1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொருளாதாரம் மோசமடைந்து, வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், அரச, தனியார் ஊழியர்களுக்கு 5000 ரூபா வழங்க சிபாரிசு செய்துள்ள அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மாவை வழங்கி ஏமாற்றியுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பழனி திகாம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“அரசு அரசு ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும் ரூ.5,000 உதவித்தொகை வழங்குகிறது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு 40 ரூபா கோதுமை மாவு வழங்கப்படுகின்றது. இது தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெரும் அநீதியாகும். இது எமது மக்களை புறக்கணிக்கும் செயலாகும். என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் வார இறுதியில் பத்தனை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திகாம்பரம் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இது தோட்டத் தொழிலாளர்களை கடுமையாகப் பாதித்துள்ளது, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கோதுமை மா வழங்குவதற்கு வைபவம் நடத்திய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

“அவர்கள் 50 வருடங்களாக அரசியலில் இருக்கிறார்கள். ஆனால் நான்கரை வருட நல்லாட்சியில் தான் மலையகம் மாறியது. கிராமங்களை உருவாக்கியது. காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. இப்படி நிறைய வேலைகள் செய்தேன். ஆனால் தற்போது நம் மக்களை ஏமாற்றி துரோகம் செய்கிறார்கள். இதுபோன்ற துரோகிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் பதிலடி கொடுப்பார்கள்,'' என்றார்.

“தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையை அறிந்த ஒருவரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தோட்டத் தொழிலாளர்களுக்குக் காணிகளை வழங்கி அவர்களை தோட்டப் பகுதிகளின் உரிமையாளர்களாக மாற்றுவதே எமது நோக்கம். அதை நிச்சயம் நிறைவேற்றுவோம்.'' என்றார்.

இந்த பேரணியில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

எவ்வாறாயினும், மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக பழனி திகாம்பரம் பதவி வகித்த காலத்தில், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைத்த போதிலும் அந்த கோரிக்கையை நிறைவேற்ற நல்லாட்சி அரசாங்கம் அழுத்தம் கொடுக்கவில்லை.

தொழிற்சங்க ரீதியாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசே கம்பனிகளுடன் பேரம் பேச வேண்டும் என்றும், தங்களின் தொழிற்சங்கத்திற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அப்போது பதவியில் இருக்கும்போது திகாம்பரம் கூறியிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

இதேவேளை, மானிய விலையில் கோதுமை மாவை தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அண்மையில் வைபவமொன்றை நடத்தியிருந்தது. பேனர் அடித்து, விருந்தினரை அழைத்து, பொன்னாடை போர்த்து கோதுமை மா வழங்கப்பட்ட நிகழ்வை மலையக இளைஞர்கள் வன்மையாகக் கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2202 CWC

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி