1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தொழிலாளர் சட்டத்தை மீறி, எதேச்சதிகாரமான நிர்வாகத்தை நடத்தும் பெருந்தோட்டக்

கம்பனியொன்றின் உரிமையாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள், தொழிலாளர் சட்டம், வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நாள் சம்பளம் போன்றன தொடர்பில் நடவடிக்கை எடுக்காத நிலையிலேயே தோட்டக் கம்பனிகள் செயற்பட்டு வருகின்றன. அவர்களில் தம்மிக பெரேரா எம்.பியே முன்னணி வகிக்கிறார். ஹேலீஸ் பெருந்தோட்டக் கம்பனி அவருக்குச் சொந்தமாக் காணப்படுகின்றது” என, இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

தொழில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சுரேஸ் எம்.பி தெரிவிக்கையில், தம்மிக்க பெரேரா மற்றும் ஹரி ஜயவர்தன போன்ற பெருந்தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்கள், தொழில் சட்டங்கள் தொடர்பில் கவனத்திற்கொள்வதில்லை என்று குறிப்பிட்டார்.

“நாட்டுக்கு டொலர்களை அள்ளிக்கொண்டு வருவேன் என்று கூறி நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த தம்மிக்க பெரேரா எம்.பி, அவருக்குக் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பிலும் தெரியாதுள்ளார். குறைந்தபட்சம் அதிகரிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் சம்பளத்தைக்கூட வழங்கவில்லை.

“10 மாவட்டங்களில் காணப்படும் பெருந்தோட்டக் கம்பனிகள், நான்கைந்து தோட்ட உரிமையாளர்கள் வசமே காணப்படுகின்றன. அரசாங்கத்தை விட அதிக அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. பலாங்கொடை மற்றும் மடோல்சீமை பெருந்தோட்டக் கம்பனிகள் ஹரி ஜயவர்தனவுக்கும் ஹேலீஸ், ஹொரண, தலவாக்கலை, களனி போன்ற பெருந்தோட்டக் கம்பனிகள் தம்மிக்க பெரேரா வசமும் இருக்கின்றன.

பாலியல் வன்கொடுமை

“பெருந்தோட்டத் தொழிலாளர்களில் 75 சதவீதமானோர் பெண்களாகக் காணப்படுகின்றனர். அவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்துக் கருதாத தோட்டக் கம்பனி உரிமையாளர்களால், தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள், பெண்ணுரிமைகள் மற்றும் மனித உரிமைகள் போன்றனவும் மீறப்படுகின்றன” என்று குற்றஞ்சாட்டிய வடிவேல் சுரேஸ் எம்.பி, தொழிலிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியிலான வன்கொடுமைகள் தொடர்பில் உலகத் தொழிற்சங்கம் அறிமுகப்படுத்தியுள்ள “C 190” திட்டத்தை தோட்டங்களில் நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

“வடக்கு, கிழக்கைப் போன்று பெருந்தோட்டங்களிலும் பெருமளவு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இருப்பினும் அந்தப் பிரச்சினைகள் வெளிவராமல் இருப்பதற்குக் காரணம் பெருந்தோட்ட மக்கள் இந்த நாட்டின் மீது அன்பு கொண்டிருப்பதேயாகும். இருப்பினும், கம்பனி உரிமையாளர்கள் அந்தத் தொழிலாளர்கள் தொடர்பில் கவனிப்பதில்லை.

“தமிழீழ விடுதலைப் புலிகள் பெருந்தோட்டங்களுக்குள் நுழைய தொழிற்சங்கங்கள் இடமளிக்கவில்லை. நாம் அவர்களைத் தடுத்து நிறுத்திக்கொண்டோம். எல்லா நாட்களும் பணியாற்றுகின்றோம். கொரோனாவை காரணங்காட்டி தோட்டத் தொழிலுக்குச் செல்லாமல் இருக்கவில்லை. இருப்பினும் அவர்களுக்கு மாற்றாந்தாய் மரியாதையே கிடைக்கிறது” என்று, வடிவேல் சுரேஸ் எம்.பி மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி