1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் ஏமாற்றத்தை தந்தாலும் சர்வதேசத்தின் பார்வையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானங்கள் எமக்கு பயன்படக்கூடியதாகவே இருக்கும். நிறைவேற்றிய நாடுகளும் நடுநிலமை வகித்த நாடுகளும் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தமது பங்களிப்பை வழங்குவார்கள் என்பதை நாம் நம்புகின்றோம் என இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் தினம் நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

ஐ. நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இலங்கை அரசாங்கம் தொடர்பிலான அறிக்கையானது மிகவும் காத்திரமானதாக இருந்தது. ஆனால் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எமக்கு ஏமாற்றம் தந்தாலும் அதனை நடைமுறைப்படுத்தவேண்டிய பொறுப்புக்கள் பல ஐ. நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருக்கே வழங்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி சர்வதேசத்தின் பார்வையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானங்கள் எமக்கு பயன்படக்கூடியதாகவே இருக்கும். அது மட்டுமன்றி ஆதரவாக செயற்பட்ட நாடுகளும் நடுநிலைமை வகித்த நாடுகளும் குறிப்பாக இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு கூடிய பங்களிப்பை செய்வார்கள் என்றே நாங்கள் நம்புகின்றோம்.

மேலும் மகளிர் தினத்தை நாங்கள் கொண்டாடும் போது தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீர்த்த எமது பெண்களை நினைக்காது இருக்கமுடியாது. அவர்களுடைய தியாகம் போற்றப்படக்கூடியது. இன்று உலகத்தில் அதிகமாக பெண்களே அதிக பங்களிப்புக்களை செய்து வருகின்றார்கள். நாசா முதல் அரச நிர்வாகம் அரசியலில் சமூக மாற்றத்தில் பெண்கள் பங்களிப்பு போற்றக்கூடியது எமது இனத்தின் விடுதலைக்காக மனித உரிமை மீறல்களுக்காக இன்றுவரையில் ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் அதற்கு வெளியிலும் பல பெண்கள் தம்மை அர்ப்பணித்து செயற்பட்டு வருகின்றார்கள்.

இதேவேளை நாங்களும் எமது கட்சிக்குள் இளையவர்களை பெண்களை உள்வாங்குவதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம் அவர்களையும் அடுத்துவருகின்ற காலப்பகுதியில் மக்கள் பிரதிநிதிகளாக மாற்றுகின்ற செயற்பாடுகளுக்கு நாங்கள் முன்னுரிமைப்படுத்துவோம் என்பதையும் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி