1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மன்னார் படுகையில் 250 மெகாவொட் திறன் கொண்ட புதிய காற்றாலையை அமைப்பது தொடர்பாக இந்தியாவின்

அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான ஆவணங்களில் கையொப்பமிடும் பணியை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விரைவுபடுத்தி வருகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஷரித்த ஹேரத் தெரிவித்தார்.

நவம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படுவதற்கு அமைச்சு தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2009ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் படி, எந்தவொரு தனியார் நிறுவனமும் உள்நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு குறிப்பிட்ட செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். ஆனால், மேற்படி செயல்முறை இரண்டு அரசாங்கங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு அமையப் பின்பற்றப்படவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் இரண்டு அரசாங்கங்களுக்கு இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என காட்டிக்கொண்டு போலியான முறையில் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.

புதிய மின்சாரச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் பொது முகாமையாளர்கள் உள்ளிட்ட குழுக்கள் சகல உடன்படிக்கைகளையும் இறுதி செய்ய அவசரம் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

30 வருட காலத்துக்கு கைச்சாத்திடப்படவுள்ள இந்த உடன்படிக்கையின் மூலம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரம் 46 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் எனவும் எம்.பி தெரிவித்துள்ளார்.

மன்னார் மற்றும் பூநகரி காற்றாலைகளை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கும் முறை தெளிவாக இல்லை எனத் தெரிவித்த பேராசிரியர், சட்டத்துக்கு புறம்பாகச் செயற்படும் மின்சார சபை அதிகாரிகள் இது தொடர்பில் எதிர்காலத்தில் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல வளர்ச்சி திட்டங்களைக் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் கைப்பற்றியது.

இந்த நிலையில் கௌதம் அதானிக்கு இலங்கை திட்டத்தில் ஜாக்பாட் அடித்துள்ளது என்றும் இதனால் அதானி குழுமம் மீது முதலீட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கை கிடைத்துள்ளது என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

“ஏற்கனவே இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் சமீபத்தில் சீன கப்பல்களும் இலங்களைத் துறைமுகத்திற்கு வந்தது.

“இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக இந்தியா - அமெரிக்கா கூட்டணி, அந்நாட்டில் அதானி குழுமம் கட்டும் புதிய துறைமுகத்திற்கு அமெரிக்கா சுமார் 533 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை அளிப்பதாக அமெரிக்க அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

“இலங்கை தலைநகரான கொழும்பில் அதானி குழுமம் டீப்வாட்டர் வெஸ்ட் கண்டைனர் டெர்மினல் கட்டுமான திட்டத்தைச் செயல்படுத்தி வரும் வேளையில் இத்திட்டத்திற்கு 533 மில்லியன் டாலர் அளவிலான நிதியை சர்வதேச வளர்ச்சி நிதியியல் அமைப்பு வாயிலாக அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

“இது ஒருபுறம் இருக்க அதானி கிரீன் நிறுவனம் இலங்கையின் மின்சாரத் துறையில் சுமார் 750 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை செய்ய உள்ளதாகக் கரண் அதானி தெரிவித்தார்.

“இதன் மூலம் அதானி கிரீன் வர்த்தகம் வெளிநாடுகளுக்கு விரிவாக்கம் அடைந்து பல புதிய வாய்ப்புகளும், அதிக வருமானமும் கிடைக்கும்.

“அதானி கிரீன் நிறுவனத்தின் முதலீட்டு வாயிலாக இலங்கையின் மின்சார உள்கட்டமைப்பு பெரிய அளவில் மேம்படுவது மட்டும் அல்லாமல் நிலையான மற்றும் கிரீன் எனர்ஜி கட்டமைப்பாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

“அதானி குழுமம் இலங்கை துறைமுகத்தில் 2026 வரையில் சுமார் 1 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது” என்று, அச்செய்திகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி