1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் (நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்)

இன்று (08) நாடாளுமன்றத்தில் 43 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்நிலையில், பாதீட்டுக்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் கிடைத்தன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர். சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வேலுகுமார் எம்.பி.க்கள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.

நிதியமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று (08) பகல் முழுவதும் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் மாலை 6.50 மணியளவில் நிறைவடைந்து அதன் பின்னர் இறுதி வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிதி அமைச்சராக கடந்த நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெற்றதையடுத்து, இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு 22ஆம் திகதி பிற்பகல் நடைபெற்றது.

அங்கு வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 121 எம்.பிக்களும் எதிராக 84 எம்.பிக்களும் வாக்களித்தனர். இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பில் கட்சியின் கொள்கைகளை மீறிச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை, அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தியதாக, தமுகூ அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைமைக்குழு சார்பாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிக்கை வெளியிட்டு அவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.

“அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிக்கத் தவறி, அரசாங்கத்துக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும் கட்டுப்பாட்டையும் மீறிய காரணத்தால், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தப்படுகிறார். அத்துடன், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சியின் அரசியல் குழு எடுக்கும்” என்று, மனோ எம்.பி தனதறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி