1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் (ஓம்பி)
இன்றைய தினம் (19) மேற்கொள்ளப்பட இருந்த பதிவு விசாரணை நடவடிக்கைகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (19)காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் விசாரணை நடவடிக்கை இடம்பெறுவதற்க்காக காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஆணையாளர்கள் மூன்று பேர் மற்றும் அதன்  அலுவலக உத்தியோகத்தர்கள் வருகை தந்து பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசாரணை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஓம்பி அலுவலகம் ஒரு கண்துடைப்பு நாடகம் எங்களை ஏமாற்ற இவ்வாறு பதிவுகளை மேற்கொள்ள வேண்டாம் இழப்பீடோ நட்டஈடோ எமக்கு  வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவினர்களோடு போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகை தந்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த ஓம்பி அலுவலக ஆணையாளர்கள் பதிவு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யவேண்டும் அதன் பின்னர் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் ஆகவே இன்றைய பதிவு நடவடிக்கையில் கலந்துகொண்டு உங்கள் விபரங்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுகொண்டனர் . இதற்க்கு எதிர்ப்பு வெளியிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எத்தனை தடவை பதிவுகளை விசாரணைகளை எத்தனை ஆணைக்குழுக்களிடம் முன்வைத்துள்ளோம் எல்லாமே ஏமாற்று வேலை ஆகவே இவ்வாறு பதிவு நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டு கொண்டனர் . அதன் பின்னர் தாம் பதிவு நடவடிக்கை விசாரணை என்பனவற்றை நிறுத்துவதாக தெரிவித்த ஓம்பி அலுவலக ஊழியர்கள் மீண்டும் மாவட்ட செயலகத்துக்குள் சென்றுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் காணாமல் போனோர் அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடந்த வாரம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்கள் பலருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று , புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு உள்ளிட்ட ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 244 பேருக்கே இவ்வாறு விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .
இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில்இன்று (19) கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 29 பேருக்கும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 16 பேருக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 37 பேருக்கும்,துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 32 பேருக்கும், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 08 பேருக்குமாக 122 பேருக்கும்
நாளையத்தினம் (20) கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 10 பேருக்கும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 28 பேருக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 39 பேருக்கும்,துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 32 பேருக்கும், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 13 பேருக்குமாக 122 பேருக்குமாக மொத்தமாக 244 பேருக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பலர் விசாரணைக்கு சமூகம் தரவில்லை இவ்வாறு அறிவித்தலின் படி இன்றையதினம் விசாரணைக்காக வருகைதந்தவர்கள் கூட போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்களோடு இணைந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டம் இடம்பெற்று கொண்டிருந்த வேளை 20 க்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை புகைப்படம் எடுத்தும் கண்காணிப்பில் ஈடுபட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி