1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக் கோரும் மக்கள் மனநல மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் செயற்பாடுகள் திடீரென தீவிரமடைவது குறித்தும் தகவல்களைத் திரட்டியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாத இறுதியில் ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இது தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி செயலணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவதை நாங்கள் எதிர்க்கிறோம். அதனை இல்லாதொழிக்கக் கோருபவர்களை மனநல மருத்துவமனைக்கு (அங்கொடைக்கு) அனுப்ப வேண்டும். வெளிநாட்டு ஜிஹாதிக் குழுக்கள் நாட்டில் பரவி வரும் இவ்வேளையில், பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்க வேண்டாம் என ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கின்றோம்” என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசு கட்சி, இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் பயங்கரவாதச் சட்டத்தை உடனடியாக ஒழிப்பதற்கான மனுவில் மக்கள் கையொப்பமிடும் பிரச்சாரத்திற்கு எதிராக ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கத்தினால் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இந்த கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் பல அரசியல், மதத் தலைவர்கள், வெகுஜன ஆர்வலர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

நாட்டில் சட்டத்தை முறையாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், தாக்குதல் குறித்த எச்சரிக்கைகள் தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோருடன் ஞானசார தேரர் கலந்துரையாடினார்.

“தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடம் இருந்து முறையான விசாரணைகள் நடைபெறவில்லை என இந்த செயலணிக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இலங்கையில் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் செயற்பாடுகள் திடீரென தீவிரமடைவது குறித்தும் அமைச்சர்களுக்கு விளக்கமளித்தோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

“சிங்கள, தமிழர் மற்றும் முஸ்லிம்களின் மனித உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மத வழிபாடுகளுக்கு பல்வேறு தடைகள் உள்ளன. நில அபகரிப்புகள் நடைபெறுகின்றன.பௌத்தர்களும் இந்துக்களும் சகல முனைகளிலும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியினால் திரட்டப்பட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையை தயாரித்து வெளிநாட்டினரின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா அமர்வில் அரசாங்கத்திடம் சமர்பிக்கவுள்ளதாக ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் இனவாத ரீதியான கருத்துருவாக்கத்தை ஆரம்பம் முதலே மேற்கொண்ட நிலையில், இவரது பிரசாரம் இனங்களுக்கிடையில் பாதிப்புக்களையும், மிகப் பெரிய அழிவுகளையும் கடந்த காலங்களில் ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியை அமைத்து, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அதன் தலைமைப் பதவியையும் ஞானசார தேரருக்கு வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், ஞானசார தேரரின் இனவாதக் கருத்துக்களை பெரும்பான்மை சமூகத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் எதிர்த்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி