1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

“ஜனநாயகத்துக்காகவும் நாட்டின் நன்மைக்காகவும் செயற்படும் சமூக சக்திகளின் பாரிய முயற்சியின் காரணமாக

நாடாளுமன்றத்தில் 21ஆவது திருத்தத்தை நிறைவேற்றி இரண்டு மாதங்கள் கடந்திருந்த போதிலும், அந்த திருத்தத்தின் ஊடாக எதிர்பார்த்த அடிப்படை மற்றும் முக்கியத்துவம்வாய்ந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது தொடர்பில் நாம் மிகுந்த மன வேதனை அடைகின்றோம்” என்று முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“20ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் ஊடாக பலவீனமடையச் செய்திருந்த அரசியலமைப்பையும் தனிநபரை மையப்படுத்திய அதிகார குவியலையும் அகற்றி, ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்துகளை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய வகையிலான சிவில் சமூகங்களின் பங்களிப்புடன்கூடிய அரசியல் அமைப்பு சபையின் ஊடாக வெளிப்படை தன்மையுடனான ஜனநாயக ஆட்சி கட்டமைப்பை உருவாக்குவதற்கே 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

“மேலும் 21ஆவது திருத்தம் நிறைவேற்றியதுடன் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைவாக முழுமையான அரசியலமைப்பு சபையை நியமித்தல் மற்றும் 20ஆவது திருத்தத்தின் ஊடாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆணை குழுக்கள் அனைத்தும் 21 வது திருத்தத்திற்கு அமைவாக உருவாக்கப்படும் அரசியல் அமைப்பு சபையின் இணக்கத்திற்கு அமைவாக மீள் நியமிப்பதும் எதிர்பார்க்கப்பட்டது.

“அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்பட வேண்டிய சிவில் சமூக பிரதிநிதிகளை இதுவரை நியமிக்கவில்லை. அதேபோன்று 21ஆவது திருத்தத்தின் கீழ் சுயாதீன ஆணை குழுக்களை வலுப்படுத்தவும் இல்லை.

“20ஆவது திருத்தத்தின் கீழ் நியமிக்கப்பட்டிருக்கும் ஆணை குழுக்களின் சில உறுப்பினர்கள் அரசியல் கட்சி செயற்பாட்டாளராக இருப்பதின் காரணமாகவே இவற்றை மீள் கட்டமைக்க வேண்டியுள்ளது.

“இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கின்றது. குறிப்பாக நாட்டின் நன்மையையும், ஜனநாயகத்தையும் விரும்பும் சிவில் சமூகங்கள் மற்றும் அரசியல் சக்திகளின் பாரிய அர்ப்பணிப்பின் ஊடாக பெற்றுக்கொண்ட நீதியின் ஆதிக்கத்திற்கான இடைவெளியை கொச்சைப்படுத்துவது மிகப்பெரிய அவமானமாகவே கருதுகின்றோம்.

“இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு நாம் கட்டாயமாக கண்டனம் தெரிவித்தாக வேண்டும்.  இல்லையெனில் அது தேசத்திற்கு இளைக்கும் பாரிய துரோகம் ஆகும்.

“21ஆவது திருத்தத்திற்கு மதிப்பளித்து அரசியலமைப்பு சபைக்கான சிவில் சமூக பிரதிநிதிகளை தாமதமின்றி நியமிக்குமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்துகின்றது.

“அதேபோன்று 21ஆவது திருத்தத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைய சுயாதீன ஆணை குழுக்களுக்கு நியமித்திருக்கும் தகுதி வாய்ந்த உறுப்பினர்களும் உள்ளடங்கும் வகையில், அவற்றின் உறுப்பினர்களை மீள் நியமிக்குமாறும் வலியுறுத்துகின்றோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி