1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்காக , இலங்கையினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தொடர்பில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது இலங்கையின் மனித உரிமைகள் , நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பில் செயற்படுகின்ற உள்நாட்டு நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டது.

இன்று புதன்கிழமை  நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியின் பங்குபற்றலுடன் நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மறுசீரமைப்பு என்பவற்றுக்குரிய நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் இதன் போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்தோடு எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை எதிர்கொள்வதற்காக, அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து பொறிமுறையொன்றை தயாரிப்பது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரத்னம் , வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஆர்.கே.லேனகல, நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்களான பியூமந்திர பீரிஸ் (சட்டம்) , ஆர்.பீ.எஸ்.சமன் குமாரி, ரோஹண ஹப்புகஸ்வத்த, அமைதி , நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜே.ஜே.ரத்னசிறி, அதன் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி