1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன்

இணைந்ததாக இலங்கை தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘INFOTEL தகவல் தொழில்நுட்ப கண்காட்சி’ நவம்பர் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக மாநாடு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தின் தலைமையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்றது.

இக்கண்காட்சி இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், டிஜிட்டல் பொருளாதாரம், இணைய இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல், டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பாதுகாப்பான டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் தீர்வுகளை பாதுகாத்தல், பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான மனித வளத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த கண்காட்சி சிறந்த வாய்ப்பை வழங்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ளதாகவும், இதனால் வினைத்திறன் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், 2030 ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான அரசாங்க வேலைத்திட்டத்தை வெற்றிகொள்ளும் நோக்குடன் ‘INFOTEL தகவல் தொழில்நுட்ப கண்காட்சி’ ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் அவர் தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் சபைக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் சபையின் தலைவர் இந்திக்க டி சொய்சா, 2030 ஆம் ஆண்டளவில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரச வருமானத்திற்கு அளிக்க எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்த கண்காட்சியானது டிஜிட்டல் புத்தாக்க சூழலை உருவாக்குவதோடு, டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தவும், இந்த நாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் உதவும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கண்காட்சிக்கான அனுசரணை காசோலைகளும் இதன் போது கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சின் மேலதிகச் செயலாளர் (அபிவிருத்தி) எம்.பி.என்.எம். விக்ரமசிங்க, ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ‘INFOTEL’ ஞானம் செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி