1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே இளவரசி குடும்பத்தினரால் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டில் அடுத்த மாதம் சசிகலா குடியேற இருக்கிறார். போயஸ் கார்டனில் வி.கே.சசிகலா குடியேற விரும்புவது ஏன்?

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வி.கே.சசிகலா இருந்த காலகட்டத்திலேயே போயஸ் கார்டனில் அவருக்கான புதிய வீடு ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு, ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றியது. `இப்படியொரு நிகழ்வு நடக்கலாம்' என்பதை அறிந்து முன்கூட்டியே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு எதிரில் வீடு ஒன்றைக் கட்டும் பணியை சசிகலா தரப்பினர் தொடங்கினர்.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகனான விவேக்கின் மேற்பார்வையில் புதிய வீடு கட்டும் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகளை இளவரசியின் மருமகன் கார்த்திகேயனும் கண்காணித்து வந்தார்.

பெங்களூருவில் இருந்து சசிகலா வந்த பிறகு, தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் உள்ள கிருஷ்ணபிரியாவுக்குச் சொந்தமான வீட்டில் இருந்து அரசியல் பிரமுகர்களையும் சமுதாய தலைவர்களையும் சசிகலா சந்தித்து வந்தார். இதன்பிறகு, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்பானது, அரசியல் மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதன்பிறகு வெளியில் வராமல் சில நாள்கள் முடங்கியவர், தியாகராய நகரில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். இதன்பிறகு, மறைந்த அவரது கணவர் நடராசனின் குலதெய்வமான வீரனாரை வழிபடுவதற்காக கடந்த 18 ஆம் திகதி தஞ்சாவூர் சென்றார்.

அங்கு ம.நடராசன் சகோதரர்களான ராமச்சந்திரன், பழனிவேல் ஆகியோரின் பேரக் குழந்தைகளுக்கு முடியிறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பினார். இந்நிலையில், கடந்த 24ஆம் திகதி திடீரென போயஸ் கார்டனுக்குச் சென்றார் சசிகலா. அங்குள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தவர், வேதா இல்லத்தைப் பார்வையிட்டபடியே தனக்கான புதிய வீட்டையும் பார்த்துவிட்டுத் திரும்பினார்.

`சசிகலாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி அவரது குடும்ப உறவுகள் தெரிவிக்கையில் `` அவரால் தியாகராய நகரில் உள்ள வீட்டில் தங்க முடியவில்லை. அங்கு சிறிய சிறிய அறைகளாக இருப்பதால் அவை பயன்படுத்துவதற்கு எளிதானதாக இல்லை. போயஸ் கார்டனில் சசிகலாவுக்காக தயாராகி வரும் வீட்டை எப்போதோ முடித்திருக்க வேண்டும்.

வேதா இல்லத்தில் ஜெயலலிதா. (கோப்புப்படம்)

"அங்கு, `உட்கட்டமைப்பினை சிறப்பாகச் செய்ய வேண்டும்' என விவேக் ஜெயராமன் திட்டமிட்டார். இதனால் கட்டடப் பணிகள் முடிவதற்குத் தாமதமாகிவிட்டது. இதனை விரும்பாத சசிகலா, `சீக்கிரம் முடித்துக் கொடுத்துவிடு. இங்கு என்னால் இருக்க முடியவில்லை' என ஆதங்கப்பட்டார். இதன் ஒரு பகுதியாகவே போயஸ் கார்டனுக்கு சசிகலா வருகை தந்தார்" என்கின்றனர்.

தொடர்ந்து இதுகுறித்து பேசிய அவர்கள், ``ஜெயலலிதாவின் நினைவிலேயே போயஸ் கார்டனில் காலத்தைக் கழிக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் எண்ணம். அதற்காகத்தான் வேதா இல்லத்துக்கு எதிரிலேயே வீட்டைக் கட்டத் தொடங்கினார்கள். இதற்கான கட்டுமாணப் பணிகள் நடந்தபோதே, இந்தச் சொத்துகளை முடக்கியும் வருமான வரித்துறை உத்தரவிட்டது. ஆனால், கட்டடம் கட்டுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படாததால், தொடர்ந்து பணிகள் நடந்தன. பெங்களூருவில் இருந்து சென்னை வந்தவுடனேயே இந்த வீட்டில்தான் தங்க வேண்டும் என சசிகலா ஆசைப்பட்டார். ஆனால், பணிகள் தொடர்ந்து நடப்பதால் அடுத்த மாதம் குடியேற இருக்கிறார்" என்றனர் விரிவாக.

அதேநேரம், அண்மைக்காலமாக சிறையில் இருக்கும் வி.என்.சுதாகரன் குறித்தும் சசிகலா வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ` எவ்வளவு சொத்து இருந்து என்ன பயன்? சுதாகரனை மீட்க பத்து கோடி ரூபாயைப் புரட்ட முடியவில்லையே?' என வேதனைப்பட்டுள்ளார்.

பெங்களூரு சிறையில் இருந்து கொரோனா தொற்று சிகிச்சைக்காக சசிகலா கிளம்புவதற்கு சில நாள்களுக்கு முன்பாக, 'நான் சென்றுவிட்டு ஒரு வாரத்தில் உன்னை மீட்கிறேன்' என வழக்கறிஞர் மூலமாக சுதாகரனுக்குத் தகவல் தெரிவித்திருந்தார். நீதிமன்றத்தில் செலுத்த வேண்டிய 10 கோடி ரூபாய் அபராதத் தொகைக்கு முறையான கணக்கு வழக்குகளைக் காட்ட வேண்டும். அதிலும், ரத்த சம்பந்தமுள்ள உறவுகள்தான் பணத்தைக் கொடுக்க வேண்டும்.

வி.என்.சுதாகரன்

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையாகிவிட்டாலும் வி.என்.சுதாகரன் இன்னமும் சிறையில் இருக்கிறார்.

"சசிகலாவை வெளியே கொண்டு வருவதற்காக நடராசனின் சொத்து ஒன்றை அடமானம் வைத்துவிட்டனர். அதன்மூலமாக கிடைத்த பணத்தை அபராதமாக செலுத்திய பிறகுதான் அவர் வெளியே வந்தார். இதற்கு வருமான வரித்துறையில் இருந்து தடையில்லா சான்று வாங்கி வருமாறும் நெருக்குதல் கொடுத்தார்கள். தற்போது சுதாகரனுக்கு சொத்துகள் இருந்தாலும் அவரை வெளியில் கொண்டு வருவதற்கு அவரது உடன்பிறந்த சகோதரர்களும் ஆர்வம் காட்டவில்லை. இதுகுறித்து அவரது சகோதர் ஒருவரிடம் உறவினர்கள் உதவி கேட்டபோது, 'என்னிடம் பணம் இல்லை' எனக் கூறிவிட்டார். "

"இதில், சம்பந்தி வீடு என்ற முறையில் சிவாஜி குடும்பத்தினரும் அமைதியாக ஒதுங்கிவிட்டதால், இன்னமும் சிறைக்குள்ளேயே சுதாகரன் முடங்கிக் கிடக்கிறார். தனக்காக எந்த முயற்சிகளும் எடுக்கப்படாததை அறிந்த சுதாகரனும், '10 கோடி ரூபாய் கட்ட முடியவில்லையென்றால் நான் சிறையிலேயே இருந்துவிடுகிறேன். யாரும் சிரமப்பட வேண்டாம்' என உறுதியாகக் கூறிவிட்டார். அவரை வெளியே கொண்டு வருவதற்கு சசிகலா தரப்பில் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

கடந்த சில நாள்களாக அ.தி.மு.கவில் துணை முதல்வர் உட்பட ஒரு சாராரிடம் இருந்து வெளிப்படும் சசிகலா ஆதரவு பேச்சுக்களையும் முதல்வர் தரப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அதற்கேற்ப, போயஸ் கார்டனில் சசிகலா குடியேற இருப்பதையும் இதனோடு பொருத்திப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். தேர்தலுக்குப் பிறகு சசிகலா தனது கணக்கைத் தொடங்குவாரா அல்லது அரசியலில் இருந்து ஒதுங்கியே இருப்பாரா என்பதற்கான விடை, மே முதல் வாரத்தில் தெரிந்துவிடும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி