1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உலக மாற்றமும் வளர்ச்சியும் அசுர வேகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்தாலும், பல கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. அங்கு வாழும் மக்கள் சந்திக்கும் அவலங்கள் ஏராளம்.

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குடியேற்றக் கிராமங்களில் ஒன்றுதான் மத்திய முகாம் - நான்காம் கிராமம். இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உடைய நான்காம் கிராமத்தில் சுமார் எண்ணூறு குடும்பங்கள் வசிக்கின்றன. எண்பது சதவீதம் தமிழ் குடும்பங்களையும், சொற்ப அளவு முஸ்லிம் மற்றும் சிங்களக் குடும்பங்களையும் கொண்டுள்ள கிராமம் இது. இங்கு ஆறு ஆலயங்களும் பாடசாலை ஒன்றும் உள்ளன.

1949 ஆம் அண்டு கல்லோயா திட்டத்தின் கீழ் 40 கொலனிகள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் நான்காம் கொலனி ( நான்காம் கிராமம்).

கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவும் ஒன்று. பல தடவைகள் உயிர் இழப்புக்களையும் உ​டைமை இழப்புக்களையும் எதிர்கொண்ட கிராம மக்கள் பல தடவைகள் வீடுவாசல்களை விட்டு இடம்பெயர்ந்த துயரச் சம்பவங்களும் உள்ளன.

1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து கல்முனை பிரதேசத்தில் அகதிகளாக ஐந்து வருடங்கள் வாழ்ந்து, பின்னர் உடைமைகள் அழிந்த நிலையில் இருந்த தங்கள் கிராமத்தில் மீளவும் குடியமர்ந்தனர். இந்த மக்கள் பல கனவுகளுடன் கட்டிய வீடுகள் உடைந்து காணப்பட்டன. வளர்த்த கால்நடைகள் இருந்த தடயமே இல்லை. தோட்டம் துரவுகள் காடு மண்டிக் கிடந்தன.

இவர்கள் பின்னர் தங்களது பிரதான தொழிலான விவசாயத்தில் ஈடுபட்டனர். இத்தனைக்கும் தங்களுக்கு சீரான நிவாரணமோ நஷ்டஈடோ அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

சீரான உட்கட்டுமாண வசதிகள் இல்லை. உடைந்த வீடுகளுக்கு பதிலாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் இல்லை. இவ்வாறான காரணங்களாலும், கடந்த கால அச்ச சூழ்நிலையாலும் இயற்கையான வளங்கள் இருந்தும் பல குடும்பங்கள் மீளக்குடியமரவில்லை. அவர்கள் பல்வேறு பிரதேசங்களில் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கியிருந்தனர்.

தற்போது 800 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில் பல குடும்பங்களுக்கு வீடுகள் , மலசலகூட வசதிகள் இல்லை. சீரான வீதிகள் அங்கு இல்லை. வீதி மின்விளக்குகள் இல்லை. கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை நிலவுகின்றது. யானைத் தொல்லையும் உள்ளது.

தரம் ஒன்று முதல் உயர்தரம்வரை வகுப்புக்களையுடைய வாணி மகாவித்தியாலயத்தில் சுமார் 300 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். இப்பாடசாலை பல பௌதிக வளக் குறைபாடுகளுடன் இயங்குவது கவலையான விடயமாகும்.

பாடசாலைக்கு சீரான சுற்றுமதில் இல்லாதால் ஆடு, மாடுகள் பாடசாலை வளாகத்துக்குள் செல்கின்றன. இது பாடசாலைக்கு பிரச்சினையாக காணப்படுவதுடன் பாதுகாப்பு குறைவினால் பாடசாலையின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்படும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. பாடசாலைக்கு ஒரு காவலாளி இல்லாதது பெரும் குறையாகும்.

பாடசாலையின் பழைய கட்டடம் ஒன்று உடைந்து விழுந்தும் அதற்கான புதிய கட்டடம் அமைக்கப்படவில்லை. அக்கட்டடம் புணரமைக்கப்படவும் இல்லை. வகுப்பறை பற்றாக்குறையுடனும் பல்வேறு அசளகரியங்களுடன் இயங்கும் இப்பாடசாலையின் தேவைகளை நிவர்த்தி செய்து இக்கிராம மாணவர்களின் கல்வியை முன்னேற்ற வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும். நான்காம் கிராமத்திற்கென அமைக்கப்பட்ட பொதுச் சந்தை நீண்ட காலமாக இயங்காமல் காடு மண்டி கால்நடைகளின் தங்குமிடமாகக் காணப்படுகின்றது. மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சந்தையை இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது நாவிதன்வெளி பிரதேசசபையின் பொறுப்பாகும். இதற்கான ஒத்துழைப்பை வழங்குவதுடன் கிராமத்தின் வளங்களை வினைத்திறனாக பயன்படுத்த வேண்டியது கிராம மக்களின் கடமையாகும்.

அரசசார்பற்ற நிறுவனத்தால் வழங்கப்பட்ட பெறுமதியான வளங்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகுவது மிகுந்த வேதனையான விடயமாகும். கிராமத்தில் உள்ள பொதுமக்களும் பொது அமைப்புக்களும் இதில் அதிக அக்கறை செலுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இவற்றை கிராமத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.

குறித்த வளங்கள் இந்த கிராம மக்களே பயன்படுத்தி நன்மையடைய உரிய அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொறுப்பு வாய்ந்த கிராம பொது அமைப்புக்கள் திட்டத்தை தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி