1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நிலையில் தென் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழு ஜாதியினரை ஒட்டுமொத்தமாக தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. இம்மாதிரி ஜாதி ரீதியான அணி திரட்டல்கள் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு உதவுமா?

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வலுவாக இருப்பதாக கன்னியாகுமரி மாவட்டமும் மேற்கு மாவட்டங்களும் கருதப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் பா.ஜ.க. வலுவாக இருப்பதற்கு கன்னியாகுமரியை ஒட்டியுள்ள பகுதிகளில் நாடார்களை ஒன்று திரட்டியதும் மேற்கு மாவட்டங்களில் கவுண்டர் சமூகத்தினரை ஒன்று திரட்டியதும் முக்கியக் காரணமாக முன்வைக்கப்படுகிறது.

தற்போது தென் மாவட்டங்களில் பட்டியல் இனத்தில் உள்ள ஏழு சமூகத்தினரை ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்ற அடையாளத்தை அளித்திருப்பதன் மூலம் தென் மாவட்டங்களில் அந்த சமூகத்தினரின் வாக்குகளையும் கவர பா.ஜ.க. முயல்கிறது. ஆனால், இம்மாதிரி ஜாதிரீதியான அணி திரட்டல்கள் கன்னியாகுமரியைத் தவிர வேறு மாவட்டங்களில் பெரிய அளவில் பயனளித்திருக்கிறதா என்ற கேள்வியும் இருக்கிறது.

"இம்மாதிரி ஒரு குறிப்பிட்ட ஜாதியை வைத்து அணிதிரட்டுவது இந்து அமைப்புகளுக்கு கன்னியாகுமரியில் பலனளித்தது. ஆனால், பிற மாவட்டங்களில் அது பலனளிக்கவில்லை. ஏன் பலனளிக்கவில்லை என்பதற்கு கன்னியாகுமரியில் இந்து அமைப்புகள் எப்படி காலூன்றின, எப்படிப் பணியாற்றின, அவை எப்படி வாக்குகளாக மாறின என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார் கன்னியாகுமரியில் இந்து இயக்கங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவரும் மவுண்ட் கார்மெல் கல்லூரியின் துணைப் பேராசிரியருமான அருண்குமார்.

கன்னியாகுமரியில் இந்து இயக்கங்களின் எழுச்ச

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, 1956வரை கன்னியாகுமரி மாவட்டம் கேரளப் பகுதிகளுடனேயே இணைந்து இருந்தது. அந்த மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அங்கு இந்து இயக்கங்களின் செயல்பாடு தொடங்கிவிட்டது.

அமித் ஷா

அமித் ஷா

"கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முதல் ஷாகா 1948ல் பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்தது. இதற்குப் பிறகு தொடர்ந்து இந்தப் பகுதியில் இந்து இயக்கங்கள் வலுவாகவே இயங்கிவந்தன. இந்த நிலையில்தான் 1963ல் கன்னியாகுமரியில் நடந்த ஒரு கலவரம், இந்து இயக்கங்களுக்கு மேலும் வலு சேர்த்தது. விவேகானந்தர் நினைவிடம் கட்டப்படுவதற்கு முன்பாக அந்தப் பாறைதான் விவேகானந்தர் பாறை எனக் கூறும் வகையில் மா.பொ. சிவஞானம் ஒரு கல்வெட்டை அங்கு திறந்தார். இதனை அங்கிருந்த கிறிஸ்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதை சேவியர் பாறை என்றார்கள் அவர்கள். அந்த கல்வெட்டு உடைக்கப்பட்டது. இதையொட்டி கலவரம் மூண்டது. இதற்குப் பிறகு அங்கு விவேகானந்தர் நினைவிடம் கட்டப்பட்டது. ஆனால் கலவரம் ஏற்படுத்திய வடு இரு தரப்பிலும் மாறவில்லை" என்கிறார் அருண் குமார்.

திராவிட இயக்கங்களின் செயல்பாடு பெரிய அளவில் இந்த மாவட்டத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. "கன்னியாகுமரியில் இந்து நாடார்கள், கிறிஸ்தவ நாடார்கள், அய்யா வழியினர் என கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். பொருளாதார ரீதியாகப் பார்த்தால், இதில் கிறிஸ்தவ நாடார்கள் சற்று வசதியானவர்களாக இருந்தார்கள். பெரும்பாலான தொழில் அமைப்புகள் அவர்களிடம் இருந்தன. அதற்கு அடுத்த இடத்தில் அய்யா வழி நாடார்கள் இருந்தனர். அதற்கு அடுத்த இடத்தில்தான் இந்து நாடார் சமூகத்தினர் இருந்தனர். இந்த பொருளாதார சமமின்மை, அவர்களை மத ரீதியாக ஒருங்கிணைக்க ஏதுவாக இருந்தது.

காமராஜர் இருந்தவரை, இந்த வேறுபாடு கூர்மையடையவில்லை. ஆனால், 1982ல் நடந்த ஒரு கலவரத்திற்குப் பிறகு தாணுலிங்க நாடார் காங்கிரசிலிருந்து விலகி இந்து முன்னணிக்கு வந்த பிறகு அங்கு இந்து இயக்கங்கள் வேகமாக வளர ஆரம்பித்தன. பொருளாதார ஏற்றத்தாழ்வை, சமூக ஏற்றத்தாழ்வாக இந்து அமைப்புகள் முன்வைத்து, அவர்களைத் திரட்ட ஆரம்பித்தன.

மோதிக்கு செங்கோல்.

மோதிக்கு செங்கோல்.

1982ல் நடந்த கலவரத்திற்குப் பிறகு ஒரு மிகப் பெரிய இந்து அலை இந்து நாடார்கள் மத்தியில் ஏற்பட்டது. 1984ல் இந்து முன்னணி வேட்பாளர் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தமிழ்நாட்டில் இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் இப்படி வெற்றிபெற்றது அதுதான் முதல் முறை. இதற்குப் பிறகு கன்னியாகுமரியில் பெரும் எண்ணிக்கையில் ஷாக்காக்கள் உருவாயின" என இந்து இயக்கங்கள் கன்னியாகுமரியில் வளர்ந்ததன் பின்னணியைக் குறிப்பிடுகிறார் அருண் குமார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, பொதுவாக தேசியக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்திவந்தன. 2009ல் தி.மு.கவைச் சேர்ந்த ஹெலன் டேவிட்சன் வெல்லும்வரை, அங்கு மாநிலக் கட்சிகள் வெற்றிபெற்றதில்லை. சுதந்திரம் பெற்ற காலத்திலும் கன்னியாகுமரி தமிழ்நாட்டோடு இணைந்தபோதும், இந்த தேசியப் பார்வை காங்கிரசிற்கு ஆதரவாக இருந்தது. ஆனால், மார்ஷல் நேசமணி, காமராஜர் ஆகிய தலைவர்கள் மறைந்த பிறகு, அங்கிருந்த இந்து நாடார்களின் பார்வை இந்து இயக்கங்கள், பா.ஜ.க. ஆகியவற்றை நோக்கித் திரும்பியது.

"இதற்கு நடுவில் இந்து நாடார்களைத் தவிர்த்த பிற சிறிய ஜாதியினரை தம் பக்கம் ஈர்க்கும் பணியிலும் பா.ஜ.க. ஈடுபட்டது. குறிப்பாக பத்மநாபபுரம் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணவகை என்ற ஜாதியினரை தங்கள் பக்கம் ஈர்த்தனர். இப்படியான ஜாதிரீதியான அணி திரட்டலைத்தான் பா.ஜ.க. மற்ற இடங்களிலும் முயல்கிறது. ஆனால், கன்னியாகுமரியில் வெற்றி கிடைத்த அளவுக்கு வேறு இடங்களில் வெற்றி கிடைக்கவில்லை" என்கிறார் அருண்குமார்.

பா.ஜ.கவை மேலேழுந்தவாரியாக பார்க்கும்போது மதவாதக் கட்சியாகப் பார்த்தாலும், அடிப்படையில் அவர்கள் ஜாதிகளுக்குள்தான் பணியாற்றுகிறார்கள் என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத மதுரையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர். "ஒவ்வொரு ஜாதிக்கும் பின்னால் சொல்லப்படும் கதைகளை பா.ஜ.க. ஏற்கிறது. உதாரணமாக, தேவேந்திர குல வேளாளர்களை இந்திரனோடு தொடர்புபடுத்துவதைச் சொல்லலாம். அதேபோல, பறையர்கள் பகுதிகளுக்கான நோட்டீஸில் நந்தனார் படத்தை பயன்படுத்துவதைச் செய்வது. இப்படிச் செய்வது அந்தந்த சமூகத்தின் ஏதோ ஒரு சிறிய பகுதியினரையாவது ஈர்க்க உதவும்" என்கிறார் அவர்.

"தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆரம்பத்திலிருந்தே இதைத்தான் செய்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் சரி இதைத்தான் பா.ஜ.க. செய்தது, செய்கிறது. ஜாதிகளையும் புராணங்களையும் இணைத்து சொல்லப்படும் கதைகளை இவர்கள் முழுமையாக ஏற்கிறார்கள். அதிலிருந்து தங்கள் கட்சிப் பணிகளைத் துவங்குகிறார்கள்" என்கிறார் தலித் ஆய்வாளரான ரகுபதி.

மேற்கு மாவட்டங்களில் நடந்த அணிதிரட்டல்

தென்மாவட்டங்களின் நாடார் சமூகத்தினர், தேவேந்திர குல வேளாளர்கள் மத்தியில் பணியாற்றிய பா.ஜ.க., இதற்குப் பிறகு தனக்கான தகுந்த களமாக மாநிலத்தின் மேற்குப் பகுதியைக் கண்டறிந்தது. அங்கிருந்த கவுண்டர்கள், அருந்ததியர் சமூகத்தினர் மத்தியில் இதேபோன்ற அணி திரட்டலை 90களில் முயற்சித்தது.

மேற்கு மாவட்டங்களில் செயல்பட ஆரம்பித்தபோது, முதலில் சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தவர்கள் மத்தியில்தான் தனது பணிகளைத் துவங்கியது பா.ஜ.க. "90களுக்கு முன்பு மேற்கு மாவட்டங்களில் பா.ஜ.கவைக் குறிப்பிடும்போது, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பெயரைச் சொல்லி அந்த சமூகத்திற்கான கட்சி என்றுதான் சொல்வார்கள். மற்றொரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் 1991ல் பா.ஜ.கவின் மாவட்டச் செயலாளராகவே இருந்தார். 1993 வாக்கில் கவுண்டர் சமூகத்தின் பக்கம் பார்வையைத் திருப்பியது பா.ஜ.க. திராவிடக் கட்சிகளால் கைவிடப்பட்ட பலரும் பா.ஜ.க. பக்கம் திரும்பினார்கள். பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற பெரிய தொழிலதிபர்களின் ஆதரவும் இதற்கு வெகுவாக உதவியது" என்கிறார் அருண் குமார்.

கமலாலயம்

இதற்கு முக்கியமான காரணம், கோயம்புத்தூரில் பல பெரிய கடைகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவையாக இருந்தன. இதனைச் சுட்டிக்காட்டி கவுண்டர் சமூகத்தினரை இந்து அமைப்புகள் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த நேரத்தில் நடந்த கோயம்புத்தூர் கலவரமும் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பும் நிலவரத்தை ஒட்டுமொத்தமாக பா.ஜ.கவுக்கு சாதகமாக மாற்றியது.

"இதற்கு முக்கியமான காரணம், திராவிட இயக்கங்கள் ஜாதி முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் தராமல் அவை தொடர அனுமதிப்பதுதான். ஆகவே திராவிடக் கட்சிகளால் கைவிடப்பட்ட சிறிய எண்ணிக்கையில் உள்ள சமூகத்தினரும் தங்களுக்கு அடையாளமும் ஆதரவும் தேடி பா.ஜ.க பக்கம் திரும்ப ஆரம்பித்தார்கள். மேற்கு மாவட்டங்களில் உள்ள கன்னடம் பேசும் ஜாதியினரை ஒருங்கிணைக்க 2014 -2016 காலகட்டத்தில் பல சிறிய சிறிய கூட்டங்களை நடத்தியது பா.ஜ.க. அதில் பி.எஸ். எடியூரப்பா போன்றவர்கள் எல்லாம் பேசிவிட்டுச் சென்றார்கள். தங்கள் சமூகத்தினருக்கு பா.ஜ.க. முக்கியத்துவம் தருகிறது என்ற எண்ணத்தை இது ஏற்படுத்துகிறது. இது தவிர, ஒவ்வொரு சமூகத்திற்கும் உள்ள சின்னச் சின்னக் கோரிக்கைகளையும் தீர்த்து வைக்க முயல்கிறார்கள்.

தற்போது சீர் மரபினரில் சில பிரிவினருக்கு பழங்குடியினர் அந்தஸ்தை பெற்றுத்தருவதாக வாக்குறுதிகளைத் தந்திருக்கிறது பா.ஜ.க. இது தொடர்பான அரசு ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள் இந்து அமைப்புகளின் அலுவலகங்களில் நடக்கின்றன. ஆகவே, அம்மாதிரி ஒரு அந்தஸ்து கிடைக்கும்போது அவர்களது வாக்குகள் முழுமையாக பா.ஜ.கவுக்கே செல்லும்" என்கிறார் அருண் குமார்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பாஜகவின் அணி திரட்டல்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பாஜகவின் அணி திரட்டல்

ஆனால், இந்த ஜாதி ரீதியிலான அணி திரட்டலை எவ்வளவு நாட்கள் செய்யமுடியும், எத்தனை காலகட்டத்திற்கு வெற்றிகரமாக இருக்கும்? ஜாதி வித்தியாசத்தை திராவிட இயக்கம் அனுமதித்தது - அதில் அறுவடை செய்கிறார்கள்.

"இது நீண்ட காலத்திற்கு வாக்குகளைப் பெற்றுத் தருமா, இல்லையா என்பதற்கு இப்போது பதில் சொல்வது கடினம். முக்கியமான காரணம், ஜாதி ரீதியாக மக்கள் அணிதிரளும்போது, இந்து என்ற உணர்வையோ, அடையாளத்தையோ வலுவாக ஏற்படுத்த முடியவில்லை. இதனால்தான் கன்னியாகுமரியிலும் கோவையிலும் தோல்விகளை எதிர்கொள்ள நேர்கிறது. கோவை கலவரத்தைத் தொடர்ந்து 1998லும் 1999லும் வெற்றிபெற்ற பா.ஜ.கவின் சி.பி. ராதாகிருஷ்ணன், அதற்குப் பிறகு அங்கே வெற்றிபெற முடியவில்லை. பல்வேறு ஜாதியினருக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையாகவே இருக்கின்றனர். அவர்கள் இந்துக்களாக ஒன்றிணையவில்லை" என்கிறார் அருண்.

தற்போது பா.ஜ.கவின் முயற்சியில் தேவேந்திர குல வேளாளர்கள் என்ற அடையாளம் பெற்றுத்தரப்பட்டிருந்தாலும் அது பா.ஜ.கவுக்கு பலனளிக்காது என்கிறார் ரகுபதி.

"அந்த மக்களிடம் பொதுவாகவே இடதுசாரிகளின் தாக்கம் இருக்கிறது. ஆகவே, இந்த முயற்சி பா.ஜ.கவுக்கு வாக்குகளாக மாறும் என சொல்ல முடியாது. அப்படி வாக்குகளைப் பெற்றுத்தருமென்றால், ஜான் பாண்டியன் ஏன் எழும்பூர் தொகுதிக்கு வந்து போட்டியிடுகிறார்? பா.ஜ.க. என்ற இந்துத்துவ சித்தாந்தம் தேவேந்திர குல வேளாளர்களுக்கும் நாடார் சமூகத்தினருக்கும் எதிரானது. நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்காமல் இதை நீண்ட காலம் கொண்டுசெல்ல முடியாது" என்கிறார் ரகுபதி.

ஆனால், கன்னியாகுமரி பகுதியில் பா.ஜ.கவுக்கான ஆதரவு தொடரவே செய்கிறது. 2019ல் காங்கிரஸ் வேட்பாளரான எச். வசந்தகுமார் வெற்றிபெற்றிருந்தாலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இன்னமும் பா.ஜ.கவின் பக்கமே இருக்கிறார்கள். உதாரணமாக, 2012 - 13ல் இந்து மாணவர்களுக்கு உதவித் தொகை கோரி பா.ஜ.க. நடத்திய போராட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் தவிர, வேறு சில இடங்களிலும் இதே பாணியில் பணியாற்றுகிறது பா.ஜ.க. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் உள்ள, ஆனால் பெரிய கட்சிகளால் கண்டுகொள்ளப்படாத ஜாதியினரை - உதாரணமாக மதுரையில் சவுராஷ்ட்டிரா சமூகத்தினர் - அரவணைப்பதன் மூலம் ஒரு நீண்ட கால வாக்கு வங்கியை பெற முயற்சிக்கிறது அக்கட்சி. இவை எத்தகைய தாக்கத்தை தேர்தல் களத்தில் எதிர்காலத்தில் ஏற்படுத்துகின்றன என்பது, பா.ஜ.கவின் செயல்பாட்டை பொறுத்தது மட்டுமல்ல. திராவிடக் கட்சிகள் உள்ளிட்ட பிற கட்சிகள் இதனை எப்படி எதிர்கொள்கின்றன என்பதையும் பொறுத்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி