1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் கு.அண்ணாமலை நான்கு நாள் விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.


கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு இந்திய அரசு பல உதவிகளை செய்துவரும் நிலையில் இவரின் இந்த விஜயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட வடக்கின் அரசியல் தரப்பினர் மற்றும் சிங்கள தலைவர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட உப தலைவர் திருக்கேஸ் செல்லசாமி மற்றும் அரசியல் அமைப்பாளர்களான ரகு, கோபி ஆகியோர் தலைமையிலான குழுவினர் விமான நிலையத்தில் பாஜகவின் தமிழகத் தலைவர் கு.அண்ணாமலை வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அவர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பினை நிறைவு செய்து கொண்டு கொட்டக்கலைக்குச் சென்றுள்ளார்.

அங்கு மலையகத்தின் களநிலைமைகளை பார்வையிடவுள்ளதோடு, இன்றைய தினம், இ.தொ.க.வின் வரையறுக்கப்பட்ட மேதின நிகழ்வில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் பிரதி தவிசாளர் ராஜதுரை, இ.தொ.கா உப தலைவர் பிலிப் குமார், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜா மற்றும் நுவரெலியா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை தலைவர்கள், உறுப்பினர் உட்பட இ.தொ.காவின் அரசியல் அமைப்பாளர்கள் ஆகியோர் நுவரெலியாவில் வரவேற்றனர்.

தொடாந்து, நாளை திங்கட்கிழமை வடக்கிற்குச் செல்லும் அவர் நல்லூருக்குச் செல்லவுள்ளதோடு வடமாகாணத்தின் களநிலைமைகளையும் நேரில் அவதானிக்கவுள்ளார்.

பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட வடக்கின் அரசியல் தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதில் இருந்து, இதுவரை, எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரோ, அமைச்சரோ அந்நாட்டிற்கு நேரடியாகச் செல்லாத நிலையில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் இந்த சுற்றுப்பயணம், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழகத்தின், பிரதான கட்சிகளான அதிமுக - திமுக, இலங்கைத் தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக காட்டி வரும் நிலையில் இவர்கள் வரிசையில், பாஜகவையும் சேர்க்கும் முயற்சியாக, அண்ணாமலையின் இலங்கையின் விஜயம் அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைத் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, நேரடியாக இலங்கை வந்துள்ளமை அக்கட்சிக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தும் எனவும் நம்பப்படுகிறது.

நேபாளம் மற்றும் இலங்கையிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என, பாஜக தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றமை கடந்த காலங்களில் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

இதனிடையே, இலங்கையில் விரைவில் பாஜக தொடங்கப்படும் என, சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி