1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழர்களின் உரிமைக்காக, தமிழீழ இலட்சியத்துக்காகத் தமது இறுதிமூச்சுவரைப் போராடி, களமாடி வீரச்சாவினைத் தழுவிய

வீரமறவர்களுக்குத் தமிழினம் திரண்டு அஞ்சலி செலுத்தும் 'மாவீரர் நாள்' இன்றாகும்.

இன்று மாலை 6.05 மணிக்கு தாயகமெங்கிலும் புலம்பெயர் தேசங்களிலும் சுடரேற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.

பொலிஸார், படையினர் மற்றும் அரச புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயகமெங்கும் பேரெழுச்சியுடன் இடம்பெறவுள்ளன.

மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம் செய்யப்பட்டு அஞ்சலி நிகழ்வுகளுக்குத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.

துயிலும் இல்லங்களில் மாவீரர் தினத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நேற்று இரவே பூர்த்தியாகியுள்ளன. துயிலும் இல்லங்களைச் சூழச் சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு நடுவில் கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது. இன்று மாலை அங்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வுகளில் சரியாக மாலை 6.02 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடரேற்றல் இடம்பெறும்.

இதன்போது மாவீரர் நாள் பாடல்களும் ஒலிக்கவிடப்படும் என்று மாவீரர் தின ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்தனர். இதேவேளை, புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் தின நிகழ்வுகளைப் பேரெழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸாரின் கெடுபிடி....

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொலிஸாரின் கெடுபிடிகளையும் தாண்டி இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில மாவீரர் தின நினைவேந்தலைத் தடுக்கும் வகையில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி, ஐயன்கன்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார், 30க்கும் மேற்பட்ட தனி நபர்களுக்கு எதிராக நீதிமன்றக் கட்டளைகளைப் பெற்று வழங்கியுள்ளனர்.

இருப்பினும் தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவு கூராமல், அவர்களது இலட்சினைகளைப் பயன்படுத்தாமல் விடுதலைப் புலிகளை அன்றி உயிரிழந்தவர்களை நினைவுகூர முடியும் என்று நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

நீதிமன்றக் கட்டளையில் குறிப்பிட்ட விடயங்களுக்கு மேலதிகமாகப் பொலிஸார் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களிடம் சென்று கட்டளைகளை வழங்கி சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டக்கூடாது, நினைவு வளைவுகளில் மாவீரர் துயிலும் இல்லம் என்கின்ற பெயர் பொறிக்கக்கூடாது, கார்த்திகைப் பூ பாவிக்கக் கூடாது என்றும், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் மிரட்டி வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில், பொலிஸாரின் கெடுபிடிகளைத் தாண்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம், கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லம், முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம், இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம், தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகிய துயிலும் இல்லங்களிலும், முல்லைத்தீவு நகர கடற்கரையில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலும், அம்பலவன்பொக்கணை சார்ள்ஸ் மண்டப வளாகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகளைச் சிறப்பாக மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, மக்கள் இன்று மாலை அச்சமின்றி வருகை தந்து தமது உறவுகளுக்குச் சுடர் ஏற்றி வணங்குமாறும் பணிக்குழுவினர் மேலும் கூறியுள்ளனர்.

புதுக்குடியிருப்பில் கதவடைப்பு...

தமிழீழத் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களைக் கௌரவிக்கும் வகையில் வழமை போன்று இம்முறையும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் முழுமையான கதவடைப்பை மேற்கொள்ள இருக்கின்றனர் என்று புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர்த.நவநீதன் தெரிவித்தார்

அதன்படி, இன்று மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று நடைபெறும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளில அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நன்றி - காலைமுரசு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி