1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உடனடியாக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவந்து, இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு ஒன்று வரப்போவதில்லை

என கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழ் மக்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்கின்ற சமஷ்டி முறையிலான தீர்வு அல்லது அதைப் போன்ற முறையில் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு தீர்வாகும்.

ஆனால், இன்றுள்ள வினா என்னவென்றால், தற்போதைய அரசாங்கத்தின் அல்லது ஜனாதிபதியின் எஞ்சிய ஆட்சிக்காலத்துக்குள், இனப்பிரச்சினைக்கு இறுதியான தீர்வாக அமையக்கூடிய சமஷ்டி முறையிலான தீர்வு என்பது எந்தளவு சாத்தியமாகும் என்பதாகும். அது மாத்திரமல்லாது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடும் முக்கியமாகும்.

அதாவது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் 13ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்று, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்ற தீர்வொன்றை வழங்குகின்ற விதத்தில் இந்தியா எந்தளவு அழுத்தங்களை பிரயோகிக்கும் என்பது கூட சந்தேகத்துக்கிடமான ஒன்றாகும்.

ஏனெனில், 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா தெரிவிக்கின்றதே தவிர, அதற்கு அப்பால் செல்வது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறான நிலையில் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கும் கருத்து என்பது தமிழ் மக்களை பொறுத்தமட்டில் முக்கியமான விடயமாகும்.

ஜனாதிபதியின் இந்த கூற்றை தமிழ் மக்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள் என்பது முக்கியமாகும். என்னை பொறுத்தவரை, தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வானது ஒரு படிமுறையிலே இருக்க முடியும்.

ஏனெனில், உடனடியாக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவந்து, இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு ஒன்று வரப்போவதில்லை.

அதனால் இந்த சந்தர்ப்பத்தில் ‘வைத்தால் குடுமி எடுத்தால் மொட்டை’ என்ற நிலையில் தமிழ் மக்கள் இருக்க முடியாது.

அதனால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தின் முதலாவது படி நிலையாக, 13ஆம் திருத்தத்தின் அதிகார பரவலாக்கத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

அவ்வாறு இல்லாவிட்டால் மாகாண சபை முறைமையும் இல்லாமல் செல்லும் நிலை தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும்.

அத்துடன் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவிக்கின்றபோதும் அதில் இருக்கும் அனைத்து விடயங்களையும் முழுமையாக நடைமுறைப்படுத்துவாரா என்ற கேள்வியும் எழுகின்றது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி