1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒருமித்துச் செயற்படுவதற்கு முஸ்தீபு செய்து வருகின்ற நிலையில் தற்போது வரையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கொள்கை அளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள புளொட், ரெலோ, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தரப்புக்களுக்கிடையில் முதற்கட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

குறித்த பேச்சுவார்த்தையின்போது கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தரப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனான ஆரம்பப் பேச்சுக்கள் திருப்திகரமான நிலையில் இல்லாத சூழலில் மீண்டும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் அடுத்து வரும் காலத்தில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்படவுள்ளதாவது,

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் செயற்படுகின்ற சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் அனைத்தும் ஒருமித்துச் செயற்படுவதற்கு முஸ்தீபு செய்துள்ளன.

இது தொடர்பான பேச்சுவார்த்தையொன்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையின்போது முதலாவது விடயமாக, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் தற்போதைய தென்னிலங்கை தலைவர்களான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்டவர்கள் தென்னிலங்கை மக்களுக்கு திரிவுபட்ட கருத்துக்களையே வெளிபடுத்துகின்றார்கள்.

அத்துடன், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வது தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டையும் அவர்கள் அறிவிப்பதாக இல்லை.

இவ்வாறான நிலையில் முதற்கட்டமாக தமிழ் பேசும் கட்சிகள் ஒருமித்து தென்னிலங்கை மக்களுடன் நேரடியாக உரையாடலை ஆரம்பிப்பதோடு உரிமைகளை கோருவதற்கான நியாயமான விடயங்களை அம்மக்கள் மத்தியில் தெளிவுபடுத்துவது பற்றி ஆராயப்பட்டுள்ளது.

இரண்டாவது விடயமாக, அனைத்து வகையான தேர்தல்களிலும் விட்டுக்கொடுப்புக்களுடன் ஒருமித்து செயற்பட முடியுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து, பொறிமுறையொன்றை நோக்கி நகருதல் பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மூன்றாவது விடயமாக, தமிழ் பேசும் மக்களுக்கு பொருத்தமான அரசியல் தீர்வினை ஐக்கிய இலங்கைக்குள் பெற்றெடுப்பதோடு, அதற்கு முன்னதாக இந்திய அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சர்வதேசத்துக்கு இலங்கை அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை பிரயோகத்தலை பற்றி காணப்படுகிறது.

இந்த விடயத்தில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்வதில்லை என்பதிலும் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் முன்னெடுக்கப்பட்ட மேற்படி விடயங்கள் சம்பந்தமான பேச்சுக்களின்போது, 13ஆவது திருத்தச்சட்டத்தினை மையப்படுத்திய எந்தவொரு விடயத்துக்கும் தமது தரப்பு ஆதரவளிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட பேச்சுக்களை அக்கட்சியுடன் முன்னெடுப்பதற்கு முனைப்பு காண்பிக்கப்படுகிறது.

அத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடனும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இந்த விடயங்கள் சம்பந்தமாக அடுத்துவரும் காலப்பகுதியில் சாத்தியமான பல்வேறு வெளிப்பாடுகள் ஏற்படுமென்றும் குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்ற தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி