1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மியன்மார் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின்போது ஏழு வயது சிறுமி ஒருவர் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மாண்டலே நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் மியன்மார் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின் நடக்கும் போராட்டங்களின்போது உயிரிழந்தவர்களில் இந்தச் சிறுமிதான் மிகவும் குறைந்த வயதுள்ளவராக அறியப்படுகிறார்.

அந்தச் சிறுமி அவரது வீட்டிலேயே கொல்லப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

மியன்மார் சிறுமியின் மரணம் எப்படி நிகழ்ந்தது?

மாண்டலே நகரில் உள்ள சான் மியா தாசி எனும் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த, இந்தச் சிறுமி துப்பாக்கி குண்டு காயத்தால் உயிரிழந்ததாக இறுதிச் சடங்கு ஏற்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தினர் அந்தச் சிறுமியின் தந்தையை நோக்கிச் சுட்டதாகவும், அப்போது அவரது மடியில் அமர்ந்திருந்த சிறுமி மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாகவும் மியன்மார் நவ் எனும் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

’என்னை கொல்லுங்கள்’ - மியன்மாரில் அன்பின் அடையாளமான கன்னியாஸ்திரி என்ன சொல்கிறார்?

ராணுவத்தின் பிடியில் மியன்மார்: பரிதவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள்

கொல்லப்பட்ட சிறுமியின் பெயர் கின் மியோ சிட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்தச் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு ஒன்று விரைந்து சென்ற போதும், அவரைக் காப்பாற்ற இயலவில்லை என்று மீட்புதவிப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் 19 வயது அண்ணனும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மியன்மார் ராணுவம் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத் தளபதி மின் ஒளங் ஹ்லைங்.

பெப்ரவரி முதலாம் தேதி குடிமை அரசிடம் இருந்து மியான்மர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத் தளபதி மின் ஒளங் ஹ்லைங்.

இதுவரை நடந்த போராட்டங்களில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

இறந்தவர்களின் எண்ணிக்கை 164 என்கிறது மியன்மார் ராணுவம். அரசியல் கைதிகளுக்கான உதவிக் கூட்டமைப்பு எனும் குழு, இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 261 என்கிறது.

போராட்டக்காரர்கள் உயிரிழந்தது குறித்து செவ்வாயன்று கவலை வெளியிட்டுள்ள மியன்மார் ராணுவம், நாட்டில் நடக்கும் 'அராஜக' செயல்களுக்கு காரணம் அவர்கள்தான் என்று குற்றம் சாட்டியது.

ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டக்காரர்கள்தான் வன்முறை மற்றும் தீவைப்பு நிகழ்வுகளுக்குக் காரணம் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

14 வயது சிறுவன் ஒருவன் மாண்டலேவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியான மறுநாளே வந்துள்ள ஏழு வயது சிறுமியின் மரணச் செய்தி தங்களைத் திகைப்படைய வைத்துள்ளதாக 'சேவ் தி சில்ட்ரன்' எனும் பன்னாட்டு குழந்தைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெரும் காலத்தை ராணுவ ஆட்சியில் கழித்த மியான்மர்

Myanmar coup: What is happening and why?

மியன்மார், பர்மா என்று அறியப்படுகிறது. 1948-ம் ஆண்டு இந்த நாடு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. நவீன வரலாற்றில் பெரும்பாலான காலம் இந்த நாடு ராணுவ ஆட்சியில்தான் இருந்தது.

2010-ம் ஆண்டு வாக்கில் இந்தப் பிடி தளரத் தொடங்கியது. இதையடுத்து 2015-ம் ஆண்டு சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூச்சி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.

2017-ம் ஆண்டு காவலர்கள் மீது ரோஹிஞ்சாக்கள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு மிகக் கடுமையாக ராணுவம் எதிர்வினையாற்றியதால், சுமார் ஐந்து லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி மற்றும் மியன்மாரின் அதிபர் வின் மின்ட் ஆகியோர் ராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிறது.

அடுத்த ஓராண்டுக்கு ராணுவம் அவசர நிலையை அறிவித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, தன் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியன்மார் ராணுவம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி