1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் JICA நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று (17) நடைபெற்றது.

இலங்கையின் நீர்வளத்துறை, மலையக பெருந்தோட்ட சமூகத்தினர் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

நீர்வளத்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தற்போதைய செயல்திறன் மற்றும் அதனை எவ்வாறு மேம்படுத்துதல் என்பது குறித்தும் சுகாதார பாதுகாப்பான நீர் உற்பத்தி ஆற்றல் தேவையை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் பற்றியும் ஆராயப்பட்டன. சூரிய சக்தி மின் திட்டத்துக்கான முதலீடுகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்கால திட்டம்

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பம் பற்றி ஆராய்கையில், ஜப்பானிய தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கி JICA பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

பெருந்தோட்டத்துறை மறுசீரமைப்பு

பெருந்தோட்டத்துறையின் மறுசீரமைப்பு தொடர்பான தமது திட்டத்தை அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார். பெருந்தோட்டத்துறை மக்கள் எதிர்நோக்கும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட இதர பிரச்சினைகளும் சுட்டிக் காட்டப்பட்டன. மலையக மாற்றத்திற்கான புதிய திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

தொழிலாளர்களின் கௌரவத்தை உயர்த்துவதற்கும் தோட்டத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் அமைச்சரின் அர்ப்பணிப்பு அனைத்துத் தரப்பினரிடமும் ஆழமாக எதிரொலித்தது. மலையக மக்களின் வரலாற்று ரீதியிலான பங்களிப்பை ஆவணபடுத்துவதற்கான திட்டம் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

மலையக பெருந்தோட்ட சமூகங்களின் நிலைமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு தமது முழு ஆதரவு வழங்கப்படும் என JICA பிரதிநிதிகள் சந்திப்பில் உறுதியளித்துள்ளனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி