1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

உறவனர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று (10) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா கந்தசுவாமி கோயில் முன்றலில் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்தப் பேரணி, வவுனியா பஸ் நிலையத்தை அடைந்ததும் அங்கு போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது கருத்துரைத்த உறவினர்கள், மனித உரிமைகள் மீறப்பட்ட நாட்டுக்கு, மனித உரிமைகள் தினம் எதற்கு என்று கேள்வி எழுப்பியதோடு. மனித உரிமை தினம் எமக்கு எதிர்ப்பு தினமாகும் என்றும் மனித உரிமைக மதிக்கப்படாத நாட்டில் மனித உரிமை நிறுவனம் எதற்கு என்று கேள்வி எழுப்பினர்.

தமிழ்களின் உரிமைகளை மறுக்காதே, கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே என்றும் வினவிய அவர்கள், இந்தப் போராட்டத்தின் போது, போர்க்கால மனித உரிமை மீறல் புகைப்படங்கள், கறுப்புக் கொடிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் போன்றவற்றை ஏற்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், வவுனியா, ஏ – 9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கொட்டகை அமைத்து 2120ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போராட்ட கொட்டகை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, தமிழ் எம்.பிக்களின் பதாகை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களைத் தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தமக்கு நீதி வேண்டும் எனவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு இன்றி அரசுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுக்குச் செல்லக் கூடாது எனவும், இது அரசைக் காப்பாற்றும் முயற்சி எனவும் தெரிவித்தனர்.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.வினோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரது உருவம் பொறிக்கப்பட்ட பதாகைக்கு அழுகிய தக்காளிப் பழங்களை வீசித் தாக்கினர்.

மத்தியஸ்தம் இன்றி அரசுடன் தனித்துப் பேச்சுக்குச் செல்லாதீர்கள், இலங்கை அரசைக் காப்பாற்றாதீர்கள் எனச் சத்தமிட்டவாறு தக்காளிப் பழங்களை வீசி அவர்கள் தாக்கினர்.

இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது. இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி