1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

300 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள், 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 1000 துப்பாக்கி தோட்டாக்கள் பிடிபட்ட வழக்கு

தொடர்பாக தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்த 9 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இக்கடத்தல் சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் வெளிநாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வழக்கில் இருந்து ஜாமீனில் வந்தாலும் விடுதலையானாலும், அவர்களுடைய நாட்டுக்கு அனுப்பும் வரை சிறப்பு முகாமிலேயே தங்க வைக்கப்படுவார்கள்.

தற்போது மேற்படி சிறப்பு முகாமில் இலங்கை, பங்களாதேஷ், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா, தெற்கு சூடான், பாகிஸ்தான், இங்கிலாந்து, சீனா உட்பட பல நாடுகளை சேர்ந்த 152 பேர் உள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதியன்று, கேரளாவை சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை டி.ஐ.ஜி காளிராஜ் மகேஷ்குமார், சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையில் அதிகாரிகள் 15 பேர் துணை இராணுவப் படையினர் சுமார் 70 பேருடன் திருச்சி சிறப்பு முகாமில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

அதிகாலை 5 மணி முதல் மாலை வரை நடந்த இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட அலைபேசிகள், மடிக்கணினி, தங்க நகைகள், பென்டிரைவ், சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

அப்போது சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த குணசேகரன் உட்பட 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேரளா மாநிலம் விழிஞ்சியம் அரபிக்கடல் பகுதியில் இலங்கையை சேர்ந்த 6 பேர் வந்த மீன்பிடி படகில் இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த படகில் இருந்து 300 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 5 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 1,000 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இலங்கையச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களுக்கும் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

மேலும், அந்த படகில் இருந்து சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். அந்த ஆவணங்கள் தடைசெய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்துக்கு தொடர்புடையதாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கும் நோக்கத்தில் இந்த கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டது.

இந்த வழக்கின் தொடர்ச்சியாக தான் திருச்சி சிறப்பு முகாமுக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் சென்று, குணசேகரன் உட்பட 12 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும், இவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே என்.ஐ.ஏ. சோதனை நடத்திவிட்டு சென்ற மறுநாளே கடந்த ஜூலை 21ஆம் திகதி அமலாக்கத் துறையினரும் சிறப்பு முகாமிற்கு வந்து சோதனை நடத்திவிட்டு சென்றனர்.

அதன்பிறகு மாநகர பொலிஸ் கமிஷனர் கார்த்திகேயனின் உத்தரவின் பேரில், சிறப்பு முகாமுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்திய பொலழஸார் அங்குகிருந்து ஏராளமான அலைபேசிகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அலைபேசிகளை மீண்டும் ஒப்படைக்கக்கோரி சிறப்பு முகாமில் உள்ளவர்கள் தொடர் போராட்டமும் நடத்தினார்கள்.

இந்தநிலையில் கேரள என்.ஐ.ஏ. சூப்பிரண்டு தர்மராஜ், துணை சூப்பிரண்டு செந்தில் தலைமையிலான 8 அதிகாரிகள் திங்கட்கிழமை சிறப்பு முகாமிற்கு வந்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் ஏற்கனவே அவர்கள் விசாரித்த இலங்கையை சேர்ந்தவர்கள் இதனையடுத்து சிறப்பு முகாமுக்கு சென்ற அக் குழுவினா், இலங்கையைச் சோ்ந்த குணசேகரன் (42), திலீபன் (33), புஷ்பராஜா என்கிற பூக்குட்டி கண்ணா (41), லடியா (42), அலக பெருமக சுனில் காமினி என்கிற நீலகண்டன் (41), ஸ்டான்லிகென்னடி பொ்னாண்டஸ் (42), தனுக்கா ரோஷன் (40), வெல்லாசுரங்கா, முகமது ஆஸ்மின் ஆகிய 9 பேரை தனித்தனியாக அழைத்து துருவி, துருவி விசாரித்தனர்.

பின்னர் 9 பேரையும் கைது செய்வதற்காக அனுமதி கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து கடிதம் வழங்கினர். மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் 9 பேர் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை கேட்டார்.

இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இது தொடர்பான ஆவணங்களை ஆட்சியரிடம் காண்பித்துவிட்டு 9 பேரையும் கைது செய்து திருச்சியில் இருந்து சென்னைக்கு அழைத்து சென்றனர். மேலும் அவர்களுக்கு போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதையொட்டி அங்கு ஏராளமான பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி