒன்றியத்தால் பூகோள அரசியல் தளத்தில் செயல்பட முடியுமா என்பது தான் என்கிறார் ஆண்ட்ரூவ் ஸ்மால்.

"அல்லது வளைந்து கொடுக்கும் தன்மையற்று, தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளுமா? ஒருவேளை இதில் அவர்கள் தோற்றால், அது மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்டதாகப் பொருள்" என்கிறார் ஸ்மால்.

"ஐரோப்பா இந்த தளத்தில் தங்கள் ஆதிக்கத்தை உறுதி செய்வது ஒரு நல்ல சமிக்ஞை" என ஒரு ராஜரீக ரீதியிலான பணியில் உள்ள அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

"அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள டிரான்ஸ் அட்லான்டிக் நண்பர்களோடு நாங்கள் பகிர்ந்து கொள்ளும் பொதுவான விஷயம் இது" என்றார் அவர்.

பொதுவான விஷயங்கள் நாடுகளுக்கு மத்தியில் பெரும் போட்டியை உருவாக்கலாம் என்கிறார் சென்டர் ஃபார் குளோபல் டெவலெப்மென்ட்டில் மூத்த உறுப்பினராக இருக்கும் ஸ்காட் மோரிஸ்.

இதெல்லாம் போக கடந்த ஜூன் மாதம் ஜி7 மாநாட்டில், அமெரிக்கா 'பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட்' என்கிற திட்டத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. "இந்த விஷயத்தில் ஏகப்பட்ட திட்டங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கின்றன" என்கிறார் மோரிஸ்.

இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் குளோபல் கேட்வே திட்டம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் மோரிஸ். இத்திட்டம் சீனாவின் முன்னெடுப்புகளுக்கு எதிராக ஒரு போட்டியாக இருப்பதை விட, வளரும் நாடுகளில் சில நல்ல விஷயங்களைச் செய்யத் தேவையான பணத்தைக ஐரோப்பிய ஒன்றியம் கொடுத்து உதவியதாக இருக்கும்.

மதிப்பு அடிப்படையிலான மற்றும் வெளிப்படைத்தன்மை மிகுந்த திட்டங்கள் மற்றும் அணுகுமுறையை வலியுறுத்துவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம், சார்பு நிலையின்றி, தொடர்புகளை மேம்படுத்த விரும்புவதை வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும் இதுவும் ஒரு விதமான ஆதிக்கம் தான். பூகோள அரசியல் விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியம் தன் ஆதிக்கத்தைச் செலுத்தவே முயல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி