1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்டவர்களை எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த புதன் கிழமை (09) அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான லபார் தாஹிர் மற்றும் எஸ்.யூ.பீ.கரலியத்த ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது.

வீட்டிலிருந்த எல்.பீ சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையினால் தனது மனைவி உயிரிழந்தமை தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவர், பணிப்பாளர்களுக்கு எதிராக மறைமுக கொலை குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் உத்தரவிடுமாறு கோரி நான்கு பிள்ளைகளின் தந்தை தாக்கல் செய்த கட்டளை நீதிப் பேராணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கு உத்தரவிடுமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டரில் பியூடென் 70%, ப்ரொப்பேன் 30% அடங்க வேண்டியது கட்டாயம் என்ற நிலையில், எரிவாயு நிறுவனத்தினால் பியுடேன் 50%, ப்ரொபேன் 50% உள்ளடக்கப்பட்டு, எரிபொருள் சேர்மானம் மாற்றப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சேர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதால், வெடிப்பு உள்ளிட்ட ஆபத்தான நிலை ஏற்படக்கூடுமென நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் துஷான் குணவர்தன, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார்.

எனினும், அதனை கருத்திற்கொள்ளாமல் எரிவாயு நிறுவனத்தால் சேர்மானத்தின் அளவு மாற்றப்பட்டு சந்தைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷவினல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸாரின் கூற்றுப்படி, 2021 நவம்பர் 01 முதல் டிசம்பர் 15 வரை கிட்டத்தட்ட 730 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 24 வெடிப்புகள் சிலிண்டரில் இருந்து நேரடியாக வாயு கசிவு காரணமாக ஏற்பட்டதாகவும், மற்றவை அதிகாரிகளின் கூற்றுப்படி, சப்பார் குக்கர்கள் அல்லது ரெகுலேட்டர்கள் போன்ற பாகங்கள் காரணமாக வெடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சில நாட்களாக எரிவாயு வெடிப்பு இல்லாதிருந்த நிலையில் மீண்டும் எரிவாயு அடுப்பு வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.

முல்லைத்தீவில் செல்வபுரம் பகுதியில் நேற்று (11) நண்பகல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
செல்வபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் சமைத்துக் கொண்டிருந்த போது அடுப்பு வெடித்துள்ளது சமையலில் ஈடுபட்டவர் அடுப்புக்கு அருகில் இல்லாத காரணத்தினால் அவருக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை.

நாட்டில் எரிவாயு இல்லாது மக்கள் நீண்ட வரிசையில் அதனைப் பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகின்றமையானது மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி