1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக

 மரணமடைந்துள்ளார்.

வவுனியா கல்மடு பூம்புகாரை சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே (புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில்)  வியாழக்கிழமை15.12.2022 மரணமடைந்துள்ளார்.

இவரது மகன் இராமச்சந்திரன் செந்தூரன் (பிறப்பு: 1991.02.02) என்பவர் வவுனியா நகருக்கு வழமை போன்று தொழிலுக்கு (தினக்கூலி வேலைக்கு) சென்ற வேளை 2007.05.17 அன்று (கடத்தப்படும் போது வயது 16) கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

மகனைத்தேடி வவுனியாவில் 2100 நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக்கண்டறியும் தமிழர் தாயக சங்கத்தின் உறுப்பினராக தீவிர பங்களிப்பு வழங்கி வந்த நிலையில் மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.

தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்து, உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற தாயார் ஒருவர் நோய் காரணமாக  மகனை காணாமலேயே அவர் நேற்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் பல்வேறு போராட்டங்களை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்து பல துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து வயோதிப காலங்களில் நோய்வாய்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு தமது உறவுகளை தேடியலைந்து 125 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 17 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீதிகளிலிருந்து தமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும் ஐக்கிய நாடுகள் தமது விடயங்களில் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் உறவுகள் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களது போராட்டம் (17.12.2022) இன்றுடன் 2128 நாட்களை எட்டிய நிலையில் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி