1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதங்கள்

தொடர்பில் தான் விசாரணை நடத்துவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்தக் கடிதங்கள் மூன்றையும் தன்னிடம் கையளிக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குத் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அக்கடிதங்கள் மூன்றையும் தான் சபையில் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

நாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி.யிடமும் இலங்கை கிரிக்கெட் சபையிடமும் ஜனாதிபதி உரிய விளக்கத்தைக் கோர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றில் இன்று (22) உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

“இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ணத் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. எமது நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத்தில் காணப்படும் குழப்பங்களே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

“இதற்கு முன்னர் நாட்டில் நடைபெற்ற ஐ.சி.சி.யின் 5 கிரிக்கெட் தொடர்களும் இடைக்கால கட்டுப்பாட்டுக் குழுவின் நிர்வாகத்தின் கீழ் தான் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில், 2000ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், 2002ஆம் ஆண்டு செம்பியன் கிண்ணத் தொடர், 2006ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர், 2012ஆம் ஆண்டு டி- 20 தொடர் என்பன இடைக்கால கட்டுப்பாட்டுக் குழு நிர்வாகத்தின் கீழ் தான் நாட்டில் இடம்பெற்றன.

“எனவே, விளையாட்டுத் துறை அமைச்சரும் ஜனாதிபதியும் இதுதொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டும். இலங்கை கிரிக்கெட் சபையிடமும், ஐ.சி.சியிடமும் இது தொடர்பான விளக்கத்தை கோர வேண்டும்.

“எப்படி இந்தத் தரப்பினர் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, எமது நாட்டில் நடைபெறவிருந்த தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற முடியும்? அத்தோடு, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர், இதன் ஊடாக தேசத்துரோக செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் உள்ள கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் நன்கொடையாக வழங்கிய 55,000 டொலர் தொகை இன்னும் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை” எனவும்,  எதிர்க்கட்சி தலைவர் இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா 50,000 டொலர்களையும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் 5,000 டொலர்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பல்லேகல மற்றும் ஆர்.பிரேமதாச மைதானங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவே இந்தப் பணத்தை நன்கொடையாக வழங்கியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

குறித்த பணம் எங்கே போனது எனத் தெரியவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், விளையாட்டுத்துறை அமைச்சர் தலையிடுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி