1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கடந்த வருடத்தில் தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் தண்டவாளத்துக்கு கொண்டுவர

முடிந்ததாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்காகப் பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்த மக்களின் காலை வாறும் வகையில் இன்னும் சிலர் முயற்சித்துக்கொண்டு இருந்தனர் என்றும் குறிப்பிட்டார்.

2024 நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் இன்று (13) சமர்ப்பித்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விசித்திரக் கதைகளின் அடிப்படையில் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு... நாட்டின் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்த ஜனாதிபதி, துரதிஷ்டவசமாக நாட்டிலுள்ள சில தரப்பினர், இன்னும் இந்த நிலைமையைப் புரிந்துகொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளை பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை அர்ப்பணிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த கடினமான பாதையில் நாம் தொடர்ந்து சென்றால், விரைவில் சிறந்த பொருளாதார சூழலை உருவாக்க முடியும் என்றும், கடந்த வருடத்தை திரும்பிப் பார்க்கும்போது, ​​நாடு சரியான பாதையில் செல்வது 100% உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதுவரையிலான பயணத்தில் உள்ள குறைபாடுகளை உணர்ந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு பணிவுடன் பாடுபடுவோம் என்று தெரிவித்தார்.

பணவீக்க வீதத்தை ஒற்றை இலக்கமாகக் குறைக்க முடிந்ததன் மூலம், அதிக பணவீக்கத்தின் அழிவிலிருந்து நாடு காப்பாற்றப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்பது மிகவும் கடினமான செயற்பாடாகும் என தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சியை கைப்பற்றும் அரசியல் நோக்கங்களை முன்வைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் கனவு மாளிகைகளை நிர்மாணித்தால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படலாம் எனவும் தெரிவித்தார்.

இதுவரையான பயணத்தின் வெற்றிக்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமே காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக 2022ஆம் ஆண்டு போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்னோக்கி செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நட்டத்தில் இயங்கி வரும் அரச நிறுவனங்களின் இழப்பை ஈடுசெய்வதற்காக தாம் தொடர்ச்சியாக அரச வங்கிகளில் கடன் பெற்றுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அந்த நிலையைக் கருத்திற் கொண்டு வங்கிகள் நலிவடைவதையும், வீழ்ச்சியடைவதையும் தடுப்பதற்கு அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது என அவர் சுட்டிக்காட்டினார்.

குறைந்த செலவில், பாரியளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பிரதான மின்சாரத் திட்டத்தில் சேர்ப்பதற்குத் தேவையான அனைத்து சட்டத் தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும், திறமையற்ற மின்சார சபையை வினைத்திறன்மிக்க நிறுவனமாக மறுசீரமைப்பதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தற்போது தொகுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரச துறையின் சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபாவும், காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உள்ளிட்ட பொது நலனுக்காக 30 பில்லியன் ரூபாவும், கடன் வட்டிக்காக 220 பில்லியன் ரூபாவும் என 03 பிரதான செலவுகளுக்காக அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்ட காலமாக இடம்பெற்று வரும் வரி ஏய்ப்புக்கள் உள்ளிட்ட பற்றாக்குறைகளை சரிசெய்வதற்காக இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பல யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் இதுவரை அமுல்படுத்தப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார முறைமைகள் தோல்வியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் அமைப்பு மற்றும் பொருளாதார முறைமைகளை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் மற்றும் தற்போதைய சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப புதிய பொருளாதார அடித்தளத்தை அமைக்கும் வரவு செலவுத் திட்டமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடங்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 60 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் அது மூன்று மடங்காக 183 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

பாரம்பரிய சொத்துக்களை இழந்த விவசாயிகளுக்கு அந்த விளைநிலங்களை முழுமையாக தனியாருக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதன் மூலம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு 11,250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு தேசிய கொள்முதல் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் அது நடைமுறைப்படுத்தப்படும்.

வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான புதிய வழிமுறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் புதிய திட்டங்களை மதிப்பாய்வு செய்ய அரச குழுவை அமைத்தல். அந்த அமைப்புக்கு வெளியே எந்த திட்டத்திற்கும் அரச பணம் ஒதுக்கப்படாதென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி