1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி 10 நாட்களாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தனியார் துறை ஊழியர்கள் தமது கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜா-எல எஸ்குவெல் லங்கா ஊழியர்களின் சம்பளத்தை 1,750 ரூபாவினால் அதிகரிக்கவும், வருகை கொடுப்பனவாக 2,500 ரூபாவை வழங்கவும் நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பணிப்புறக்கணிப்புக்கு தலைமை தாங்கிய வர்த்தக வலய மற்றும் பொது சேவை சங்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

"வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட எவரையும் பழிவாங்கவோ அல்லது அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவோ போவதில்லை என  நிறுவனம் தெரிவித்துள்ளது" என சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்டன் மார்கஸ் கூறியுள்ளார்.

இதற்கிடையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு தொழிலாளர்கள் துன்புறுத்தி அச்சுறுத்தியதோடு, 

தொழிற்சாலை சொத்துக்களை  சேதப்படுத்தியதாக, சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை சங்கம் மற்றும் அதன் ஜா-எல கிளையின் தலைவர் எஸ்.ஏ.கே.மங்கலிகா உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக எஸ்குவெல் நிறுவனத்தால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று மாவட்ட நீதிபதி அருண அலுத்கே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தொழிற்சங்கம் மற்றும் அதன் 11 உறுப்பினர்களுக்கு ஜனவரி 4 ஆம் திகதி வரை தடை உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாவட்ட நீதிபதி அலுத்கே உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடமிருந்து ஷ்ரமாபிமா விருது பெற்ற அன்டன் மார்கஸ் தலைமையிலான சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் சங்கம் எஸ்குவேல் நிறுவனத்திடம் 3,000 ரூபாவை வழங்குமாறு கோரியுள்ளது.

மேலும், இரண்டு மாத போனஸ் மற்றும் வருகைக் கொடுப்பனவு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் தயாரிப்பு முன்பதிவுகள் இல்லாமையால் அதிகரிக்க முடியாது எனவும், ஒன்றரை மாத போனஸ் வழங்கலாம் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனமான எஸ்குவெல் லங்கா வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததை அடுத்து, சுமார் 250 பேர் பணிக்குத் திரும்பியுள்ளனர். இதற்கமைய 3,000 சம்பள உயர்விற்கு பதிலாக 1,75 ரூபாவும், ஒன்றரை மாத போனஸும் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் பொலிடெக்ஸ் லங்கா என அழைக்கப்பட்ட இந்நிறுவனம் பின்னர் நிர்வாக மாற்றத்தின் பின்னர் எஸ்குவெல் லங்கா என பெயர் மாற்றப்பட்டது.

ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் ஹொங்கொங் முதலீட்டு நிறுவனமானது ஏகல, கொக்கல மற்றும் கேகாலை ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றது. மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் யக்கலவில் உள்ள தனது தொழிற்சாலையை மூடியது.

இந்த மூன்று தொழிற்சாலைகளிலும் 4,000க்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

ஏகல மற்றும் கொக்கல சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது ஊழியர் சங்கத்துடன் கேகாலை எஸ்குவல் தொழிலாளர் வர்த்தகம், தொழில்துறை மற்றும் பொது ஊழியர் சங்கம் இணைந்து செயற்படுகின்றது.

அன்டன் மார்கஸின் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் சங்கம் பின்னர் ஏகல தொழிற்சாலையின் தொழிற்சங்க அதிகாரத்தை கைப்பற்றியதோடு, சுமார் 70 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு செயற்பட்டு வருகின்றது. வேலைநிறுத்தப் போராட்டத்தின் மத்தியிலும் தொல்லைகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் இவர்கள் உள்ளானார்கள். 

சீனாவில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, குறைந்த வருமானம் கொண்ட சீன கைதிகள் மூலம் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்ததாகக் கூறி, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் கறுப்பு பட்டியலில் எஸ்குவல் சேர்க்கப்பட்டுள்ளது.

எஸ்குவல் இனி முற்பதிவுகளை நேரடியாக பெறாததால், அது பிராண்டிக்ஸிடமிருந்து துணை ஒப்பந்த அடிப்படையில் முற்பதிவுகளைப் பெற்று பணியாற்றி வருவதோடு, ஒப்பந்தம் அடுத்த ஜனவரியில் காலாவதியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

               

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி