1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வீதிக்கு குறுக்காகவும் வீதிக்கு அடியிலும்கூட சிலவேளை மனித எச்சங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம்

ஏற்பட்டிருக்கின்றது என, ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்றையதினம் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்கும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது மீளவும் இன்று காலை ஆரம்பமாகி இருக்கின்றது. தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்ற நிதியினை வைத்து இன்னும் இரண்டு வாரங்களுக்கு அகழ்வை மேற்கொள்ள முடியும் என கூறியிருக்கிறார்கள்.

“இது பல்வேறு தளங்களிலே உடல்கள் காணப்படுகின்ற காரணத்தினாலே நீண்ட காலமாக இதனை செய்வதற்கான தேவை ஏற்பட்டிருப்பதனை தற்போது உணர்ந்திருக்கின்றார்கள்.

“அது ஒரு பக்கம் இருக்க, வீதிக்கு குறுக்காகவும் வீதிக்கு அடியிலும் கூட சிலவேளை மனித எச்சங்கள் இருக்க கூடும் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது.

“ஆகையினாலே இதனை வருகின்ற நாட்களிலே பரிசீலித்து நீண்ட நாட்களாக செய்யப்பட வேண்டிய செயன்முறை என்ற அடிப்படையிலே அதற்கான நிதியை ஜனாதிபதி செயலகத்திலே இருந்து, அரச அதிபருக்கு அதனை விடுவிப்பதற்கான முயற்சிகள் இன்றிலிருந்து ஆரம்பமாக இருப்பதாகவும் அந்த நிதி விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது.

“ஆகையினாலே இந்த செயற்பாடுகள் தற்போது சரியான முறையிலே நடைபெறுகின்றன. ஒவ்வொரு உடல்களும் கை, கால், உடம்பு, தலை அனைத்தும் பொருந்தக்கூடிய வண்ணமாக எடுக்கப்படுகின்ற காரணத்தினால்தான் நீண்ட நேரம் இதற்கு செல்வாகின்றது.

“உடையாமல் கவனமாக எடுக்கப்பட வேண்டிய தேவையும் இருக்கின்றது. ஆகையினால் ஒவ்வொரு கட்டமாக அகழ்ந்து தற்போது 17 உடலங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

“ஆனால் இதனை விட கூடுதலான எண்ணிக்கை இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. அவர்களுடைய சீருடைகள் மற்றும் வேறு பல பொருட்களும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

“ஆகையினாலே எந்த காலத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்பதனையும் சில பரிசோதனைகளின் பின்னர் அறியக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு சில நாட்கள் எடுக்கும்” என மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது.

இந்த அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வுப்பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இன்றையதினம்(20) காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வு பணியானது முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இறுதியாக அகழ்வு பணிகள் நிறைவடைந்ததும் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த பொலித்தீன் உறைகள் , உடல் எச்சங்களுக்கு மேற்பகுதியில் காணப்பட்ட மண்கள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது

குறித்த சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல். இளங்கோவன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் தற்பரன், சட்டத்தரணிகளான வி.கே.நிரஞ்சன், கு.ஆன் சுமங்கலா மற்றும் கொக்குளாய் பொலிஸ் நிலைய பொலிஸார், தடயவியல் பொலிஸ் பொலிஸார், விஷேட அதிரடி படையினர், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட தரப்பினர் இடத்தை பார்வையிட்டு கலந்துரையாடியதன் பின்னர் குறித்த அகழ்வுப்பணியானது ஆரம்பமாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி