1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின்

காணிகளை 1985ஆம் ஆண்டுக்கான வரைபடத்துக்கு ஏற்ப மீள அவர்களுக்கே வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டம் மீதான விவாதம் நிறைவடைந்ததன் பின்னர், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமென இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இலங்கையின் முன்மொழிவுகளையும் யோசனைகளையும் தமிழ் மக்களும் அவர்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் காணிப் பிரச்சனைகள் குறித்து பாரியளவில் பேசப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீள அவர்களுக்கே வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 1985ஆம் ஆண்டுக்கான வரைபடத்துக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அண்மையில் இந்தியா விமர்சித்திருந்ததோடு, தமிழ் மக்களின் விவகாரம் தொடர்பான முன்னேற்றம் போதுமானதாக இல்லை எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்திருந்தது.

இதனை நிராகரித்த ரணில் விக்ரமசிங்க, இந்தியா இவ்வாறானதொரு கூற்றை முன்வைத்தமை குறித்து அதிர்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தொடர்பில் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அனைவராலும் காணக்கூடியதாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த செயல்முறையில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும், குறித்த செயல்முறை இடைநிறுத்தப்படாது முன்னெடுக்கப்படுமென ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் 10 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் வளமிக்க மாகாணமாக மாறுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கிற்கான அரசியல் தீர்வை வழங்கி, அப்பகுதியை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அத்தோடு, இஸ்ரேல் - காஸா பிரச்சினைக்கும் அரசியல் தீர்வின் ஊடாகவே நிலையான தீர்வு எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை உள்ளது. இந்த அறிக்கை மற்றும் சாட்சிகள் கத்தோலிக்க பேராயர் சபையின் தலைவரிடத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

“இதுதொடர்பாக ஆராய்ந்து, எவ்வாறான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை எமக்கு அறியத்தருமாறு நாம் கோரியுள்ளோம். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் அறிக்கைகளில் உள்ளமையால் இன்னமும் இவை தொடர்பாக அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

“இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், இதற்காக ஒட்டுமொத்த காஸாவையும் இஸ்ரேல் தாக்குவது எப்போதும் தீர்வாக அமையாது. தற்போது லெபனானும் இதில் நுழைந்துள்ளது. எனவே, இதற்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றே அவசியமாகும்.

“அரசியல் தீர்வொன்று வழங்கப்படாத காரணத்தினால்தான் அங்கு இந்த நிலைமை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. நாம் எமது நாட்டில் வடக்கிற்கான அரசியல் தீர்வை வழங்கி, தற்போது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

“அடுத்த தசாப்தத்திற்குள் அங்கு பலமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு, பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி