1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற மகுடத்தை சூடியுள்ள ஊடகவியலாளர்கள் வழங்கும் செய்திகள் எவ்வாறு அமைய வேண்டும்? இலங்கை போன்ற ஒரு நாட்டில் பல்லின, பல்கலாசார, பலமதங்களை பின்பற்றும் நிலையில், முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை முன்வைக்கலாமா?

ஒவ்வொரு ஊடகவியலாளரும் ஊடக நிறுவனங்களும் சிந்திக்க வேண்டிய விடயங்கள் இவையாகும்.

ஒரே செய்தி இரு மொழிகளில், இரு வேறு விதமாக வெளியாகும் போது இருவேறுபட்ட மொழி பேசும் மக்களின் மனோநிலையில் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மனித உரிமை பேரவை மற்றும் முஸ்லிம் மக்களின் ஜனாசா எரிப்பு தொடர்பான செய்திகள் இவ்வாறுதான் வேறுபட்டவாறு பிரசுரிக்கப்பட்டன.

தமிழ் செய்தி ஊடக அறிக்கையில் 'கடும்போக்கு சிங்களவரை திருப்திப்படுத்தவே ஜனாசா விவகாரம்' என தலைப்பிடப்பட்டிருந்தது.

சிங்கள ஊடகமொன்றில் 'சடலங்களை வைத்து தீவிரவாதத்தை தூண்டும் அனைவருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்துங்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு செய்திகளுமே மக்கள் மத்தியில் சீற்றத்தையும் வெறுப்புணர்வையும் தோற்றுவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

இதேபோன்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தமிழர் எழுச்சி பேரணியாக பொதுவாக அனைத்து தமிழ் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், சிங்கள பத்திரிகைகளில், அந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களை கைதுசெய்யக் கோரி வவுனியாவில் நடத்தப்பட்ட மற்றுமொரு பேரணிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.

அத்தோடு, 'வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்தும் குழுவினர் தொடர்பாக உளவுத்துறை விழிப்புடன் உள்ளது' , 'நீதிமன்ற அறிவிப்பை மதிக்காத இனவாத பேரணி' என்ற தலைப்புகளில் செய்திகள் வெளிவந்தன.

இதில் இனவாத பேரணி போன்ற சொற்கள் இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயற்பாடு என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

அடுத்ததாக குருந்துமலை விவகாரத்தை நோக்கினால் அங்கு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு தமிழ்ப் பத்திரிகைகள் அதற்கு முன்னுரிமை வழங்கின. சிங்களப் பத்திரிகைகளோ வடக்கில் சிங்களவர் வாழ்ந்தமைக்கான சாட்சியாக கல்வெட்டு கிடைக்கப் பெற்றதாக செய்தி வெளியிட்டன. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் சிங்கள செய்தி அறிக்கையிடல்கள் யார் உண்மை என போட்டிப்போட்டுக்கொண்டு ஓடிய நிலையில் காணப்பட்டதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான வேறுபட்ட தலைப்பிடல்கள் தொடர்பாக தேசிய சமாதான பேரவையின் தலைவரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான  மூன்று காரணங்களை குறிப்பிட்டார்.

"சில ஊடகங்கள் அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுகின்றன. அதனால், அரசாங்கம் செய்யும் சகல விடயங்களையும் நியாயப்படுத்த முனைகின்றன. மறுபக்கத்தில் பார்த்தால், எதிர்க்கட்சிக்கு சார்பாக சிலர் செயற்படுகின்றனர். அரசியல் கட்டமைப்பிலிருந்து பார்ப்பதால், அவர்கள் எந்தநேரமும் அரசாங்கத்தின் பிழைகளை மாத்திரம் தேடிக் கொண்டிருப்பார்கள்.

ஒரு இடத்திலிருந்து கிடைக்கும் செய்திகளை ஏனைய மூலங்களோடு ஒப்பிட்டு அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த சரிபார்க்க வேண்டும். அந்த செய்திக்கு மறுபுறம் உள்ளதா என்பதையும் ஆராய வேண்டும். ஊடகவியலாளர்களுக்கு காணப்படும் துறைசார் அறிவு, தொழில்வாண்மை, தொழிநுட்ப அறிவு மற்றும் பயிற்சிகளில் இது தங்கியுள்ளது.

பாரியளவான மாற்றமொன்றை ஏற்படுத்தும் அரசியல் அதிகாரம் தமக்கும் உள்ளதென ஊடகவியலாளர்கள் நினைக்கின்றனர். அவர்கள் நல்லதென நினைக்கும் திசைக்கு நாட்டை வழிநடத்த நினைக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒருபுறத்தின் கருத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மறுபுறம் மூடி மறைக்கப்படுகின்றது. இந்த மூன்று விடயங்களுமே இவ்வாறான போக்கிற்கு காரணம்" என அவர் குறிப்பிட்டார்.

"ஊடகவியலாளர்களுக்கு தொழில்முறை பயிற்சியளிப்பது முக்கியம். தொழிநுட்ப அறிவை விருத்தி செய்ய வேண்டும். ஒருசெய்தியை எடுத்தால் அதன் சகல பக்கங்களையும் ஆராய வேண்டும். இவ்வாறு ஆராய்ந்து ஏனைய பக்கங்களை ஊடகவியலாளர்கள் அறிந்து கொண்டாலும்கூட அதை வெளியிடுவதில் ஒரு சிக்கல் உள்ளது. அவர்கள் பணிபுரியும் ஊடக நிறுவனத்திற்கு ஒரு அரசியல் கருத்தியல் உண்டு. அது அரசாங்கம் சார்பாகவோ எதிர்க்கட்சி சார்பாகவோ அல்லது வேறு தரப்பிற்கு சார்பாகவோ இருக்கலாம். இந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களுக்கும் தாம் நினைக்கும் செய்தியை வெளியிட முடியாது" என்கிறார் கலாநிதி ஜெஹான் பெரேரரா .

"ஊடக நிறுவனங்களின் அரசியல் நோக்கு வெவ்வேறானவை. அந்த அரசியல் ரீதியான பார்வை ஊடாகத்தான் பல செய்திகள் அறிக்கையிடப்படுகின்றன' என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் சர்வதேச ஊடக ஒத்துழைப்பு மையத்தின் ஆசிய பிராந்திய ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரங்க கலன்சூரிய குறிப்பிட்டார்.

அடுத்ததாக சந்தை நோக்குநிலை இதில் தாக்கம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதாவது தமது பத்திரிகையை யார் வாங்குகின்றனர் என்பதை இலக்கு வைத்தும் இவ்வாறு எழுதப்படுவதாக குறிப்பிட்ட ரங்க கலன்சூரிய, இப்படி எதை நோக்கமாக வைத்து எழுதினாலும் இந்த இரண்டு கோணங்களும் கோட்பாட்டளவில் பிழை என அவர் சுட்டிக்காட்டினார்.

"ஊடக நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களின் பொறுப்புகள் மற்றும் சுய ஒழுக்க விதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஊடக ஒழுக்கக்கோவை தயாரிக்கப்பட்டு இதனை நடைமுறைப்படுத்த மற்றும் ஒழுங்கமைக்க 2003இல் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவும் நிறுவப்பட்டது. பத்தரிகை நிறுவனங்களில் அவர்கள் பின்பற்றும் வகையில் ஒழுக்கக் கோவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனினும், அரசியல் மற்றும் பொருளாதார நோக்குநிலைகள் குறிப்பிட்ட ஊடக உள்ளீடுகளில் பிரதிபலிக்கின்றன. எமது நாட்டில் அச்சு ஊடகங்களை நெறிப்படுத்த பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு இருக்கின்றபோதும் இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. இதற்கு என்ன காரணம்" என வினவிய போது "பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு செயல்திறன் இல்லாமல் உள்ளது. அதனை செயல்திறனாக்க வேண்டுமாயின் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இதனை சீர்படுத்த முடியாது" என்றார்.

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு அதிகாரியும் இலங்கை பத்திரிகை பேரவையின் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஒருங்கிணைப்பாளருமான கமல் லியனாராய்ச்சி, 'ஒரு சம்பவம் தொடர்பான அறிக்கையிடலின் போது இனத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், நாளாந்த செய்திகளில் சில சந்தர்ப்பங்களில் இனத்தை அடையாளப்படுத்துவதை நாம் காணலாம். நாம் உண்மையின் பக்கம் சார்ந்து அறிக்கையிடுகையில், எமது நிறுவனம் அல்லது தனிப்பட்ட சிந்தனையை அடிப்படையாக கொண்டு செய்தி அறிக்கையிட  முடியாது. உணர்வுரீதியாக மக்களை தூண்டிவிடும் போது பல்லின சமூகம் வாழும் ஒரு நாட்டில் அவை முரண்பாடுகளை மேலும் அதிகரிக்கின்றன என்ற விடயத்தை ஊடக நிறுவனங்களாக இருந்தாலும் ஊடகவியலாளர்களாக இருந்தாலும் அவதானிப்பது அவசியம். டிஜிட்டல் ஊடகங்களின் அபரிதமான வளர்ச்சியிலும் கூட, பத்திரிகைளுக்கான மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கின்றமைக்கு மக்கள் அச்செய்திகளை நம்புவதே காரணமாகும். பத்திரிகை செய்திகளில் நம்பகத்தன்மை அதிகம் என்ற உணர்வு மக்கள் மத்தியில் இருக்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில், அச்செய்திகளை வக்கிர சிந்தனையுடன் சித்தரித்து பிளவுகளை உருவாக்குவது ஊடகவியலுக்கு ஆரோக்கியமானதல்ல' என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி