1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரசியலமைப்புப் பேரவைக்கு மூன்று சிவில் உறுப்பினர்களை நியமிக்கும் விவகாரம், தீர்மானமின்றி

ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நியமனமானது, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இணக்கப்பாட்டுடனேயே இடம்பெற வேண்டும் என்பது நியதி.

அரசியலமைப்பின் 21ஆவது சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பேரவையில் பத்து உறுப்பினர்கள் உள்ளடக்கப்படுவதோடு, அதில் அடங்கும் சிவில் உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கப்பாட்டுடனேயே நியமிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக, சபாநாயகர் தலைமையில் நேற்றைய தினம் (29) நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போதிலும், எவ்வித உடன்பாடுமின்றி அந்தக் கூட்டம் நிறைவுபெற்றது.

அரசியலமைப்பு சபைக்கான மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்புப் பேரவைக்க நியமிக்கப்பட வேண்டிய சிவில் உறுப்பினர்கள் இதுவரையில் நியமிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இது இந்தத் தேசத்துக்குச் செய்யப்படும் பாரிய துரோகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 21ஆவது திருத்தத்தை நிறைவேற்றி இரண்டு மாதங்கள் கடந்திருந்த போதிலும், அந்த திருத்தத்தின் ஊடாக எதிர்பார்த்த அடிப்படை மற்றும் முக்கியத்துவம்வாய்ந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது தொடர்பில் நாம் மிகுந்த மன வேதனை அடைகின்றோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுவதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவைக்கு 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 3 சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் தற்போது 5 சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எஞ்சிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்மொழிந்ததுடன், தமிழ்கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன.

இதற்கு உத்தர லங்கா சபாகய கட்சி எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனமானது இழுபறி நிலையில் உள்ளதாக மனோ கணேசன் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தர்மலிங்கம் சித்தார்த்தனின் நியமனத்திற்கு தொடர்ந்தும் அழுத்தம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியலமைப்பு பேரவையில் உள்வாங்கப்படவுள்ள மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களில், மலையக இந்திய வம்சாவளி தமிழர் சார்பில் பிரதாப் ராமானுஜத்தின் பெயரை பரிந்துரைத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி