1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவில் தடுப்புக் காவலில்

வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சந்தேகநபரின் உடலில் அடிகாயங்களுடன் கூடிய சிராய்ப்புக் காயங்களும், கண்டல் காயங்களும் உள்ளன என்றும், இது இயற்கையான நோயால் ஏற்பட்ட மரணம் அல்ல என்றும் சட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் காயங்கள் உயிரிழந்த சந்தேகநபரின் கைகளிலும், கால்களிலும் முதுகிலும், பின்பக்கத்திலும் உள்ளன என்றும் சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்புக்கான காரணம் புலனாய்வில் உள்ளது என்றும், அதேவேளை மேலதிக பகுப்பாய்வுக்காக உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் சட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் இன்று நண்பகல் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரே நேற்று உயிரிழந்தார். சித்தங்கேணி, கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது 25) என்ற இளைஞரே உயிரிழந்தார்.

சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சந்தேகநபர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் கடந்த வாரம் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்இருவரும் நான்கு நாள்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவும் இல்லை, விடுவிக்கப்படவும் இல்லை என்பதனால் உறவினர்கள் அச்சமடைந்திருந்தனர்.

இதையடுத்து உயிரிழந்த நபரின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்திருந்தார். அதனால் சந்தேகநபர்கள் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.

பொலிஸாரின் ஆட்சேபனையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் கட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிறைக்காவலரின் காவலுடன் மேற்படி சந்தேகநபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பயனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சவ அறையில் வைக்கப்பட்டிருந்தது. உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே உயிழப்புக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பகுதியில் இன்று நண்பகல் முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு இரும்புப் பாதுகாப்பு வேலிகள் வீதியில் வைக்கப்பட்டுள்ளன. ஏனைய பொலிஸ் நிலையங்களில் இருந்தும் மேலதிகமாகப் பொலிஸார் வரவழைக்கப்பட்டுப் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் இடம்பெறலாம் என்று கிடைத்த தகவலின் பிரகாரம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தங்கேணி இளைஞரைப் பொலிஸார் கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தியதால்தான் அவர் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பொலிஸார் தன்னை எவ்வாறு சித்திரவதை செய்தனர் என்று வைத்தியசாலையில் மேற்படி இளைஞர் தெரிவித்திருந்த வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

இந்நிலையில், இளைஞரின் உறவினர்கள், நண்பர்களையும், ஊரவர்களையும் மற்றும் பொதுமக்களையும் திரட்டி பாரிய போராட்டம் ஒன்றைப் பொலிஸ் நிலையப் பகுதியில் முன்னெடுக்கவுள்ளனர் என்று பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையிலையே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஒரு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்கு ஏதுவாக, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டள்ளனர்.

அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தால் பிறிதாக ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி