1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாம் மிகவும் சவாலான காலத்தில் வாழ்கிறோம். அந்தச் சவால்களை வெற்றி கொண்டு, இந்நாட்டுச் சிறுவர்களுக்கு சுபீட்சமான

எதிர்காலத்தை வழங்குவதற்கும், வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் நாம் இப்போது முயற்சித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்து செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்கும் பயணத்தில் தற்போதைய தலைமுறையினர் வழிகாட்டிகளாக இருப்பார்கள். 

அதற்கேற்றவாறு சிறுவர்களை, புதிய தொழில்நுட்ப அறிவு, செயற்திறன்மிக்க மற்றும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சமநிலையான ஆளுமை கொண்ட,  பயன்மிக்க பிரஜைகளாக சமூகமயமாக்க கல்வி முறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அபிவிருத்தியடைந்த இலங்கையின் பெருமைக்குரிய பங்காளர்களாக இன்றைய தினம் தமது கல்வி நடவடிக்கைகளில் உரிய முறையில் ஈடுபட்டுத் தேவையான அறிவைப் பெறுவதற்கு நாட்டின் சகல பிள்ளைகளும் தங்களை அர்ப்பணிப்பார்கள் என நான் நம்புகிறேன்.

மேலும், உலகெங்கிலும் காலங்காலமாகப் பாதுகாக்கப்பட்டு வரும் மதிப்புமிக்க நற்பண்புகளைப் பிரதிபலிப்பதன் மூலம் இலங்கைப் பிரஜைகளாகிய நாம் சர்வதேச முதியோர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

சிறுவர்கள் மற்றும் முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் நலனுக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதை நினைவுகூர்ந்து, அனைவருக்கும் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறுவர்கள் ஒரு நாட்டின் எதிர்காலம் மற்றும் முதியவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அந்த
எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றிய கண்ணியமிக்கவர்கள்.

சிறுவர்கள்கள் ஆச்சரியம் நிறைந்த கண்களுடன், உற்சாகத்துடனான வார்த்தைப் பிரயோகத்துடன்
உலகின் அழகையும் சிறப்பையும் அனுபவிக்க முயற்சி செய்கிறார்கள். எனவே, அவர்களுக்கு
வாய்ப்பளிக்க வேண்டியது அனைவரின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது உலக சிறுவர் தினத்தையும், உலக முதியோர் தினத்தையும் முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

துரதிஷ்டவசமாக நாகரீகமான மனித சமூகத்தில் சிறுவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடிய மற்றும்
நடக்கக்கூடாத விடயங்களை இலங்கையின் நான்கு மூலைகளிலிருந்தும் தினமும் பார்க்கிறோம்,
கேட்கிறோம்.

சிறுவர்களின் பாதுகாப்பில் பலத்த சந்தேகம் ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், மறுபுறம் சிறுவர்களின்
சத்துணவு தொடர்பான பாதிக்கக்கூடிய கடுமையான நிலைமையும் இன்று உருவாகியுள்ளது. 

ஏராளமான பாடசாலை மாணவர்கள் போதியளவு உணவு இன்றி காணப்படுகின்ற அவல நிலை இதனால்
சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துக் காணப்படுகின்றது. 

மற்றும் திரிபோஷா போன்ற சிறுவர்களுக்கான மேலதிக உணவுகள் அரிதானவையாக இருப்பதும் கவலையளிக்கின்றது.

கல்வியில் கூட சிறுவர்களுக்கு சம வாய்ப்பு கிடைத்துள்ளதா என்பதை மீளக் கவனத்தில் கொள்ள
வேண்டிய விடயமாகியுள்ளது.

குடும்பம், பாடசாலை, உறவினர் சமூகம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சிறுவர்களுக்கு ஏற்ற
இடங்களாக மாற்றப்பட வேண்டும், மேலும் அது சமூக மாற்றத்தின் மூலம் மேற்கொள்ளப்படல்
வேண்டும்.

சிறுவர்களும் முதியவர்களும் ஒரு நாட்டின் வளம், இந்த நாட்டில் முதியோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட
3 மில்லியனை எட்டியுள்ளது. 

முதியோர் நலன், பாதுகாப்புக்கான சட்ட ஏற்பாடுகள், வலுப்படுத்தல் மற்றும் தேசிய முதியோர் நலக் கொள்கையை செயற்படுத்துவதற்கான விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை ,ந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புவதாக எதிர்க்கட்சி தலைவர் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய சிறுவர்களே நாளைய சந்ததியின் செயல்களுக்கான உத்வேகமாக இருக்கப் போகிறார்கள். 

சிறுவர்களின் எண்ணங்களும் செயல்களும் அழகிய முன்மாதிரிகள் கொண்டு நெறியாள்கை செய்யப்படல் வேண்டும் எனறு தனது சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் கிழக்கு மாகாண ஆளுனரும் இ.தொ.கா. தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சிறுவர் தின வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சிறுவர்கள் தங்கள் உலகை எப்போதும் வியப்போடும் ஆய்ந்தறிகின்ற ஆர்வத்தோடும் காண்கிறார்கள்.அவர்களின் கனவுகளுக்கு ஆயுள் கொடுக்கின்ற அவகாசத்தை நாம் தோற்றுவிக்க வேண்டியுள்ளது.

வெற்றியைப் பெறுகின்ற சிறுவர்களை ஊக்கப்படுத்தும் நாம்,தோல்வியைக் கண்டு துவண்டு விடக் கூடாது என்ற உண்மையையும்,உத்வேகத்தையும் வழங்க வேண்டும். முயற்சிகள் மூலமாக எதனையும் சாதிக்கலாம். கனவுகளை வெல்வதற்கு விடாமுயற்சி முக்கியமானது என்பதை அவர்கள் மனதில் விதைக்க வேண்டும்.

ஒரு சமூகமாக எமது சிறுவர்களை நற்பண்புகளோடு வளர வைக்கின்ற மிகப் பெரிய பொறுப்பு நம்மெல்லோருக்கும் இருக்கிறது. சக மனிதர்களை மதித்து மரியாதை செய்கின்ற பண்பை நாம் சிறுவர்களின் மனதில் நிறைவாக நிரப்ப வேண்டும்.

நமது வாழ்க்கையை முக்கியமானதாக மாற்றுகின்ற அளப்பரிய சக்தி சிறுவர்களுக்கே உண்டு.சமூகச் சூழலில் அதி உன்னதமான வளமாக இருப்பவர்களும் சிறுவர்கள் தான். அவர்களின் கட்டற்ற கற்பனாசக்திக்கு நிகர் அவர்களே தான்.

அற்புதமான அழகிய பண்புகளோடு நம் சிறுவர்கள் வளர்கின்ற போது,அவர்கள் மகத்துவம்,விழுமியம்,நம்பிக்கை, நற்சிந்தனை ஆகியவற்றைக் கொண்டு அவர்களைப் பின்தொடர்கின்ற சந்ததிக்கும் உத்வேகம் கொடுக்கின்ற அற்புதமானவர்களாய் உருவெடுப்பார்கள்.

எனவே இன்று சிறுவர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து சிறுவர்களுக்கும் சிறுவர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது வாழ்த்துச் செய்தியில் கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி