1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் கடந்த 1983ஆம் ஆண்டு இடம்பற்ற ஜே.வி.பி கலவரத்தின் போது, கொழும்பின் புறநகர் பகுதிகளில்

தமிழர்கள் எரித்துக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, ஒட்டுமொத்த இலங்கையையும் ஜே.வி.பியனர் அழித்தார்கள் என்றும் பொருளாதார கொலையாளிகள் எனக் கூறப்படும் பெயர்ப் பட்டியலில் இவர்களின் பெயர்களும் இணைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் முக்கியமான தினம் ஒன்றில் கோவிலுக்கு சென்று திரும்பிய தமிழர்கள் இவ்வாறு எரிக்கப்பட்டதுடன், அவர்களுடைய வாகனங்களும் எரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“கடந்த 1971ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள உயிர்களை அழித்து நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களைக் கொன்று ஜே.வி.பியினர் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தனர். ஜேவிபியே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

“கடந்த 1983ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் சகோதரத்துவம் காணப்பட்டது. ஆச்சரியப்படும் வகையிலான பிணைப்பு காணப்பட்டது. எனினும், ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

“13 இராணுவ படை வீரர்கள் உயிரிழந்த போது அவர்களின் சடலங்கள் இரத்மலானை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

“இதனை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் சடலங்கள் பொரளை மயானத்தில் இரவில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி  ஜே.ஆர்.ஜயவர்தன இதனை செய்தார்.

“இதன் காரணமாக மக்கள் ஆத்திரமடைந்ததை அடுத்து, இலங்கை முழுவதும் வாழ்ந்து வந்த அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

“இதனால் அந்த மனிதர்களுக்கும் எமக்கு இடையில் ஒரு குரோதம் உருவாக்கப்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு போர் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

“ஒட்டுமொத்த நாட்டையும் இரத்த வெள்ளமாக மாற்றினார்கள். அன்றும் பொருளாதாரம் உடைக்கப்பட்டு இலங்கை மூடப்பட்டது.

“கடந்த 1983ஆம் ஆண்டில் நாடு முடக்கப்பட்டதுடன், 1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில், மீண்டும் மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த நாட்டின் பொருளாதாரத்தை உடைத்தனர்.

“நெல் களஞ்சியத்தை எரித்து, பேருந்துகளை எரித்து, தொடருந்து தண்டவாளங்களை ஜே.வி.பியினர் அகற்றினார்கள். அனைத்து விடயங்களின் மூலமும் ஜே.வி.பி நாட்டின் பொருளாதாரத்தை உடைத்தது.

“ஒட்டுமொத்த இலங்கையையும் ஜே.வி.பி அழித்தார்கள். பொருளாதார கொலையாளிகள் எனக் கூறப்படும் பெயர் பட்டியலில் இவர்களின் பெயர்களும் இணைக்கப்பட வேண்டும்.

“இன்று குற்றமற்றவர்கள் போல் திரிகிறார்கள்.  ஜேவிபியினர் இரகசியமாகக் கூட பாவங்கள் இழைக்கவில்லை என்ற வகையில் இருக்கின்றார்கள்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி