1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழகம் முழுவதும் தேர்தல் பரபரப்பு காணப்படும் வேளையில், தலைநகர் சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் காட்டுப்பள்ளி கிராமத்தில், வாழ்வாதாரத்துக்கான போராட்டம் வலுத்து வருகிறது.

பல நூறு குடும்பங்கள், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக தங்களது பூர்வீக நிலத்தை கொடுத்து விட்டு, தற்போது தங்களது அன்றாட வாழ்க்கைக்கே போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில், பழவேற்காடு ஏரியை அடுத்த காட்டுப்பள்ளி கிராமத்தில் எல் அண்ட் டி நிறுவனம் 2012ல் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகத்தை கட்டியது. துறைமுகத்திற்காக பூர்வீக நிலத்தை காட்டுப்பள்ளி மக்கள் காலி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

எல் அண்ட் டி நிறுவனத்தின் துறைமுகத்தில் 144 பேருக்கு நிரந்தர வேலை தரப்படும் என்ற உறுதியை துறைமுக நிர்வாகம் அளித்தது. அரசாங்கமும் அவர்களுக்கு மாற்று இடத்தை வழங்கியது. மீன்பிடி தொழிலில் காட்டுப்பள்ளி மக்கள் ஈடுபடுவது குறைய தொடங்கியது.

2012 முதல் எல் அண்ட் டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 140க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கடந்த 2018ல் எல் அண்ட் டி நிறுவனத்திடம் இருந்து துறைமுகத்தை அதானி குழுமம் வாங்கியது. 330 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அந்த துறைமுகத்தை சுமார் 6,110 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்த அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் விரிவாக்கத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த துறைமுக விரிவாக்கத்தால், ஏற்கெனவே மீன்பிடி தொழிலை இழந்த மக்கள், பணி நிரந்தரம் இல்லாத சூழலில், விரிவாக்கம் செயல்பாட்டுக்கு வந்தால் கடல் பரப்பில் தங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லாமல் போகும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்களன்று (மார்ச் 22) இறுதி முடிவு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்போடு துறைமுக நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்தினரோடு, ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எல் அண்ட் டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் து. அனீத் குமார், போராட்டத்தில் ஈடுபடுவதற்கான காரணங்களை விளக்கினார்.

காட்டுப்பள்ளியில் போராட்டம்

''நான் 2009ல் பணியில் சேர்ந்தேன். அப்போது என் சம்பளம் ரூ. 3,800. தற்போது 2021ல் எனக்கு ரூ.15,125 தருகிறார்கள். என்னை போல பலருக்கும் இந்த நிலைதான். எங்களின் வேலை நிரந்தரம் செய்யப்படவில்லை. இத்தனை ஆண்டு காலத்தில் அந்த நிறுவனத்தின் வருமானம், லாபம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது விரிவாக்கத்திற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே,நாங்கள் குடியிருந்த கிராமத்தை இழந்துவிட்டோம். எங்களுக்கு பணி நிரந்தரமும் இல்லை என்ற சூழலில் அகதிகள் போல வாழ்கிறோம்,'' என்கிறார் அனீத் குமார்.

தேர்தல் காலத்தில் காட்டுப்பள்ளி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு திமுக மற்றும் அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ள போதும், தேர்தல் முடிந்ததும் இரண்டு கட்சியும் தங்களை கண்டுகொள்ளப்போவதில்லை என்ற அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் அனீத் குமார்.

பொன்னேரி தொகுதியின் கீழ்வரும் காட்டுப்பள்ளியில் பலர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்ததாகவும், தற்போது அதிமுக, திமுக என எந்த கட்சியின் வாக்குறுதிகளை ஏற்பதாக இல்லை என்கிறார்கள் வாக்காளர்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மற்றொரு ஊழியர், ''திமுகவின் தேர்தல் அறிக்கையில் காட்டுப்பள்ளி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு தடை விதிக்கப்படும் என கூறியிருக்கிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் துறைமுக விரிவாக்கத்திற்கு நிரந்தர தடை கொண்டுவரப்படும் என உறுதி தந்துள்ளார். தேர்தல் காலத்தில் மட்டும் எங்களின் பிரச்சினைகளை பற்றி அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் என்பது எங்களுக்கு ஏமாற்றம் தருகிறது. கடந்த ஒரு வருடமும் பல கட்ட போராட்டங்களை நாங்கள் நடத்திவிட்டோம். எந்தவித ஆதரவும் எங்களுக்கு தரவில்லை. தற்போது விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு கூறுகிறார்கள்,''என்கிறார் வருத்தத்துடன்.

கடந்த பெப்ரவரி மாதம் 7ம்தேதி நடந்த போராட்டத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பதால், ஊழியர்கள் பணிக்கு செல்வதை புறக்கணித்து போராட்டம் நடத்திவருகின்றனர். அவ்வப்போது சமரச கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தாலும், பணி நிரந்தரம் பற்றிய எந்த உறுதியும் தற்போதுவரை தரப்படவில்லை என்கிறார்கள் ஊழியர்கள்.

அதானி

கடலுக்கும் செல்ல முடியாத நிலை, பணி நிரந்தரமும் இல்லை என்ற சூழலில் தேர்தல் வருவது பற்றியோ, அரசியல்கட்சிகளின் உறுதிமொழிகளை பற்றியோ எந்த சலனமும் இல்லாமல் போராட்டத்தை தொடருகிறார்கள் காட்டுப்பள்ளி வாக்காளர்கள்.

காட்டுப்பள்ளி பகுதி, சென்னையில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. எண்ணூர் துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில் உள்ள துறைமுகம், ஆழ்கடல் துறைமுக பகுதியாக அடையாளம் காணப்பட்டு சரக்கு பெட்டக முனையமாக செயல்பட்டு வருகிறது. இது பொன்னேரி சட்டமன்ற தனி தொகுதிக்கும் திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கும் உட்பட்ட பகுதியாகும்.

பொன்னேரி தொகுதியில் மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 2,67,673 என இந்திய தேர்தல் ஆணைய தரவுகள் கூறுகின்றன. இதில் ஆண் வாக்காளர்கள் 1,30,689, பெண் வாக்காளர்கள் 1,36,953, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 31 ஆகும். 2016இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கிய பி. பலராமன் 2,50,403 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக களமிறங்கிய கே. பரிமளம் 76,643 வாக்குகளையும் பெற்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி