1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க சலுகைகள் மற்றும் சம்பளம் தேவையில்லை என இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவது தற்போது மிக முக்கியப் பொறுப்பாகும். அதற்காக இராஜாங்க அமைச்சர்கள் என்ற வகையில் அரசாங்கத்தின் பொறுப்புக்களை ஏற்று அமைச்சுக்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் புதிய இராஜாங்க அமைச்சர் பலரும் கருத்துத் தெரிவித்தார்கள்.

ஊடகத் துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார

தற்போதை நிலையில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதியினதும் பிரதமரினதும் எதிர்பார்ப்பாகும். பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. எமக்குக் கிடைத்துள்ள அமைச்சுப் பொறுப்பு என்ன என்பதை விட வழங்கப்பட்டுள்ள பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே பிரதானமானதாகும். நாங்களும் நியாயமாக செயற்பட வேண்டியுள்ளது.

புதிய அமைச்சர்கள் நியமனத்தால் நிறைய செலவுகள் ஏற்படும் என்று யாராவது நினைக்கலாம். அமைச்சருக்குரிய சம்பளத்தை பெற்றுக் கொள்ளாமல் எம்.பி.யின் சம்பளத்தை மட்டும் பெற்றுக்கொண்டு செயற்படுவதாக ஜனாதிபதியிடம் நாம் தெளிவாக கூறியுள்ளோம்.

ஜனாதிபதி அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட்டார். அரசியலமைப்பை மீறும் வகையில் எந்தவொரு செயற்பாட்டையும் அவர் மேற்கொள்ளவில்லை என்பதை விசேடமாக குறிப்பிட வேண்டும்.

வலுவான அரசாங்கம் இருந்தால் முதலீட்டாளர்களை ஈர்க்கவும் கடன் உதவிகளை பெற்றுக் கொள்ளவும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை தேவை. அதற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் எம்.பி குழு அவசியமானது. இந்த முடிவால் ஐ.எம்.எப் கடன் தொடர்பிலும் சாதகமான நிலை காணப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட இலக்கின்படி அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அதேவேளை ஜனாதிபதிக்கு எமது பாராட்டை தெரிவிக்க வேண்டும்.

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க:

சலுகைகளை எதிர்பார்க்காமல் நாம் கடந்த காலத்தில் பணியாற்றினோம். மேலும் எமக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சு பொறுப்பை எமக்குக் கிடைத்த அணிகலனாக நாம் கருதவில்லை. சலுகைகள் பெறவும் வாகனங்கள் மற்றும் எரிபொருளுக்குப் பின்னால் ஓடுவதற்காக இந்த அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே அமைச்சை பொறுப்பேற்றோம் புதிய பதவியின் மூலம் மக்களுக்கு அதிகபட்ச சேவையை அளிக்க எதிர்பார்த்துள்ளேன்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார:

கடந்த காலங்களில் நாடு அரசியல் நெருக்கடியில் இருந்தது. அந்த நிலையில் யாரும் இந்த நாட்டை பொறுப்பேற்க முன்வரவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றார். பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்றார். பாராளுமன்றத்தின் ஊடாக அவருக்கு ஆதரவை வழங்கினோம். ஜனாதிபதிக்கு உதவியாக இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். ரணில் விக்ரமசிங்கவின் கீழ் செயற்படும் வாய்ப்பு எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரின் கரங்களை வலுப்படுத்த இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டோம். பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வந்தோம். அமைச்சு பொறுப்பு தொடர்பில் எமக்கு சிக்கல் கிடையாது. கொடுக்கப்பட்ட பொறுப்பை சரிவர பயன்படுத்த வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றுவதுதான் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பாகும்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இராஜாங்க அமைச்சர்கள் பலர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். நிபந்தனையின்றி நாம் அவரை ஜனாதிபதியாக்கினோம்.இராஜாங்க அமைச்சர்கள் என்ற வகையில், சிறப்பு சலுகைகள் எதனையும் பெறாமல், எம்.பிகளுக்குரிய சம்பளத்தை மட்டுமே பெற முடிவு எடுத்துள்ளோம். நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து காப்பாற்றும் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம்.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த:

தற்போதைய நிலையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சு என்ற வகையில், நாட்டின் அனைத்து மாவட்ட அலுவலகங்களையும் பிராந்திய அலுவலகங்களையும் ஒன்று திரட்டி, அரசு இயந்திரத்தை பலப்படுத்தி, நாட்டை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும். சலுகைகளை எதிர்பார்த்து நாம் இந்த முடிவை எடுக்கவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் பலம் பெற்றால்தான் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய முடியும். இந்த நிலையில், நாட்டை கட்டியெழுப்புவதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சு தன்னால் இயன்ற பணிகளை மேற்கொள்ளும்

மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த:

நாட்டின் தற்போதைய நிலையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்த போராட்டத்தை வெற்றி கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. இந்த பதவியுடன் நாம் சம்பளம் அல்லது சலுகைகள் எதுவும் பெற மாட்டோம். நாட்டின் பொருளாதார நெருக்கடியை வெல்வதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.

உள்ளக அரசியல் தகவல்களை விரிவாக அறிந்துகொள்ள
Tamil Leader Whatsapp Group உடன் இணைந்துகொள்ளுங்கள்

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி