1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழ் மக்களின் பரம்பரை நிலங்கள் பலவந்தமாகக் கையகப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும்

சிங்கள பௌத்தமயமாக்கல் தொடர்பில் அரசாங்கத்திடம் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த செல்வராசா கஜேந்திரன் எம்.பி, “தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் பௌத்த சின்னங்கள் காணப்படுவதாகக் கூறி அங்கிருக்கும் மக்கள் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதிகளைச் சுற்றி சிங்கள இராணுவத்தினர் உட்பட மூவாயிரம் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இது மிகவும் பயங்கரமான நிலைமையாகும்” என்று எடுத்துரைத்தார்.

வனவளப் பாதுகாப்புத் திணைக்களமும் பல்வேறு வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு, தமிழ் மக்கள் பரம்பரை பரம்பராயாக வாழும் நிலங்களைக் கையகப்படுத்தி வருவதால், அம்மக்கள் மீள்குடியேறுவதில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியுள்ளன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

“வன ஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சானது, தெற்கைப் பொருத்தவரையில் அபிவிருத்திக்காகப் பணியாற்றும் அமைச்சாகவே தோற்றமளிக்கிறது. ஆனால் வடக்கு, கிழக்கைப் பொருத்தவரையில், அங்கிருக்கும் தமிழ் மக்களின் வாழும் உரிமையை இல்லாதொழித்து, அவர்களின் பரம்பரை நிலங்களை ஆக்கிரமிக்கும் அமைச்சாகவே தொழிற்பட்டு வருகின்றது.

“பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அமைச்சு, மகாவலி அதிகார சபை, வன ஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சு, சுற்றுலாச் சபை போன்றன, வடக்கு கிழக்குத் தமிழ்ச் சமூகத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றன.

“கல்ஓயா அபிவிருத்தித் திட்டம் முதல் 2009ஆம் ஆண்டு வரையிலும் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இராணுவத்தினரின் இந்த இனவொழிப்பில் இருந்து தப்பித்து இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று மீண்டும் நாட்டுக்குத் திரும்பி வந்து மீள்குடியேற எண்ணும் போது அம்மக்களின் காணிகள் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வசம் இருக்கின்றன. அதனால் அங்கு குடியேறவும் இடமளிப்பதில்லை.

“இவ்வாறு தமிழ் மக்களிம்ட இருந்து பறிக்கப்பட்ட அவர்களின் பரம்பரை நிலங்கள், அரசாங்கத்தால் அம்மக்களிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டும். யுத்தம் நிறைவுக்கு வந்து 13 ஆண்டுகளாகின்ற போதிலும், காணிகளை இழந்த மக்களுக்கு அவை மீண்டும் கிடைக்கப்பெறவில்லை. அதனால் அவர்கள் மீள்குடியேற முடியாமல் தவிக்கின்றனர்” என்று, செல்வராசா கஜேந்திரன் எம்.பி மேலும் சுட்டிக்காட்டினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி